எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி என்றே கேட்கிறது
எந்தன் உள்ளம் என்றும் வலிக்கிறது !
மனிதனாய் பிறந்தும் மண்ணில் இல்லை
மனிதம் நிலைத்து தழைக்கவும் இல்லை !
வசதிகள் உள்ளவனும் வருந்தி அழுகிறான்
வாய்ப்புகள் இருந்தும் மனதால் வாடுகிறான் !
உழைப்பவன் வாழ்வில் வளமும் இல்லை
உறைவிடம் இன்றி ஏங்கித் தவிக்கின்றான் !
ஏழை பணக்காரன் பாகுபாடு களையவில்லை
சாதி மதவெறியால் பிரிவினை மாறவில்லை !
உண்மை பேசுபவனை உலகம் மதிப்பதில்லை
உளைச்சல் பெருகி உலவிட இயலவில்லை !
இயற்கை சீற்றத்தால் சீர்குலைவு நிகழ்கிறது
வன்முறைப் போராட்டம் நாளும் கூடுகிறது !
நம்மினம் கண்முன்னே அழிவதைக் கண்டு
நம்மனம் அழுகிறது வதைபடும் அவலத்தால் !
அரசியலும் பதவியும் அரக்கராய் செயல்பட்டு
அன்றாட வாழ்வில் அல்லல்பட வைக்கிறது
எங்கே நிம்மதியென என்னுள்ளம் கேட்கிறது !
பழனி குமார்