என்னவள் தனலட்சுமி 

என்னவள் தனலட்சுமி. 
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ 

புலர்ந்தும் புலராத மார்கழி 
இளங்காலைப் பொழுது 
மலர்ந்தும் மலராத என் 
மனம் கிளர்ந்த காதல் போலே 

திறந்தும் முற்றும் திறவாத 
எதிர் வீட்டு வாசல் கதவு 
திறக்கத் தயங்கும் அவள் 
திடமன கதவு போலே 

இருள் விலகாத நேரம் 
இருந்தும் என்ன?ஒளிரும் 
என்னவள் கன்னி முகம் 
வெண் முத்து அழகி சுடர் 
பொன் மகள் தனலட்சுமி 

முழுமதி எழு மதியாய் 
கெழு மஞ்சள் பூசி 
குங்கும சிவப்பில் பூத்து 
துலங்கும் தாமரை முகம் 

முகிலை விலக்கி 
முகம் காட்டும் 
முதிர் நிலவு போலே 
முந்துறும் அவள் முகம் 
முன் கதவுக்கு இப்பாலே 

பச்சை பட்டு உடுத்தி 
பாங்குடனே மேல் உடுத்தி 
பித்தைதனை படிய கோதி 
பிச்சி பூ சரம் சூடி 
பாவை நோன்பு பாசுரம் பாடி 

முன் விடியலில் விளக்கேற்றி 
முப்பெரும் தேவியரை உவந்து 
முந்தி வந்தித்து அழைக்கும் 
விந்தை மகள் தனலட்சுமி 

நிமலனை நினைத்தபடியே 
நிலைப்படி சாளரம் வழியே 
நீளும் என் பார்வை - அவள் 
நிலவு முகம் காண வேண்டி 

தூமணி மாடத்து விளக்கெனவே 
துலங்கும் ஒளிர் நெற்றித் திலகம் 
நிலம் நோக்கும் நேரிழை முகம் 
நீள் விழிகள் என் விழி நோக்கும் 

ஓர பார்வை சொல்லும் 
ஓர் ஆயிரம் காதல் கதைகள் 
ஆயிரத்து ஓர் இரவுகளில் 
ஆள முடியாத அத்தினையும்! 

தனம் முன் தனம் தரும் 
தினம் தனம் மணம் தரும் 
நலம் மிகு வதனம் தரும் 
நாளும் அன்பன் எனக்கே.! 

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (22-Nov-16, 2:50 pm)
பார்வை : 170

மேலே