நாங்கள் வெறும் வாசமல்ல தீர்ந்து போய்விட
செல்லும் இடமெல்லாம்
வீசுகிறது பிண வாடை..!
இதோ இவ்விடத்தில் தான்
பத்தியம் இருந்து பெற்ற
என் பிஞ்சு குழந்தையின்
பச்சை உடல் சிதறிக் கிடந்தது..!
அதோ அவ்விடத்தில் தான்
எங்கோ இருந்து கொண்டு வரப்பட்ட
என் சகோதரிகளின்
ஆடைகள் அற்ற உடல்கள் கிடத்தப் பட்டிருந்தன ..!
அங்கொன்றும் இங்கொன்றும் அல்ல ..!
எங்கெங்கும் சிதறிக் கிடந்தன
என் சகோதரர்களின் உடல்கள்..!
இங்கே ஒவ்வொரு பூவிலிருந்தும்
வீசுகின்றது
பிண வாடை..!
அழகாய் பூத்திருக்கும் இந்த ரத்த நிற ரோஜாக்கள்
நினைவு படுத்துகின்றன
குழந்தைகளின் புன் சிரிப்பையும் , கூடவே
அவற்றின் மரித்துப் போன உடல்களையும்..!
எங்கள் தமிழின உடல்களை புதைத்த
அத்தனை இடங்களிலும்
அதன் அகோரத்தை மறைக்க
பூந்தோட்டங்களையும்
இன்ன பிறவற்றினையும்
நீங்கள் அமைத்து விடலாம்..!
பூக்களின் வாசத்தாலோ
இன்ன பிறவற்றினாலோ
எளிதில் மறைத்து விட முடியாது
பிண வாடையை..!
நாங்கள் வெறும் வாசமல்ல
தீர்ந்து போய்விட...!