தண்டவாளக் காதல்

நீயும் நானும்
எந்தப் புள்ளியில்
ஒன்றித்துப் போவோம் எனத்
தெரியவில்லை
நீ ஷேகுவராவை பற்றிப்
பேசுகையில்
நான் பிக்காஸோவைப்
பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பேன்

நான் நம்
குடும்பச் சிக்கல்களுக்கு
விடை தேடிக் கொண்டிருக்கையில்
நீ
உலக அரசியலின்
காய் நகர்த்தல்களை
விமர்சித்துக் கொண்டிருப்பாய்
உன்னால் மட்டுமே
பௌர்ணமி பரவிய
கடல் இரவில்
கெபிடலிஸ்ம் பற்றியும்
லிபரல் வாதத்தையும்
எனக்கு
விளங்க வைக்க முடியும்
முன்பெல்லாம்
என் கவலைகள்
இரண்டு மாதமாய் நீரூற்றும்
ரோஜாச் செடி
ஏன் பூக்கவில்லை
என்பதோடு நின்றுவிடும்
ஆனால் இப்போது
அதைத் தாண்டிய உலகம்
காட்டியிருக்கிறாய்
என் மூளை மடிப்புக்களை
கொஞ்சம் புரட்டிப்
போட்டிருக்கிறாய்



உலகின் பார்வையில்
நீ ஒரு
பின்வளை கோணம்
புரட்சிக் கிறுக்கன்
ஹிப்பி
அதீத ஜீனியஸ்
என்னைப் பொறுத்தவரை
எனக்கு நீ எல்லாம்
உன்னைப் புரிந்து கொள்ள
என்னாலான முயற்சியில்
கொஞ்சம்
சைக்காலஜி
கற்றுக் கொண்டிருக்கிறேன்
நீ நீயாகவும்
நான் நானாகவுமான
சுதந்திரப்படுத்தலே
நமக்கிடையில்
சர்வாதிகாரத்தையோ
அடிமைத்தனத்தையோ
ஏற்படுத்தாமல்
சில விடங்களை ஜீவிக்க செய்கிறது
நன்றிகள்
அதிகாரம் செய்யக் கூடிய
இடத்தில்
நீயோ
உரிமை பாராட்டும் நிலையில்
நானோ
இல்லாமல் படைத்த
நம் இறைவனுக்கு

எழுதியவர் : Shafiya (21-Sep-16, 10:50 am)
பார்வை : 80

மேலே