மேகம்

மேகம்
மலையைத் தழுவித் தணிக்கும்
தன் மோகம்
மணலைக் கழுவித் தணிக்கும்
தன் சோகம்

மேகம்
தண்ணீர் சுமக்கும் ஓடம் அல்ல
தண்ணீரைச் சுமந்து செல்லும் ஓடம்
அது கவிஞர்கள் ஆகாயப் பலகையில்
கற்றுக்கொள்ளும் பாடம்

எப்போது வேண்டுமானாலும்
மேகத்திலிருந்து மழையானது
மே கம் அதனால்தான்
அதன் பெயர் மேகம்

வறண்டு வாடும் நிலத்தின்
தாகம் தீர்க்காமல்
விவசாயி தேகத்தின் முதுகில்
குத்துவதால் அதன் பெயர் முகில்

எத்தனை வயதானாலும்
தவழும் குழந்தை

கருப்பு வெள்ளை நிறம்
கொண்ட இயற்கையின்
கட்சி கொடி
இரு மேகங்கள்
உரசிக்கொண்டால் இடி

நிலவின் வாகனம்
நிறைந்திருப்பது வானகம்

காற்றடித்தால் பிரிகின்றது
கடல் நீரை வாய் இன்றி உறிகின்றது

மேகம்
மறைந்தால் மலை வழியும்
நிறைந்தால் மழை பொழியும்

சிறகின்றி வானில்
பறக்கும் வெண்புறா
வருணனின் கை நழுவி
மிதக்கும் தம்புரா

எழுதியவர் : குமார் (21-Nov-16, 6:38 pm)
Tanglish : megam
பார்வை : 561

மேலே