போதிமரச் சாரலில்

விழுந்தால் உடனே
எழுந்துவிடு!
உன் முதுகின் மேல்
நடைப்பயில
நெடுங்கூட்டமே
காத்திருக்கிறது!
விழுதலெது?
வீழ்ச்சியெது?
நிர்ணயிக்க வேண்டியது
உன் கால்கள்தானேதவிர
மற்றவர் நாவல்ல...!
பிடித்த ஒன்றிற்காய்
உலகை நேசிக்காதே!
பிடிக்காத ஒன்றிற்காய்
உலகை நீ
வெறுக்காதே!
இரண்டும் வாழ்வின்
ஒரு கோணம் மட்டுமே...!
வீண் வாதம் தவிர்த்திடு!
வென்றவனின்
வெற்றுக்கூச்சல்
ரகசியமாகுமிங்கு
தோற்றவனின்
அவதிகள் வெறும்
பரிகசிப்பே!
எனவே,
வெல்லும்வரை
பேச்சை குறை!
வாழ்வில் அடிப்பட்டால்
ஓவென அலறாதே!
ஏனெனில்,
மாற்றானின் செவிகளில்
அது வெறும்
அபசகுணமே!
வலிகளை
சேமித்திட பழகு!
வாய்ப்புகளை காசாக்கு!
தவறான வழியில்
அடையும்
ஆயிரம் வெற்றிகளைவிட
உண்மை வழியில்
அடையும்
ஒரு தோல்வி
உன்னதமானது!
ஆகவே,
நேரிய தோல்விக்காய்
பெருமைப்படு!
எதையும் போதிக்க
துவங்கும்முன்
செயற்திட்டத்தை
உன்னிலிருந்து
துவங்கிடு!
ஏனெனில்,
வாய் வீச்சாளர்களை
என்றுமே சமூகம்
அங்கீகரித்ததில்லை!
நெருப்பென்றால்
சுடுவது போல்
தீமையொருநாள்
தீங்கே செய்யுமென்பதை
நினைவில் வை!
கெட்ட பின்பு
ஞானியாவதெல்லாம்
பத்தாம் பசலி வாதமே!
உன்னைப் பற்றிய
மற்றவரின் மதிப்பீட்டைவிட
உன்னைப் பற்றி
உன் மதிப்பீடே
உன் வாழ்வைத்
தீர்மானிக்கும்!
ஆதலின்,
சுய முன்னேற்றம்
அளவிடு!
வெற்றியில்
கைகுலுக்கும் ஆயிரம்
உறவுகளைவிட
தோல்வியில் தோள்தரும்
ஒற்றை இதயம்
உன்னதமானது!
எதற்காகவும்
அதை விட்டுவிடாதே!
நிகழ் காலத்தின்
செயல் விளைவே
எதிர்காலத்தின்
அஸ்த்திவாரம்!
ஆகவே,
கடந்தவற்றிற்காய்
கண்ணீர் சொரிவதைவிட
நிகழ்காலம் திட்டமிடு!
கண்ணாடி முன் நின்று
புறத்தோடு சேர்த்து
அகத்தையும்
பரிசோதித்து கொள்!
பொய்யுரையா
மெய் நண்பன்
அதுவேதான்!
நான்கு பேரை
இழந்திடச் செய்யும்
கர்வத்தைவிட
இரண்டு மனங்களை
வென்றெடுக்க உதவும்
விட்டுக்கொடுத்தல் மேல்!
தற்புகழ்ச்சி குறை!
சொந்த செலவில்
சூனியம்
வைத்தலென்பது
அதுவேதான்!
வைரக் கற்களைவிட
வியர்வைத் துளிகள்
மகத்துவமானவை!
ஆதலால்,
வியர்வை சிந்த
வருந்தாதே!
வியர்வை நதி
நீந்தி கடக்காதவன்
வெற்றி மீன் பிடிப்பது
இயலாதவொன்று!
கால வெள்ளத்தில்
நீந்திடப் பழகு!
அறிவெனப்படுவது
சமயோசிதமே!
"திருப்பதி சென்று
சீப்பு விற்காதே!
பஞ்சாப் சென்று
சவரக் கத்தி விற்காதே!"
புறங்கூறுவோரை
நினைத்து நீ புலம்பி
தவிக்காதே!
ஏனெனில்,
பறை வாயை
யாராலும் அடைக்க
முடியாது!
மகிழ்ச்சியின் காரணம்
மனம்தான்...
பணமில்லை!
எளிமையில்
திருப்தி கொள்!
இலட்சங் கோடிகளைவிட
இலட்சியங்கள் உயர்ந்தவை!
இன்றைய தேவைக்காய்
இலட்சியத்தை இழக்காதே!
பொன்மொழிகளை
தோற்றவன்வாய் கேட்டறி!
அவையே
உண்மையானவை!
விலையாக்க
முடியாவிட்டாலும்
கண்ணீர்த்துளிகள்
பெரும்பேறுடையவை!
தகுதியற்றோருக்காய்
அதை செலவழிக்காதே!
அன்பின் வழியென்றும்
வேதனைகளையே
கொண்டுவரும்!
அதற்காய்
அன்பை கைவிடாதே!
எண்ண ஓட்டங்களே
விண்ணை திறப்பதற்கான
திறவுகோல்!
சிந்தையை சீர் செய்!
புற அழகில் மயங்காதே!
வானவில்லின் வாழ்நாள்
சில நொடிகளே!
தோற்றோமென்பதைவிட
இன்னும் முயலவில்லை
என்பதே
அவமானகரமானது!
முயற்ச்சிகளை
முடுக்கிடு!
வானை வசமாக்க
வீண் கனவு காணாதே!
வாழ்வை வசமாக்கும்
நெடுவழியில்
துவலாதே!!!
***********************

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (26-Jun-16, 6:39 pm)
பார்வை : 587

மேலே