கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில்

கூரையை கொளுத்திவிட்டு எரிகிற வீட்டில் பிடுங்குவதெல்லாம் லாபமென்கிற நோக்கில் கிடைத்ததையெல்லாம் பிடுங்கிகொண்டு ஓடுபவர்களால் வர வர காதல் களங்கப்பட்டு கொண்டே வருகிறது. அப்படித்தான் அவன் அவளை தன்னிஷ்டம் போல் எரியவிட்டு விட்டு தனக்கு வேண்டியதை மட்டும் பிடுங்கி கொண்டு ஓடினான். போகும்போது வெளிநாடு போவதாய் சொல்லிவிட்டு அதே நகரத்தில் மனைவி குழந்தையென தன் குடும்பத்தை அழகாய் அமைத்து கொண்டான். வெளிநாடு போனவன் தி;ரும்பிவருவானென அவள் களங்கமில்லாமல் நம்பிக்கொண்டிருக்கிறாள். அந்த அவனை அவள் எதிர்பாராமல் சந்தித்தபோது அழுதுகொண்டே சொல்கிறாள் . .

நீயூம் நானும்
இப்படி எதிரெதிரே - இந்த
சந்தை நெரிசலில்
சந்தித்து கொள்வோமென்று
யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
எதிர்பாராத சந்திப்பாய்
எனக்கும் உனக்கும்
இது சேர்ந்தே நிகழ்ந்திருக்கிறது.

மனசெல்லாம்
அதிர்ச்சியிருந்தாலும்
என்மேல் படர்ந்த
உன் பார்வையை
மிக சாவகாசமாய் தட்டிவிட்டு
தன் மனையாளின் பக்கம்
திரும்பி கொள்பவனே!

என்னை நினைவிருக்கிறதா?
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னா;
நானும் நீயும்
காதலர்கள்.

அப்போது
நாம்
பருவத்தின் வாசலில்
பல்லாங்குழி ஆடினோம்.
காதலிலே தொலைந்துபோய்
கண்ணாமூச்சி ஆடினோம்.
இன்னும்
ஆயிரமாயிரம் ஆட்டங்களை
உன்னோடு
சேர்ந்து ஆடியிருக்கிறேன்
நான்.

என்றாலும்
என்னோடு
கடைசியாக நீ ஆடிய
ஆட்டமிருக்கிறதே!
அப்பப்பா . . .!

அன்றொரு சாயங்கால பொழுதில்
ஒரு பச்சை குழந்தையின்
கலப்படமற்ற சிரிப்போடு
நான்
உன்னிடம் ஓடி வந்தேன்.
நீயோ
ஒரு மதம் பிடித்த யானையின்
வெறியோடு
என்னை நெருங்கினாய்.

மன்மதன்
உன் கண்ணங்களில்
ஓங்கி அறைய
நீ
நிலை தடுமாறி
ஓடிவந்து
என்னை
கட்டியணைத்துக்கொண்டாய்.

ஆயிரமாயிரம்
ஆசைவார்த்தைகள் பேசினாய்.
மன்மதனின் பானத்தை
இரக்கமின்றி
என்மேல் வீசினாய்.

நீ
உன் ஆண்மையை
அளந்து பார்த்து கொள்ள
என்னை
அற்புதமாய் பயன்படுத்திக் கொண்டாய்.

உன் மோகம்
தாகம்
வேகம்
அத்துனையும்
எனக்கும்
மெதுவாய் தொற்றிக்கொள்ள . . .

வாழை இலை விரித்து
நான்
விதவிதமாய் விருந்து வைக்க. . .
என் மாராப்பு சீலைக்குள்ளே
மன்மதனாய்
மாறினாய் நீ.

அது
மன்மதனின் பாதங்களில்
ரதிதேவியின் படையல்கள்.
அறையெங்கும்
உடைந்து சிதறன
என் கண்ணாடி வளையல்கள்.

இதயத்தில் வளர்ந்த
ஆசை நெருப்பை
இதழ்களில் ஈரத்தால்
அனைத்தோம்.
வறண்ட பூமியின்
வரப்பினையெல்லாம்
தண்ணீர் பாய்ச்சி
நனைத்தோம்.

அன்று
உன் இளமையை
அர்த்தபடுத்திக்கொள்ள
என்னை
ஏதேதோ செய்தாய்.

