சிவபித்து வேண்டிட்டேன் பித்தனே

🙏🙏🙏
அண்ணாமலையானுக்கு சமர்ப்பணம்
🙏🙏🙏
நிலைகுலைந்து நிலையிழந்து
உயிர் நனைந்து துடிக்கிறேன்...!!

உனை மறந்த நிலைபுரிந்து
எனை மறிக்க நினைக்கிறேன்!!

பித்தா இவள் உன் பக்தை ஆதலால்
இவளை பித்தாக்கலாகாது
புத்தாக்க புத்ரனே!!

நினை நினைந்து..
உனில் நனைந்து …
அடிசேரப் பார்க்கிறேன்!!

விடையேறு வித்தனே!!

சடைபுரியு மெத்தனே!!

கதிரவப் பிழம்பினிலே
காந்தத்தை தோய்த்தெடுத்து ..

தங்கமே சிறிதுருக்கிவிட்ட..

தீப்பிழம்பினிலே தோன்றிட்ட..

தில்லை வாழ் கூத்தனே!!

தொல்லை களை தேசனே!!

என்னுயிர் உடைத்து
உனை வடிக்க
அருள்வாயோ அய்யனே!!

உன்னருள் குடித்து
பிழை உறிக்கும்
பேரருளாய் பேயனே!!

சுடலைப் பொடி பூசி
நிதம் நடம்புரியும் நாதனே!!

நாதியற்ற நாதிகட்கும்
கதியாகும் மதியனே!!

விதிமாற்றும் விதிசெய்த
காலனுதை கள்வனே!!

அடியோரின் அன்பினுக்குள்
அகமகிழும் ஈசனே!!

பரசமயர் பலருன்னை
பேயநென்றேவினரே!!

பரமனே உன்னருளூற்றின்
மாட்சிமைதான் அறிவரோ..!!

பாரபட்சம் ஏதின்றி
பரையர்க்கும் முறையே தான்
பதமீந்த பெருமானே!!

மரையேந்து மறையோனே !!

அன்னையிலை அப்பனிலை...

ஆதியிலை அந்தமிலை..

அடியுமிலை
முடியுமிலை...

அருவமிலை உருவமிலை..

நீயல்லோ பற்றற்ற ஞானத்தின் நிலைகாட்டி..!!

உனை நிந்திக்கும் பலகூட்டம் உனை
சிந்திக்குமேயானால்
சிந்தையிலே சிவமேறி
ஞானக் கறையேறக்கூடும் ..!!

வரமொன்று ஈவாயின்
தருவாயா கேட்டிடுவேன்
"சிவபித்து" பிடித்தே நான்
உன்னடி சேரப் பார்ர்த்திடுவேன்..!!!

🙏🙏சிவரஞ்சனி சேகர்🙏🙏

எழுதியவர் : சிவனிறைச்செல்வி (21-Dec-16, 3:03 pm)
சேர்த்தது : Sivaniraichelvi
பார்வை : 194

மேலே