நெடுமரம்
வெட்கம்கெட்ட வேசியொருத்தி
அமிலமிட்டு அழியவைத்த ஒரு நெடுமரம்...
காதலின் சுவாசம் கைகளில் தழுவாமல்
கானகத்தில் தானே தற்கொலை செய்துகொள்ள...
தன் உடலை உலுக்கி ஊமையாய் நின்று
உதிர்த்து விட்டது அதன் உயிரான இலைகளை...
வெட்டைவெளி மொட்டைமரமாய் வெறித்தோடிக்கிடக்கின்றது
தன் முகவரியைத் தானே தொலைத்து...
அந்தோ பரிதாபம்...
கதிரவன் தன்கதிர்களை தட்டிக்கொடுத்தும்
மழையன்னைக்கு மனம்வரவில்லை...
மாலை வெய்யிலின் நிறம்மாறி
இரவுநேரத்திற்காக கதிரவன் மறைந்தபோது...
காடுமலையென கடந்த ஒரு குருவிக்கூட்டம்
இளைப்பாற இடம்தேடி அம் மரத்தினில்
ஆளுகொரு இடம் பிடித்துக்கொண்டன...
இலையுதிர்த்த அம்மரக்கிளைகளில் அப்போது
இலைகளுக்கு பதிலாக குருவிக்குஞ்சுகள் கொஞ்சிவிளையாடியது...
வானவில்லின் வண்ணங்களைப் போர்த்தி
புதுநிலையில் புணர்ந்து நின்றது அந்த நெடுமரம்...
விசித்திரங்கள் விறுவிறுவென
விண்ணுலகம்வரை சென்றுசேர...
விந்தகளை வேடிக்கைப் பார்க்க
வியத்தகு கார்கூந்தல் தலைவிரிக்க
விரைந்து வந்தாள் மழையன்னை...
கார்மேகம் கண்ட கானமயில் தோகை விரித்தாடிட
தனிமையில் நிற்கிறது அந்த பட்டுப்போன மரம்...
ஆடும் மயிலைக் கண்டு மதிமயங்கி
உயிர்துளிகளை உமிழத் தொடங்கினாள் மழையன்னை...
மழையின் வெப்பத்தில் கண்விழித்து
மறைவிடம் தேடி மறைந்து போனது அந்த குருவிக்குஞ்சுகள்...
வண்ணங்களைக் கொட்டி
வாகை சூடுவதற்க்காய் வரைந்தகோலம்...
தண்ணீர்கொட்டி துடைத்த வெற்று தரையாய்
மீண்டும் வெறித்து போனது...
விதிபோட்ட விதவைக் கோலமாய்
விடையில்லாது அழிந்துபோன நெடுமரம்...