காதல் நெருப்பில்
இருவரும்
பற்றிகொண்டு எரிந்து
ஒருவர் சிதையில்
இன்னொருவர்
உடன்கட்டை ஏறினோம்.

ஒருவர் வாசத்தை
ஒருவர் முகர்ந்து . . .
ஒருவர் உஷ்ணத்தை
ஒருவர் பகிர்ந்து . . .

நான்கு இதழ்கள்
ஒன்றாய் சேர்ந்து
சுகத்தை வாசிக்க . . .
இடைவெளியற்ற நெருக்கத்தில்
ஒருவரின் மூச்சுகாற்றை
இன்னொருவர் சுவாசிக்க . . .

அடடா
அன்று
நீ நானென்கிற
இரண்டே வார்த்தைகளின் பின்னலில்
எத்தனை கவிதைகள்
எழுதி முடித்தோம்.

உரசலின் சுகத்தை - நீ
ஒவ்வொன்றாய்
சொல்லி தந்தாய்.
என்னிடமுனக்கு வேண்டியதெல்லாம்
வேண்டியமட்டிலும்
அள்ளிக் கொண்டாய்.

இளமைபோட்ட விடுகதைக்கு
இருவரும் சேர்ந்து
விடைகாண போராடினோம்.
இறுதியில் இருவரும்
ஒன்றாய் சேர்ந்து
தேன்குளத்தில் நீராடினோம்.

உன் இறுகிய அணைப்பால்
என் மூச்சுகாற்று
வெளியேற முடியாமல் நான் திணற . . .
நானே நீயானதை
நீயே நானதை
நாமிருவரும் சேர்ந்து உணர . . .

அப்போது
புனித பட்டுவிட்ட தெம்பில்
இந்த பூவின் வதனத்தில்
பூரண சிலிர்ப்பு.
கதகதவென எரிந்து பின்னா;
காற்றாய் போனது
ரதியின் நெருப்பு.

நாமொருவரை
ஒருவரிடம் தொலைத்துகொள்ள
சுமார் ஒரு மணி நேரம்
போராடியிருப்போம்.
ஒரு மணி நேரத்தில்
எல்லாம் முடிய
உட்கார்ந்து கொண்டோம்
ஆளுக்கொரு மூலையில்

அவசரபட்டு விட்டோமா?
இல்லை
வாழ்வை அர்த்தபடுத்திக்கொண்டோமாயென
அமைதியாய் மனசு
அலசி பார்க்க . . .
அணைத்த பின்பும்
எரியும் நெருப்பாய்
உடலெல்லாம்
ஊற்றாய் வேர்க்க . . .

அது
மன்மதனின் சந்நிதியில்
நாமிருவரும் சேர்ந்து நடத்திய
யாகத்தின் இறுதிகட்டம்.
நாமே நடத்திய
அந்த நாடகத்தின் நாயகர்கள்
நானும் நீயும் மட்டும்.

வேகமாய் இயங்கி
மிருகபசியை தீர்த்துகொண்டதில்
நம்மிருவரின் சரீரங்களிலும்
நதிப்பிரவாகமெடுத்த வேர்வை.
இனி பேசுவதற்கு
என்ன இருக்கிறதுயென்பதுபோல
ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்ட பார்வை.

அது
எல்லாம் கிடைத்த முழுமையா?
இல்லை
எல்லாமிழந்த வெறுமையா?

இவையெல்லாம் முடிந்த
ஏழாவது நாளில்
"நான் வெளிநாட்லயிருந்து
திரும்புனதுமே
நம்ம கல்யாணந்தான்"
என்று சொல்லிப்போனாய்.

வெளிநாட்டிலிருந்து
நீ
திரும்பிவருவாயென
நான்
பைத்தியகாரத்தனமாய்
நம்பிக்கொண்டிருக்க
நீயோ
இந்த ஜனநெரிசலில் ஒருவனாய்
உன் ஆசை மனையாளோடு
இதோ
என்னை
அநாயசமாய்
கடந்து சென்று கொண்டிருக்கிறாய்.

எழுதியவர் : சுந்தரபாண்டி (28-Sep-16, 4:07 pm)
சேர்த்தது : சுந்தரபாண்டியன்
பார்வை : 245

மேலே