வெட்கம் விற்பனைக்கில்லை - பருவம் 02

வெட்கம் விற்பனைக்கில்லை
=========================

நான் எட்டாங்கிளாஸ் படிக்கிறப்போதான்
உன்னை பார்த்தேன்
அதுவும் ஜன்னல் வழியா
நீ எங்க ஏரியாவுக்கு
அப்போதான் புதுசா வந்திருக்க.
எங்கம்மா கிட்ட
குடிக்க தண்ணி கிடைக்குமா ன்னு கேட்டப்போ
உன் குரல் அவ்ளோ அழகா இருந்துச்சு.
முதுகுப்புறமா குனிஞ்சு
முகம் கழுவிய உன்னை
அப்போ நா சரியா பாக்கல.
ஆனா நீ அங்கிருந்து போனபின்னால
கண்ணாடியைப் பார்த்தேன்.
வழக்கம் போல
முகப்பருக்கள் இருந்தாலும்
ஏனோ தெரியல
அன்னைக்குப் பூறா நான் அழகா இருந்தேன்.
அது பிடிச்சிருந்திச்சிடா.
அதுதான் வெட்கமா ன்னு எனக்கு சரியா தெரியல.

எங்க வீட்ல இருந்து
ஒரு ஆறு வீடு தள்ளித்தான்
தற்போதைய உன் வாடகை வீடு.
என் விசேஷத்துக்கு
எங்க வீட்டாளுங்க
உன்னை கூப்பிட்டிருந்தாங்க
நீ அவ்ளோ யாரோடும் புழங்காதனாலே
அப்போ வரல.
ஆனா ராத்திரி நீ பரிசோட வந்த.
உன் குரல் கேட்டதும்
என் கையும் காலும் சேக்கையில இல்ல.
பறந்தது மாதிரியே இருந்துச்சு.
அப்போக் கூட
நான் என் அறையை விட்டு
வெளிய வரல.
அடைப்பிடாம மூடிய
கதவிடுக்கு வழியா
லைட் ஓஃப் பண்ணிட்டு
உன்னை பாக்க எவ்ளவோ
முயற்சி பண்ணினேன்
அந்த சோஃபா ல உக்காந்துக்கிட்டிருக்கிற
உன்னோட
கெண்டைக்கால் தெரிஞ்சது.
உனக்கு ரோமம் எவ்ளோ அடர்த்தி.
கீழ விழுந்த எதையோ
நீ எடுக்க சிரமிச்சப்போ
சுத்தியும் முத்தியும் பாக்காத
உன் கண்களோட வீரியத்தை
நான் மட்டும் உத்துப் பார்த்தேன்.
உன் பார்வை
அப்படியொரு வயாக்ரா பாய்ச்சல்.
உதடும் மூக்கும் புடைக்க
மார்புக்காம்புகளுக்கு
அன்னைக்குத்தான்
அப்படி ஒரு கிளர்ச்சி இருக்குன்னு தெரிஞ்சிகிட்டேன்.
நிறைய மூச்சு வாங்கறேன்
சுத்தமா பேச்சு வரல எனக்கு
முகம் பழுத்து இருந்திச்சி
ஒருவேளை இது வெக்கமா இருக்குமோ ?

லீவு முடிஞ்சு ஹாஸ்டல் க்கு போயிட்டேன்.
தினம் உன் பத்தின
கெட்டக் கெட்ட கனவுகள் தான்.
மாசம் ஒருமுறை
வீட்டுக்கு வருவேன்
உனக்கு அப்போல்லாம் திங்கட் கிழமை லீவு.
உன்னை பார்த்ததுல இருந்து
எனக்கு மாசம் ஒரு திங்கட் கிழமை லீவு.
வேறே எதுக்காகவும் இல்ல
நீ கடைக்குப் போற சமயமும்
நான் கடைக்குப் போற சமயமும்
உன் முன்னாடி
தலைகுனிஞ்சுட்டே நான் கடந்துபோக
நீ என்னை புரிஞ்சுக்க மாட்டியா ன்னு நினைப்பேன்.
"பச்சை உடம்புக்காரிக்கு
பால் கட்டு இருப்பதைப்போல
உன் ஏக்கங்களால்
என் சதைப் பிடிப்பு உடையாமே கட்டிக்கிடக்கிறது.
அதுவரை அனுபவமில்லாத
இதெல்லாம்
எவ்ளோ கஷ்டமா இருக்குத் தெரியுமா. ?
இதெல்லாம் சொல்லாமயே
தெரிஞ்சுக்க மாட்டியா ?
காலம் கடந்துக்கிட்டே இருக்கு.
மனசுக்குள்ள இருக்கிற இதமெல்லாம்
பெரும் சுமையா மாறிட்டே இருக்கு.
இப்படியான சந்திப்புகள்
என்னை சிலையாக்கிட்டே இருக்கு.

மாடியில
கைப்பிடி சுவரில் அமர்த்தி
தலைவாரிக்கொண்டே
அம்மா சொன்னாள்.
அதோ போறானே அவனைத்தான் உனக்கு
பேசியிருக்கிறோம் ன்னு.
அது அவன்தான்
மனசும் நெற்றிச் சுட்டும்
தன் இயல்பிழந்து பறந்தது.
அதே மூச்சிரைப்பு
அதே படபடப்பு
என் அறைக்குள்ளார போயி
கதவை சாத்திக்கிட்டு
கொஞ்சநேரம் அதே மூச்சிரைப்போட
சாத்திய கதவோட
சாஞ்சு நின்னுட்டேன்.
சோப்பிடாம முகம் கழுவிட்டு
கண்ணாடி பாக்கலாம் போல இருந்துச்சு.
பார்த்தேன்.
இந்த ததும்பிய வெட்கங்களை
எங்கு சேர்த்துவைக்க.
இதெல்லாமே
அவனால் மட்டுந்தான்.
இதெல்லாமே
அவனுக்கு மட்டுந்தான்.
அவனே வரட்டும்
சிந்தும் வெட்கங்கள் அத்தனையையும்
துளிகூட சிதறாமல் அள்ளிப்போக
அவனே வரட்டும்.
இதே வெட்கத்தோடவே காத்திருக்கேன்.

கடவுளே இதற்கிடையில்
யாரும் என்னை பெண் பார்த்திட
வர வேண்டாமே ப்ளீஸ்.
அப்பக்கூட அவன் முகத்தை
நா சரியாப் பார்க்கல.
ஆனாலும்
இன்னொருத்தருடைய
படத்தைக் காட்டி
நான் பார்த்த
அவனுடைய அரைகுறை
முகத்தை மறக்கடிப்பதுகூட முடியாத ஒண்ணுதான்.
என் இத்தனை வெட்கம் அவனுக்கானதுதான்.
இந்த "வெட்கம் விற்பனைக்கில்லை"

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (7-Jan-25, 8:00 pm)
பார்வை : 40

மேலே