சுதந்திரம் எங்கே, வெறும் தந்திரம் தான் இங்கே
ஒருமைப்பாடு இங்கே எங்கே,
சிறுமைப்பாடு மட்டும் தான்
பெரிய மனிதர்களிடம்
கண்கூடு.
தேசப்பற்றுக்காக
சொத்தை சுகத்தை இழந்த காலம் போய்
சுயநலத்திற்காக கேவலப்பட இங்கே
எத்தனிக்கும் எத்தர்கள் எத்தனை பேர்?
இனம் மதம் சாதி என்பது தான்
இங்கே இணைக்கும் சூட்சுமம்,
நாடு மாநிலம் என்பதெல்லாம்
வாய்ப்பேச்சு அவல், அவ்வளவே.
இலவசம் லஞ்சம் நன்கொடை
இது தான் இந்த நாட்டின் வாழ்க்கைத்தரம்
இறுமாப்படைய எங்களிடம் என்ன உண்டு?
வேலை தேடிய பட்டதாரிகள் இருந்த காலம் மாறி
வேலையில்லா பட்டதாரிகள் இங்கே வீட்டுக்குள் சோம்பேறிகளாய்
வேலைகொடுப்பது தனியார் பொறுப்பென்று தட்டி கழிக்கும் அரசு கூட
கடமைக்கு காட்சிகள் இங்கே நகர்த்தி எங்கும் பகட்டு பகல் வேஷம்
செய்யும் ஒன்றிரண்டு நல்லதுகளுக்கு விளம்பரம் தேடிக்கொண்டு
சாதனைகளை பட்டியலிட வேதனைப்பட்டியல் யாரறிவார்?
தேசபக்தர்கள் இங்கே யாருமில்லை,
வேறு எல்லாவற்றிற்கும் உண்டு,
பணம் புகழ் போதை பந்தா வேதாந்தம்
என்று நாங்கள் கெட்டு குட்டிச்சுவரானோம்.
காந்தி இங்கே வந்து கேள்வி கேட்டால்
பதில் சொல்ல இங்கே நாதியில்லை,
பதவியில் இருப்பவர்கள் மேல் கருத்து சொன்னால்
யோக்கியதை இங்கே இல்லை,
இருப்பவர்களுக்கும் சொல்பவர்களுக்கும்.
மொத்தத்தில் இங்கே
யாருக்கும் வெட்கமில்லை..!
ஏன் நானும் கூடத்தான்,
இதனால் தான் இந்தக்கவிதை
எனக்கு எதுவும் தராத இந்த சுதந்திரமா
எனக்கும் உங்களுக்கும் வேண்டும்?
பேசாமல் அடிமையாகிவிடுவதே மேல்,
எம்மை ஆள நேர்மையும் திராணியும் இருந்தால் சொல்லுங்கள்,
உங்களுக்கு அடிமையாய் வாழ்வதே எங்களுக்கு உத்தமம்.!