நிற்பது வீழும் நகர்வது வாழும்
சமுதாயம் சீர்கெட்டுள்ளதாய்
வீண்பேச்சுப் பேசும்
கயவர்கள் சொல்லைக் கேளாதிரு
சமுதாயம் என்பதன்
அங்கமே நீதான்
உன்னிலிருந்தே உருவாகும் மாற்றம்
உள்ளத்தில் தோன்றும்
எண்ணங்கள்தான் உன்னை
கயவனாகவோ கடவுளாகவோ மாற்றும்
நல்நூல்களைக் கையிலெடு
உன்னுள்ளக் கசடகற்றி
மனிதப் பண்பை வளர்த்தெடு
அறியாமை சினம்
பொறாமை பகட்டை
விட்டொழித்தே வாழ்வை சீராக்கு
காலத்தைப் பாடாத
கவிஞனும் உண்டா
மழைபோல்நீ இதையும் வீணடிப்பதா
வாழும் காலமிது
அண்டத்திலோர் நொடிப்பொழுதே
பயன்படுத்தத் தெரிந்தவனே தலைவனாகிறான்
தோல்விக்குப் பின்னான
வெற்றியுந்தன் வீரியங்காட்டும்
விதைக்குமுன் உழுதல் பண்படுத்துதலாகும்
தோல்வியை ஏற்கும்
உள்ளத் தெளிவே
வெற்றியை அடையும் வாயிலாகிறது
உழைப்பில் உண்மையும்
சொல்லில் நேர்மையுமிருந்தால்
உலகமுமோர்னாள் உனைப் பார்க்கும்
உடலினை வலுவாக்கி
உள்ளத்தைப் பண்படுத்தி
நில்லாதோடு இலக்கை நோக்கி
நிற்கும் மரமும்
சக்கரமாய் மாறியதிலிருந்தே
மனிதப் பண்பாடு வளர்ந்தது
நீ மரமா
இல்லை சக்கரமா
ஏனெனில் இங்கு
நிற்பது வீழும் நகர்வது வாழும்
- கிரி பாரதி.