மோகினி-சிறுகதை

இராகவனுக்கு…அந்த போர்ஷனைக் காலி செய்வதற்கு.மனசே ஒப்பவில்லை. ஆனால், வீட்டின் உரிமையாளர், வெளிநாட்டிலிருந்து அவர் பையன் வருவதாகவும், அவனுக்கு அந்த போர்ஷனை ஒதுக்கி தரப்போவதாகவும் சொன்னார்.
ஆனால், அதில் உண்மை துளியுமில்லை, காரணம் மாடியிலேயே வசதியாக நான்கைந்து அறைகள் விசாலமாக இருக்கின்றன. தம்மை காலி செய்வதற்காகவே இப்படி செய்கிறார் என்று இராகவனுக்கு புரிந்து விட்டது
ஆதலால், புரோக்கர்களிடம் சொல்லி இன்றோடு பதினைந்து நாட்களாயிற்று, சரியான போர்ஷன் கிடைக்கவில்லை. அதுவும் பேச்சிலர் என்றால் நிறையவே யோசித்தார்கள்.
மிகவும் கஷ்டப்பட்டு ஒரு போர்ஷன் கிடைத்த்து. அது புறாக்கூண்டு போல இருந்த்து, தண்ணீர் வசதியும் குறைச்சல், நம்மை இக்கட்டில் மாட்டிவிட்ட ”வீட்டின் உரிமையாளரை” ஏதாவது செய்ய வேண்டுமே என யோசித்தான்.
கோர்ட் வழக்கு என்று போனால், அந்த ஏரியா முழுவதுமே தெரிந்து விடும். தமக்கு போர்ஷன் கிடைப்பது கஷ்டமாகிவிடும். ஆதலால் கிடைக்கின்ற போர்ஷனுக்கு போய் விடலாம். ஆனால் போவதற்கு முன்பு, இப்போதைக்கு குடியிருக்கும் போர்ஷனுக்கு யாரையும் வரவிடக் கூடாது என்று மூளையைக் கசக்கினான்.
அவனுடைய குறுக்கு புத்தியில் குரூரமான யோசனை புலப்பட்டது. வீடு காலி செய்வதற்கு முந்தையதினம், நடுஇரவில் திடிரென அந்த ஏரியாவே கேட்கும்படி அலறினான்.
தெரு முழுக்க ”என்ன? என்ன ? என்று விசாரித்தார்கள்.
”என்னோட போர்ஷன் ஜன்னல் பக்கம் ஒரு பெண் வெள்ளைசேலை உடுத்தி, மல்லிகைப்பூவும் வைத்து ஜல்…ஜல். சத்த்த்தோட நடக்கிற சத்தமும் கேட்குது, அது என்னை ”வா, இராசா, வா”-ன்னு கூப்பிடுது” என்றான்
அந்த ஏரியா முழுவதற்கும் பரவி ”அடியே அந்த வீட்டுல மோகினி உலாவுதா,” அப்படின்னு பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். . மறுநாள் போர்ஷனைக் காலி செய்துவிட்டான்.
புதிய இடத்தில், புது போர்ஷனுக்கு குடியேறி மூன்று மாதங்கள் ஆகியது. வசதி குறைச்சல் என்ன செய்வது பல்லைக் கடித்துக் கொண்டு நாட்களைக் கடத்தினான்.
அன்று வேலை அசதியில் சீக்கிரமாகவே படுக்கையில் படுத்து உறங்கி விட்டான். நட்டநடு நிசியில்….விசித்திரமான சத்தம் கேட்டது. தூக்க கலக்கத்தோடு…. என்னவென்று ஜன்னல் வழியாய் பார்த்தான்,
” வெள்ளைநிற சேலையோடு, தலையில் நிறைய மல்லிகைப்பூவோடு. ஜல்….ஜல்…ஜல்” என்ற சத்த்த்தோடு இளம்பெண் ஒருத்தி ”வா, இராசா, வா” என்று சிணுங்கலோடு அழைத்தாள்.
”ஐயோ, பேய், பேய்” என்ற அவனின் அலறல் அந்த ஏரியா முழுவதுமே எதிரொலித்தது.
கவிஞர் கே. அசோகன்.

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (21-Jan-17, 7:59 pm)
பார்வை : 610

மேலே