பிறப்பில் ஊனம் நான் ​​

பிறப்பில் ஊனம் நான்
பெற்றவர்கள் கல்லறையில்
தனிமையில் நான்இங்கே ......

பிறக்கும்வரை அறியாத குறை
பிறந்தபின் அழாத குறை
பிறப்பாலே ஊனம் இருந்தால் ...

ஊனத்தை ஒதுக்கிடும் சமூகம்
இதயமே இல்லாத சமுதாயம்
உணர்ந்தால் உண்மை புரியும் ...

உடன் பிறந்தவர் ஆனாலும்
ஊனம் இருந்திட்டால்
வெறுக்கும் உள்ளங்கள் அதிகமிங்கு ....

உரைகள் நிகழ்த்துவர் ஊரெங்கும்
உதவிடுக ஊனம் உள்ளோர்க்கென
சொல்லும் செயலும் மாறுபடும் இங்கு ....

ஊனம் ஒன்றே பிரிக்குது எனை
ஊரார் விழிகளுக்கு நான் உயிரல்ல
உலகிற்கு நான் மனித உருவமல்ல ....

இயற்கையின் கூற்றே இக்கொடுமை
இதயமிருந்தும் மறப்பதும் ஏனோ
ஈரமிலா இதயங்களே சிந்திப்பீர் .....

உண்டுக் கொழுப்பவரும் உள்ளாரே
ஊனம் உள்ளோரும் உழைப்பாரே
காண்பவர் இதனை அறிவீரே ....

ஒதுக்கீடும் உண்டு எங்களுக்கென்று
ஒதுக்குவதை ஒதுக்கினால் வாழ்வுண்டு
புரிந்தவர் புன்னகையும் செய்திடுவீர் ...

உதவிடும் நெஞ்சமோ ஒன்றிரண்டு
உதறிடும் உள்ளங்களோ பலநூறு
உண்மையைக் கூறினால் அவதூறு ....

மாறிடுமா சமுதாயம் இனியேனும்
தேறிடுமா இனிஎங்கள் வாழ்வும்
ஊறிடுமா உங்கள் உள்ளத்தில் ...

மண்ணுக்குக் கீழேதான் இறுதியில்
பொன்னுக்கும் பொருளுக்கும் பூமியில்
இடையினில் போராடுவதே வாழ்க்கை ....!

உணர்ந்தவரும்
ஒதுக்குவது ஏன் ...
உறவுகளும் என்னை
ஒதுக்கியது ஏன் ​.....

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-Aug-16, 8:36 am)
பார்வை : 407

மேலே