எனக்குள் இருக்கும் பெண்மையைச் சந்தித்தேன்

இதயம் சரியாக இருந்தால்
”நேர்” “எதிர்” வாதங்களை மறந்து விடுவோம் .

ஷீவாங் ட்சூ Chuang Tzu (369 - 268 B.C.)



இரவும் பகலும்
சந்திக்கும் வேளையில் ,

முப்பத்தி மூன்று ஆண்டு ,
என் இளமைப் பிரளயத்தால்
எங்கோவெல்லாம் தேடிய
அந்தப் பெண் முகம் பார்த்தேன் .

ஏறக்குறைய என்னைப்போலவே
இருந்தாள் அவள்.

பௌர்ணமி நாளின் சந்திரன் போல
அவளைப் பார்த்தக் கணத்தில்
என் ஆண்மை சிலிர்த்தது.

இருவரும் பேசவில்லை
வெகு நேரம் உற்றுப் பார்த்திருந்தோம்...
மெல்லிய சிரிப்பைக்கூட
உதிர்க்கவில்லை ...

இத்தனை நாள் தேடிய
என் இன்னொரு பாகத்தை
இங்கே பார்க்கிறேன் என்று
எதுவோ ஒன்று உள்ளுக்குள் உளறியது .


பெண்ணின் மேலிருந்த ஆதிக்க வெறி ,
அடைய நினைக்கும் காதலின் பாசாங்கு,
ஆசை வார்த்தை பேசும்
காமத்தின் சூழ்ச்சி ,

உடல் மேலிருந்த ஈர்ப்பு,
உறுப்புகள் மேலிருந்த ஆசை,
போர்த்தியிருக்கும் உடை மேலிருக்கும்
விமர்சன வேகம் - எல்லாம்

ஓய்ந்து போன
கோடை மழையின்
சிறு வெள்ளம் போல
ஓடி மறைந்தது அப்போது அவள் முன் !

பேச்சு என்று வந்தால்
ஆண்தானே ஆரம்பிக்க வேண்டும் ?

உன்னை எத்தனை காலம்
வெளியே தேடுவது ?

இப்போது அவள் சிரித்து விட்டு,
உள்ளே இருப்பதைத் தொலைத்து விட்டு
வெளியே தேடுவதனால்
தொலைத்தவன்தானே தேட வேண்டும் ? .

எனக்கு ஏனோ
கோவிக்க எதுவுமில்லை .

என்னையறிமால் அப்போது
நானும் சிரித்து விட்டு
தொலைந்தவள் என் முன்
வந்து நின்றால் என்ன ?

நீ தேடிய எல்லா
பெண் முகத்திலும் நானில்லை
என்று தெரிந்தும் தனியன் என்றெண்ணி
ஓயாமல் தேடிக்கொண்டு இருந்தாய்

இத்தனை நாள் நான் காத்து இருந்த
இந்த ஒற்றைப்பதையில்
இன்றுதான் என் எதிரே வந்தாய்
என்று சொல்லி மீண்டும் சிரித்தாள்

நானும் அவளுடன் சேர்ந்து சிரித்தேன்
அங்கு நாங்கள் இருவரும் சிரித்தாலும்
ஒரு ஓசைதான் வந்தது
அது பெண்ணையும் ஆணையும்

ஓசைகளால் பிரிக்காத சிரிப்பு
ஒரு உயிரின் இரு பாகத்தின் ஒரே குரலில் !

இரவும் பகலும் அங்கு கலந்திருந்தது.
ஆணும் பெண்ணும் அங்கு ஒரு முகமாய் தெரிந்தார்கள் .


”பாதைகள் சரியாக இருந்தால் ” என்ற ஓஷோவின் பார்வையில் “ஷீவாங் ட்சூ” சிந்தனைகளை வாசிக்கும் போது ஆணுக்குள் இருக்கும் பெண்மையையோ பெண்ணுக்குள் இருக்கும் ஆணையோ சந்தித்தால் பிளவு பட்ட மனிதன் ஒன்றாக மாறுவான் அப்போது அவனுக்குள் பிறக்கும் ஒருமையின் விளைவு தான் உண்மைக் காதல். மற்றெல்லாம் காமத்தேவையின் சூழ்ச்சி என்று சொல்லியிருந்தார் .அந்த பாதிப்பின் விளைவால் “ எனக்குள் இருக்கும் இருக்கும் பெண்மை” சந்திப்பே இது

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (26-Sep-16, 6:33 pm)
சேர்த்தது : krishnamoorthys
பார்வை : 260

மேலே