பருவத்தே பயிர் செய்

பருவமழை பொழிகையில்
பனம்பழம்தான் கிடைத்திடுமோ..?
வருடம்முழுதும் வீதியில்
வான்மழையும் பொழிந்திடுமோ..?
இயற்கையில் பருவம்
இயல்பாய் இருக்கும்..!
இயல்பினைக் குலைத்தால்
குரல்வளை இறுக்கும்..!
செயல்வீரன் ஆயினும்
பருவம் அறியேல்
புயல்காற்றிடை சிக்கிய
பொறியென மறைவான்..!
குழந்தையின் குறும்புதான்
இளமையில் உலவிடுமோ..?
இளைஞனின் வேகம்தான்
முதுமையில் புலப்படுமோ..?
பருவத்தின் பல்சுவையை
தெருவில்தேடி பலனில்லை..!
கடக்கையில் ருசித்திடேல்
காலத்திற்கு மதிப்பில்லை…!
கூன்முதுகு கிழவியிடம்
குறும்புக்காரன் கேட்டான்..!
“குனிந்து தேடுவது
எதைதான்..?” என்று...
குறுநகை விரவ
கூறினாள் கிழவி...
“தொலைத்து விட்ட என்
இளமையை” என்று..!
இருட்டிலே தொலைத்த
இரும்பினைப் போல
இளமையைத் தொலைத்து
முதுமையில் முனகல்
பருவத்தே பயிர்
செய்யாததன் விளைவு..!
வெள்ளாடை வேந்தரின்
விரிந்த நல்மனமும்
திரிந்த கொள்கையும்
தேர்தலில் உலவல்
பருவத்தே செய்ய்யும்
பயிரின் மாதிரி..!
வற்றிய குளத்திலும்
வெள்ளம் வந்திடும்..!
தொற்றிடும் தீவிரம்
தேர்தலின் பொழுது
வளமான மீன்களை
வசமாக்கி விடவே
பருவத்தே செய்த
பயிர்தான் அவை..!