கட்டுரை - சங்ககால தமிழர் வரலாறு
முன்னுரை:
தோராயமாக 400 BC ல் இருந்து 500 Ad வரை ஆன காலமே சங்க காலமாக கருதப்பட்டது . இந்த காலத்தில் தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டு வந்தார்கள் . சங்க காலத்தில் மூன்று வகை சங்கங்கள் இருந்தன அவை முறையே முதல், இடை, கடை சங்கம் எனப்படும்.
நாம் இந்த சங்ககால வரலாற்றை ஆராய்ந்தோமானால் சங்ககால தமிழரின்இலக்கியம், நாகரிகம், பண்பாடு, தொழில், பக்தி, அறிவியல் அறிவு என்று நாம் அறிந்துகொள்ள எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. கற்றது கை மண் அளவு என்பதற்கு ஏற்ப என் சிற்றறிவுக்கு தெரிந்த சிலவற்றை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.
இலக்கியம்: சங்க இலக்கியங்கள் குறிப்பிட்ட காலவரையறைக்கு உட்பட்டவை தன் காலச் சமுதாயத்தை பிரதிபலிப்பதாகும். எண்ணற்ற புலவர்கலால் அகப் பாடல்களும் , புறபாடல்களும் பாடப்பட்டன அவைகளும் அக்கால சமுதாயத்தை சித்தரிப்பதற்காகவே எழுந்தன எனலாம்.
கடை ஏழு வள்ளல்களும் வாழ்ந்த காலமிது .
சமுதாயச் சித்திரிப்பு:-
சங்க இலக்கியம் சமுதாயத்தில் உயர்ந்தவர்களையே அவர்களது வாழ்க்கை முறைகளையே புனைந்துரைக்கின்றது. சமுதாயத்தில் உள்ள நல்லதை மட்டுமே எடுத்துரைத்தது. இதற்குக் காரணம் சங்கஇலக்கியம் மரபு தழுவிய இலக்கியமாக இருப்பதேயாகும். உள்ளனவற்றைப் பிரதிபலிக்கும் முயற்சியே தவிர மறைக்கும்படியான முயற்சி என்று கூறிவிட முடியாது.
புறநானூற்றில் அமைந்துள்ள மகள் மறுத்தல், மகட்பாற் காஞ்சி போன்ற துறைகள் அக்காலச் சமுதாயத் தீங்கினைக் குறிப்பாகத் தெரிவிக்கின்றன. இயன்மொழி, பரிசில்துறை, பரிசில் கடாநிலை, வாண்மங்கலம், துணைவஞ்சி போன்ற துறைகள் புரவலர்க்கும், புலவர்க்கும் உள்ள தொடர்பினைக் கூறுகின்றன.
மகள் மறுத்தலும், மகட்பாற் காஞ்சியும்:-
புறநானூற்றில் இடம்பெறும் மகள் மறுத்தல், மகட்பாற் காஞ்சி போன்ற துறையமைந்த பாடல்கள் அரசன் ஒருவன் மாற்றரசனிடம் அல்லது மறக்குல மக்களிடம் பெண்கேட்டுச் செல்லுதல், பெண்தர மறுத்தல், அதனால் வரும் போர் அழிவாகிய சமுதாயத் தீங்கு ஆகியவற்றை காட்டுகின்றன
"களிறு பொறக் கலங்கிய தண்கயம்போல,
பெருங்கவின் இழப்பது கொல்லோ"
"மரம்படு சிறுதீப் போல
அணங்காயினள் தான்பிறந்த ஊர்க்கே"
என்ற அடிகள் பெண் தர மறுத்தலால் ஊரே அழிதலை விளக்குகின்றன. பெண் தான் பிறந்த ஊருக்குத் தீப்போல் ஆனாள் என்றும், பெண்ணின் பொருட்டு அக்கால மன்னர்கள் பகை கொண்டெழுந்ததையும், அப்பகையால் நாடே அழியும் சமுதாயத் தீங்கிணையு
இயன்மொழி:-
அரசனுடைய இயல்பைக் கூறும் இத்துறை புரவலன் புலவரிடம் கொண்டிருந்த மதிப்பினைக் காட்டுகின்றது. சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையினுடைய முரசுகட்டிலில் அறியாது துயின்ற மோசிகீரனாரைச் சினம் கொள்ளாது, அப்புலவன் எழுந்திருக்கும் வரை அம்மன்னன், அவருக்குக் கவரிகொண்டு வீசினான்.
"............மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவரி
................
மதனுடைய முழவுத்தோள் ஓச்சி, தண்ணென
வீசியோயே"
என்ற மோசிகீரனார் பாடல் அரசன் புலவனிடம் வைத்திருந்த பெருமதிப்பை எடுத்துக் காட்டுகின்றது.
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபோது தன் நண்பர் பிசிராந்தையார்க்கும் இடம் ஒதுக்குமாறு கூறுகிறான். அருகிருந்த சான்றோர்கள் பல்லாண்டுகள் பழகிய நண்பர் ஆயினும் நேரில் வருதல் அரிது என்றனர். அதற்குச் சோழன் என் நண்பர் பிசிராந்தையார் இகழ்விலர்; இனிய நண்பினர்; தன்பெயர் கிளக்குங்கால் என்பெயர் சொல்லும் பேரன்பினர். ஆதலால்,
"...........................................
