அன்புள்ள அப்பா

அப்பா

மூன்றெழுத்தில் முகவரி
உறவுகளின் உள்ளடக்கம்
ஆண்டவனின் ஆத்மா
பேரன்பின் பெயர்சொல்
உன் விந்தில் விதையாகி பிறந்தவன் நான்
உன் வியர்வையில் விருட்ஷமாய் வளர்ந்து நிற்கிறேன்

காலத்தின் காட்சியமைப்பில்
சில தருணங்களில்
முட்களின் இடையே முயல்குட்டியாய்
கற்களின் நடுவே கண்ணாடிதொட்டியாய்
நான் பரிதவித்தேன்
முற்களும் கற்களும்
என்னை கீறியிதாயில்லை
திரும்பி பார்க்கிறேன்
தழும்புகளோடு தகப்பன்
என்னை நேசிப்பதில்
என்னைவிட சுயநலவாதி அப்பா

ஒருவனுக்கும் அடங்காத
என் திமிரு -உன்
ஒத்த பார்வைக்கு
ஒடுங்கி போகுமப்பா
உன் பார்வைகளே சொல்லிவிடும்
என் திமிருக்கும் தகப்பன் நீதானு

திசை மாறி தீவினை பக்கம்
நான் தாவிடும் போதெல்லாம்
இரண்டடி நீ சொல்லும் உபதேசம்
வள்ளுவன்கூட உலகுக்கு வழங்காத திருக்குறளாகும்

மீசை முளைத்த மோகத்தில்
மோட்டார் வண்டிக்கு முரண்டுபிடித்தேன்
உன் ஆசையெல்லாம் கத்தரித்து
என்இறுமாப்புக்கு இருசக்கரம் வாங்கி தந்தாய்

இருப்பதையெல்லாம் எனக்கு கொடுத்துவிடு்ம் இறைவனல்லவா நீ..அப்பா உனக்கு
இயலாமையும் இருக்கும் என்பதை
சொல்லாமல் வளர்த்தாயே

நினைத்ததும் நடத்தனும்
எனும் என்
நவநாகரிக்கு பசிக்கு
நடமாடும் உணவானாயே அப்பா உன் வாழ்க்கையை ஜீரணித்து என் ஜீவன் வளர்கிறது என்பதை சொல்லாமல் வளர்த்தாயே

நீ ஓடியாடி உழைத்து கொண்டிருந்தாய்
எனக்கு சிறகு மாட்டி பறக்க சொன்னாய்
தேடி தேடி சேர்த்த செல்வத்தையெல்லாம்
நான் தியேட்டருக்கும் டீசர்ட்டுக்கும் வாரி இறைக்க வழி செய்தாய்

விதவிதமாய் செருப்பு
என் காலுக்கு
வீதியெல்லாம் விருவிருனு
வேலைசெய்யும் உனக்கு
தேய்ந்தே ஓய்ந்துபோன
காலாவதியான காலணிகள்
பலரகமாய் உடுப்பு என் தேகத்துக்கு
பலஇடங்களில் பணிசெய்து
பணம்பார்க்கும் உனக்கு
நிறம் மங்கிபோனாலும்
மாற்றாத மலிவான ஆடைகள்

ஆளில்லா ஊருக்கு
திருவிழா எதுக்கப்பா
கரிக்கோலாய் நீ கரைந்து என்னை வரைந்தது போதுமப்பா
அம்பாரி நீ சுமந்து
நான் நகர்ந்தது போதுமப்பா
உன் இரத்ததில் ரதம் ஓட்டி
நான் இராஜாவாய்
வலம் வந்தது போதுமப்பா
இனி...

வண்டியின் இரைச்சல்களோடு வாழ்க்கையை நகர்த்திய நீ
மெல்லிசை கேட்கனுமே
பேருந்து பிடிக்க பந்தயம் நடத்திய நீ
பூங்காற்றை ஸ்பரிசிக்கனுமே
இயற்கையின் கவிதையாம் இரவுகளை ரசிக்க மறந்த நீ
நிலவொளியை தரிச்சிக்கனுமே
தஞ்சாவூர் கோபுரமாய் நீ
தலைதூக்கி நடக்கனுமே
நீ விரும்பமாட்டேனு
தெரியும் இருந்தாலும்
நீ ஓய்வில் சாயும் நாற்காலியாய் இனி நானிருக்க விளைகிறேன்

என்னதான் எனக்கென
ஓர் அடையாளம் இருந்தாலும்
இன்னாரின் மகனென்று
ஊரார் உரைத்திடவே
இன்னுயிர் இனிதாய் சிலிர்குதப்பா
இன்னொரு பிறவி எடுத்தாலும்
நான் உனக்கே மகனாய் பிறக்கனுமே
இதற்கு,இறைவா நீ கண் திறக்கனுமே

-இராஜேந்திரன் புவன்

எழுதியவர் : இராஜேந்திரன் புவன் (1-Sep-16, 9:50 pm)
Tanglish : anbulla appa
பார்வை : 496

மேலே