இஞ்சி சேர்ந்த தாளித்த மோர் அற்புதச் செரிமானப் பானம்

கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது.

இயற்கையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க வணிகப் பானங்களால் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வேனிற் காலத்தில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதோடு பல ஆரோக்கியப் பலன்களையும் தருகிறது.

குறுந்தொகையில்…

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து மகிழ்வித்ததாகக் குறிப்பிடுகிறது. மோரானது பானமாக மட்டுமன்றி, பண்டைய காலம் முதல் சமையலிலும் முக்கிய இடம்பெற்று உடலைச் சீராக்கியுள்ளது. நமது வாழ்வோடு பயணித்த மோரின் சிறப்புகளைப் பார்ப்போம்:

செரிமானப் பாதை சீராக🐂

உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் காரணங்கள் பல. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வேனிற் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு – குடல் சார்ந்த உபாதைகளை மோர் சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்ந்த தாளித்த மோர், பல குடும்பங்களில் இன்றும் இடம்பெறும் அற்புதச் செரிமானப் பானம்.

மருந்தாகும்மோர்🐄

கலோரிகள் நிறைந்த செயற்கை பானங்களுக்கு நடுவில், கலோரிகள் குறைந்த மோரானது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து. மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்திவருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும். கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது. தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், நோய் விரைவில் குணமடையும். வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறுமாம்💧

- 🌿ஷங்கர்குரு🌿

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (27-Jun-16, 9:33 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 40

மேலே