பொன்மலை

பொன்மலை ..

பொன்மலை வீட்டு வாயிலில் வந்து நின்றுகொண்டிருந்தான். அவனது கண்கள் தெருவில் நிலைத்திருக்க, தெருக்கோடியில் இருந்த விளக்கின் ஒளியில் நீண்டதொரு நிழல் தென்பட்டது. வருவது அவளாகத் தானிருக்குமென்று நினைத்தபொழுதில், ஒரு உருவம் பொன்மலை வசிக்கும் குறுக்குச் சந்திற்குள் நுழையாமல் நேராகச் சென்றுவிட, அவன் மனதில் ஒருவிதக் கவலை படரத்தொடங்கியது.

கால் முட்டு மறைக்குமளவிற்கு அணிந்திருந்த நிக்கர் பாக்கட்டில் இருந்து சிகரெட் பெட்டியையும் கேஸ் லைட்டரையும் எடுத்து வாயில் சிகரெட் வைத்து அதை பற்றவைத்துக் கொண்டான். குபுகுவென்று வாயிலிருந்து புகை வெளியேறியது.

மீண்டும் அவன் கண்கள் தெருவோரம் செல்லவும், தொலைவில் ஆட்டோ வரும் சத்தம் கேட்க, நிச்சயம் அவள் தான் ஆட்டோவில் இருப்பாள் என்று நினைத்தான். ஆட்டோ அவன் வசிக்கும் குறுக்குத் தெருவில் நுழைந்தது. அருகில் ஆட்டோ வந்ததும் ஆட்டோவில் இருப்பவர் யாரென்று அறிந்துகொள்ளும் ஆவலில் உற்றுநோக்க, அதில் அவன் எதிர்பார்த்த நபர் இல்லை.

பொன்மலை வசிக்கும் வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளி வசிக்கும் ஏழுமலையும் அவரது மனைவியும் ஆட்டோவிலிருந்து இறங்கி பொன்மலை நின்றுகொண்டிருப்பதை அறியாமலே அவரது இல்லத்திற்குள் பிரவேசித்தனர். பொன்மலைக்கு ஏழுமலை, அவரது மனைவி இரண்டு பேர்களையும் கண்டாலே பிடிக்காது. காரணம் என்னவென்றால் வயதான ஏழுமலையின் தாயாரை அவர் மனைவியின் சொல்கேட்டு, முதியோர் இல்லத்தில் சென்று விட்டது மட்டுமல்லாமல், ரேஷனில் மண்ணெண்ணெய் மலிவு விலையில் வாங்கி, அதிகவிலையில் கடைகளில் விற்றுவிடுவது தான்.

சற்று நேரம் கழிந்து தெருக்கோடியில் ஒரு ஸ்கூட்டர் வருவது தெரிந்தது. ஸ்கூட்டர் அவர் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து இளவயது பெண்ணொருத்தி இறங்கி, "சாரி சார் .. கொஞ்சம் லேட்டாகி விட்டது. திடீரென மழை பெய்ததால் வழியில் சற்று நேரம் ஒதுங்கியிருக்க நேரிட்டு விட்டது என்று சொல்லவும், "பரவாயில்லம்மா .. உன் ட்ரெஸ்ஸெல்லாம் ஈரமாயிருக்கே. ஸ்கூட்டரை அதோ அந்தப் பக்கமா நிறுத்திவைத்து விட்டு வேகம் உள்ளே வா" என்று சொல்லிவிட்டு செல்லவும், வந்தவள் ஸ்கூட்டரை நிறுத்திவைத்து விட்டு, பொன்மலையின் வீட்டிற்குள் அவர்பின் பிரவேசித்தாள்.

பொன்மலை ஒரு டவலும் கூடவே அவரது மனைவியின் ஒரு சேலையும் கொண்டுவந்து அவளிடம் கொடுத்து, அங்கு போய் ஈரத்தை துடைத்துக்கொள் என்று சொல்லி, அருகில் இருக்கும் ஒரு அறையை காண்பித்தார். என்னிடம் வேறு உடை இருக்கிறது சார் .. புடவை வேண்டாம்" என்று சொல்லி டவல் மட்டும் பெற்றுக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள்.
அந்த அறையை ஒட்டினாற்போல் இருந்த மற்றொரு அறையில் ஒரு வயதான பெண்மணி கட்டிலில் படுத்திருந்தாள். ஒட்டி உணங்கி இருந்தது அந்த மூதாட்டியின் தேகம். அவளருகில் அமர்ந்திருந்தாள் பொன்மலையின் மனைவி கற்பகம்.

