சுகம் சுகமே

வானம் பொழிந்தால்
வாழும்...
பொய்த்தால் வீழும்...
பொட்டல் காடாய்
எம் வாழ்வு!
நீர் பட்டால் துளிர்க்கும்...
இன்றேல் இறக்கும்...
பச்சை தளிராய்
எம் வாழ்வு!
தூக்கும் துக்கமும்
இடும் போட்டி
தூக்கம்
இடைவெளி நிரப்பிடுது!
பண கொட்டமடித்திடும்
பெருங்குடியே!
எம் பட்டினி
தீர்வதெப்போது?
ஒன்பதாயிரம் கோடி
பத்தாயிரம் கோடி
ஏய்த்த வழக்கில்லை!
வாங்கிடும்
ஒன்பதாயிரம்
பத்தாயிரம்
கடனதிலும்
பைசா பாக்கியில்லை!
நாமம் போடும்
பெருந்தொழிற்
முதலைகள்
மறுகை அரசே
நீட்டிடுது!
வயிறு நிறைக்கும்
புண்ணிய தொழிலிதை
மானியந்தானே
நடத்திடுது!
இடக்கை வாங்கி
வலக்கை விற்கிறான்
உருப்படி
இருபது இலாபம்
அவனுரிமை!
சேறாய்
இரண்டற கலந்து
வெயிலில் துவண்டு
பஞ்சம் பிழைத்து
கிடக்கிறோம்!
என்றகலும் எம்
வறுமை?!
பங்குச்சந்தை முதலீடு
பரவும் தொழிற்
மேம்பாடு
எதுவும் எமக்குத்
தெரியாது!
வாங்கிய வட்டி
கழுத்தை நெறிக்க
தூக்கு கயிற்றில்
உழவனிறக்க
எங்குடி கதறிடும்
குரலது
வாசற் தாண்டியும்
கேட்காது!
சாணத்தில் குப்பையில்
பயிர் விளைத்தோம்
இரசாயனம் தந்தவர்
யாரிங்கே?
மண்புழு கூட்டம்
மரிக்கவிட்டு
மண்ணின் தரம்
கெடுத்துவிட்டு
''மீண்டும் திரும்படா
மரபென!...''
முழங்குது பார்
குரலங்கே!
வியர்வையும் வெப்பமும்
பெரும்பகுதி
குளிர்வதிங்கே
கொஞ்சம்தான்!
கடனும் கண்ணீரும்
எம் தொகுதி!
பொய்த்தால் வாழ்க்கை
கந்தல்தான்!
இடித்துப் பொழியும்
மார்கழி வானாய்
என்றேனும் பிறந்திடும்
சிறு நகைப்பு!
மாதம் மூன்று
கடந்த பின்னே
சற்றே மீளும்
எம் பிழைப்பு!
முதல்
இன்று போட்டு
நாளையெடுக்க
இலாபத் தொழிலில்லை!
அரிசி
இணையத்தில்
தரவிறக்கமாகாது
வேறு வழியில்லை!
சுகர்,பிரஷர்
எதுவுமில்லை
உழைப்பில் கறுத்த
எம்மிடமே!
வெந்ததை தின்று
வந்ததை ஏற்று
வாழும் வாழ்விதும்
சுகம்! சுகமே!!

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (11-Jul-16, 7:36 pm)
Tanglish : sugam sugame
பார்வை : 533

மேலே