வாழ்தல் இனிது
வாழ்தல் இனிது
ஆறாமறிவுடன் மண்ணி லுதித்தோம்
ஆற்றல் கொண்டவர் நாமானோம்
ஏறுமுகத்தில் வாழ்க்கை
என்றால்
இன்பம் சூழ வாழுகின்றோம்..!
இறங்கு முகமெனும்
இருளுமுண்டு
இன்னல் பேய்கள்
எதிர்க்குந் திரண்டு
நிறைத்திடு மனதில்
நம்பிக்கை பலமாய்
நெடிய துன்பத்தை
உடைத்திடும் பொடியாய்..!
முயற்சிக ளிங்கே
ஏணிப் படிகள்
முன்னேறு உழைப்பில்
முற்றத்தில் விடியல்..
இயன்ற வரையில்
வியர்வை சிந்து
இனிய வாழ்க்கை
சூழும் உவந்து..!
நேர்வழி சென்றால்
பாதைகள் முள்ளாம்
நிறைமதி கொண்டு
அவ்வழி வெல்வாய்
பாரினில் நம்மைப்
பலதுயர் வளைக்கும்
பலமுடன் அதைமுறி
நல்லின்பம் நிலைக்கும்..!
பிறப்பினை யறியோம்
இறப்பினை யறியோம்
முறைப்படி வாழ்வோம்
இடையினில் வாழ்வை
ஒற்றைக் குடும்பம்
உறவுகள் பலவாம்
உல்லாச மதிகம்
உடன்வளர் பலமாம்..!
பொல்லா உறவுகள்
விலகி நடப்பாய்
இல்லை எனுஞ்சொல்
என்பதை விடுப்பாய்..!
வல்லோன் நிலையில்
வாட்டங்கள் உடைப்பாய்
நல்லோர் நாடி
நன்மைகள் படைப்பாய்..!
வரவுக்குள் வாழ்க்கை
வாழ்ந்திடப் பழகு
வரவினில் சிறுபணம்
வங்கியில் இடுயிடு
வரையறை செயல்களை
வாழவே எளிதாய்
வரந்தருங் காலம்
வறுமைகள் பிரிவாய்..!
காதல் கொள்வாய்
கண்கவர்த் தோட்டம்
போதை தரு(ம்) மிகு
பூக்களின் கூட்டம்..!
இயற்கைக் கொஞ்சும்
எழில்மிகு உலகம்
வியக்கும் வண்ணம்
விருந்துகள் படைக்கும்..!
நீள்கட லழைக்கும்
அலைக்கரம் நீட்டி
கேளதன் ராகம்
குளிர்ச்சிக ளீட்டி
பாதங்கள் நனைப்பாய்
பாலலைத் தொட்டு
காதினி லினிக்கும்
அலைகளின் மெட்டு..!
முடிவிலா வானில்
முகில்கள் அழகு
மூடு பனியின்
பொழிவுக ளழகு
மார்கழிப் பனியில்
நடையினைப் பழகு
பார்வையுங் குளிரும்
இயற்கையை உணரு..!
காசினி இதனுள்
கண்கவர் இயற்கை
காசின்றிக் களிப்பாய்
கடவுளின் படைப்பை
இன்புற வாழ்வில்
இன்னமும் உண்டு
இனிய உலகினில்
இருந்திடு மகிழ்ந்து..!
இதயத்தில் நிறைப்பாய்
என்றும் அன்பை
முதுமைக்கும் உறவுகள்
போற்றிடு முன்னை
உலகினில் இனிதாய்
வாழ்தல் எளிதாம்
உலவிடு மதியுடன்
உணர்ந்தால் ஒளிதான்..!
#சொ.சாந்தி