அந்த வயதான பெண்மணி தான் பொன்மலையின் தாயார். என்பது வயதைக் கடந்து விட்ட பொன்மலையின் தாயார் பார்க்கின்சன்ஸ் எனப்படும் நோயால் பாதிக்கப் பட்டிருக்க, இரவு நேரங்களில் அவளுடன் இருக்க ஒரு பணிப்பெண்ணுக்கு அவர் நாளேடுகளில் விளம்பரம் செய்திருந்தார். பகல் நேரங்களில் அவரது மனைவி கற்பகம், வீட்டு வேலைகள் எல்லாம் செய்து இரவிலும் ஓய்வின்றி இருப்பதைக் கண்டு அவர் மனம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தமையால், பகலும் இரவும் பெற்ற தாய்க்கு சேவை செய்வதற்கு தனித்தனியே இருவரை நியமித்துக் கொள்ளலாம் என்று மனைவியிடம் தெரிவித்த போது, அதற்கு அதிகமாக பணம் தேவைப்படும். உங்களுக்கு கிடைக்கும் மாத வருமானத்திற்கு அது கட்டுப்பட்டு வராது. எனவே, இரவில் மட்டும் தாயைக் கவனித்துக்கொள்ள ஒருவரை பணியமர்த்திக் கொண்டால் போதுமென்று சொல்லிவிட்டாள். வந்த பணிப்பெண் மாலை எட்டு மணிமுதல் காலை எட்டு மணி வரை பொன்மலையின் தாயாரை கவனித்துக்கொள்ளவேண்டும் என்பது தான் நிபந்தனை. அதற்காக பொன்மலை கொடுக்கும் ஊதியம் மாதம் பத்தாயிரம் ரூபாய்.

கற்பகத்திற்கு இனியாவது இரவில் சற்று ஓய்வு கிட்டுமென்று பொன்மலை நிம்மதி பெருமூச்சு விட்டான்.

மூன்று மாதங்கள் பிறகு ..

ஒருநாள் பொன்மலையின் தாயார் கண்களில் வற்றா நதிபோல் கண்ணீர் சிந்தக் கண்டு, தாயின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, "ஏன் அழுகிறீர்கள் அம்மா" என்று மீண்டும் மீண்டும் கேட்க, நாலைந்து வருடங்களாக பேசாதிருந்த அவன் தாயார், வாய் திறந்து, ஏதோ சொல்ல நினைக்கிறாள் என்பதை யூகித்துக்கொண்டான். அணையும் முன் விளக்கு சுடர் விட்டுப் பிரகாசிக்கும் என்பதைப்போல அவன் தாயாரின் முகத்தில் திடீரென ஒரு ஒளி தோன்றுவதை பொன்மலை கண்டுகொண்டான். "ஏதோ என்னிடம் சொல்லவேண்டுமென்று நினைப்பதுபோல் தெரிகிறது. என்னெவென்று சொல்லம்மா" என்று கண்ணில் நீர் தழும்ப அவன் கேட்டபோது, அவன் தாயார் மெல்லிய குரலில், "இன்னொரு பிறவி எனக்கிருந்தால் நீயே மகனாக என் வயிற்றில் பிறக்கவேண்டும்" என்று சொல்லி சூம்பிப்போயிருந்த அவளது இடது கையை மெதுவாக உயர்த்தி, பொன்மலையின் தலையில் ஆசிர்வதிப்பதுபோல் வைக்கவும் பொன்மலையின் தாய் உயிர் பிரிந்தது.

பெற்றால் தான் பிள்ளை என்றில்லை !

எழுதியவர் : (26-Jun-16, 8:07 pm)
Tanglish : ponmalai
பார்வை : 197

மேலே