இன்னது ஓர் காலை நில்லலன்
இன்னே வருகுவன் ஒழிக்கவற் கிடமே"
என்கிறார். நேரில் ஒருவரையொருவர் பார்த்தறியாது, மனதளவில் நட்பு பூண்டு, மன்னருடன் வடக்கிருந்த தன்மை அவர்களுக்கிடையே இருந்த நட்பைப் புலப்படுத்திக் காட்டுகிறது.
பரிசில் துறை:-
ஒளவையார் அதியமானிடம் பரிசில் கேட்டுச் சென்றபொழுது, அவர் பரிசில் நீட்டித்தவழி,
"காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை
மரம்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே"
என்று சினமுற்றுச் சொல்லிப் பரிசில் பெறாது சென்றுவிடுகிறார். தன் மானத்தை நிலைநாட்டப் பாடிய பரிசில் துறைப்பாடல்கள் பல உள்ளன. இவை புலவர்களின் தன்மான உணர்வினைக் காட்டுவதுடன், புரவலர் புலவர்களிடமிருந்து நெருங்கிய தொடர்பினையும், உரிமையினையும் காட்டுகின்றன எனலாம்.
வாள்மங்கலம்:-
புலவர்கள் மன்னர்களிடையே தூதுவராகவும் விளங்கி உள்ளனர். அதியமானின் பொருட்டு, ஒளவையார் தொண்டைமானிடம் தூது சென்றதை வாள்மங்கலத் துறையிலமைந்த....
"இவ்வே மீல் அணிந்து மாலைசூட்டி
அண்ணல் எம்கோமான் வைந்நுதி வேலே"
எனும் பாடல் வழி அறியலாம்.
துணைவஞ்சி:-
புலவர்கள், மன்னர்கள் இருவரிடையே போர் மூண்டபொழுது அதைத் தடுத்துசூச் சந்து செய்துவித்து அறிவுரை நல்கினர். சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும், சண்டையிட்டபொழுது, கோவூர்கிழார், நீருவரும் ஒரே குடியினர்; ஒரே மாலையணிந்தவர்கள்; இருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்பது நும் குடிதான். தவிரவும் இருவரும் வெல்வது இயற்கையுமன்று. எனவே நீங்கள் போரிடும் செயலாnatu
"குடிப்பொருள் அன்று நும்செய்தி; கொடித்தேர்
நும்ஓர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ்விகலே"
இங்ஙனம் புலவர்கள் புரவலர்களிடமிருந்து சிறந்த நட்புறவு பூண்டும், தூதுவராகவும், அறிவுரை கூறும் அமைச்சுகளாகவும் இருந்துள்ளனர். புரவலர்களும், புலவர்களிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தனர். அவர்களால் பாடப்படுவதைத் தம் வாழ்நாளில் பெருமையாக எண்ணினர். மேலும் தாபதநிலைத் துறையிலமைந்த பாடல்கள் கணவனை இழந்த பெண்களின் துயரினையும், விதவைப் பெண்கள் மேற்கொண்ட அக்காலப் பழக்கவழக்கங்களையும் சுட்டுகின்றன. கைக்கிளை, பெருந்திணை போன்ற திணைகள் அமைந்த பாடல்கள் அன்றைய சமுதாயத்தில் குற்றங்கள் நிலவியதை விளக்கி நிற்கின்றன.
நிறைவுரை:-
சங்க இலக்கியம் சங்ககாலத்தைப் பிரதிபலிக்கிறது. சமுதாயத்தில் உயர்ந்தனவற்றையும், நல்லனவற்றையும் எடுத்துக்கூறி, மேன்மையுடைச் சமுதாயமாகக் காட்டுவது இதன் நோக்கமாகத் திகழ்கிறது. இதற்கு மரபுகளும், கட்டுபாட்டு விதிகளும் காரணமாக அமைகின்றன. எனினும் சமுதாயத்திலுள்ள தீமைகளையும் நாகரிகமாகச் சுட்டி காட்டுகின்றன . கட்டில் பின்னும் தொழிலாளி முதல் கருங்கைக் கொல்லன் வரை அனைவரும் அச்சமுதாயத்தில் இடம்பெற்றனர். சங்க இலக்கியம் பொற்காலம் என்று கூறும் அளவிற்கு உயர்ந்த செய்திகள் தொகுக்கப்பட்டிருப்பினும் தவிர்க்க முடியாத சமுதாயக் குற்றங்களையும் ஒரு கோணத்தில் எடுத்துரைக்கின்றது புலவர்கள், புரவலர்கள் தொடர்பைப் புறநானூற்றுப் பாடல்கள் நன்கு விளக்கி நிற்கின்றன. சங்ககாலத்தில் புலவர்களை அரசர்கள் மதித்துப் போற்றினர். புலவர்கள் மன்னர்களுக்கு மந்திரிகளாக, தூதுவர்களாக, அறிவுறுத்தும் அமைச்சர்களாகவும் நண்பர்களாகவும் இருந்துள்ளனர். புலவர்களும் மன்னர்களைப் பாடுவதைப் பெருமையாக எண்ணினர். "மன்னன் உயிர்தே மலர்தலை உலகம்" என அக்காலச் சமுதாயம் விளங்கியுள்ளது. இவை தவிர கணவனை இழந்த மனைவியின் தாபத நிலை, மனைவியை இழந்த தபுதார நிலை முதலியனவும் பேசப்பட்டன. அக்காலத்தில் பெண் சமுதாயத்தில் எங்ஙனம் கருதப்பட்டாள் எனவும் அவள் கடைபிடித்த பழக்க வழக்கங்களையும் சுட்டி காட்டுகின்ற்ன