இடிச்சுச் சொல்ற ஆலோசகர்கள் வரணும்
மேல் லோகம்கிற
தேவ லோகத்தில
ஓர் இரவு!
ஒரு குட்டி தேவதை,
ரொம்பக் குட்டி தேவதை,
ரேணு! ரேணு! ன்னு பேராம்!
குட்டியா இருக்கேலயே
அதுக்கு தூக்கத்திலே
நடக்குற வியாதியாம்,
சொர்க்கத்திலே ஒரு
பனிக்காலத்து இரவு,
ஒரே இருட்டாம்!
எல்லா சாமிகளும், மற்ற
பெரிய தேவதைகளும்
நல்லா தூங்கிட்டாங்க!
குட்டி தேவதை தூக்கத்துலேயே
நடந்து போய் சொர்க்கத்தோட
ஓரத்துக்கே வந்துட்டா!
அவ்வளவுதான்,
தொபுக்கட்டீர்னு கீழே
விழுந்துட்டா! அச்சச்சோ!
அங்கே பார்த்தா
நட்சத்திரத்தக் காணோம்,
மேகத்தைக் காணோம்!
குட்டி தேவதை முழிச்சு
கண்ணைக் கசக்கிக்கிட்டு
கண்ணீர் விட்டு அழுகுது!
முழிப்பு வந்த சாமி
தூக்கக் கலக்கத்துலேயே
குனிஞ்சு கீழே பார்த்துச்சு!
கீழே கண்ணீர்த் துளிகள்..!
உடனே ’ஓ.. இது பூமியில்ல!
கொஞ்ச வருசமாவே இதுதான்!
விலைவாசி ஏறிப் போனதால,
ஆண்களெல்லாம் மதுபானம்
குடிச்சு கெட்டுப் போனதால,
மக்களும், பெண்களும்
விடுற கண்ணீர்த்துளின்னு
சொல்லி தூங்கிடுச்சாம்!
அந்தக் காலத்து
ராசாக்களுக்கெல்லாம்
இடிச்சுச் சொன்ன மாதிரி!
அரசாங்கத்துக்கு இடிச்சுச்
சொல்ற ஆலோசகர்கள்
மந்திரிங்கள் வரணும்!
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும். 448.
பெரியாரைத் துணைக்கோடல்
குறிப்பு:
குட்டித் தேவதை
என்னாச்சுன்னு நீங்க
கேக்குறது என் காதுல விழுது!
குட்டித் தேவதை எப்படியோ
வழி தெரிஞ்சு காலையிலே
அவங்க அம்மாகிட்ட போயிருச்சு!
மேசை தட்டிகளும்,
தலையாட்டிக் பொம்மைகளும்,
ஆமாஞ் சாமிகளும் தேவையில்லை;
இடிச்சுச்
சொல்ற ஆலோசகர்கள்
வரணும்!

