வேலையில்லாப் பட்டதாரி
கவிதை
வேலையில்லா பட்டதாரி !
நான்
அருகே சென்றாலும்
கடல் அலைகள்
என் பாதங்களை
முத்தமிடாமல்
செல்லுகின்றன !
என்
கண்களில் கண்ணீரோ
வற்றி விட்டது
என் மனமோ
ரத்தக்கண்ணீர்
வடிக்கின்றன !
நான்
சென்ற இடமெல்லாம்
வேலை காலியில்லை
போர்டு பேசாமலே
என்னை
வாசலோடு
வழி அனுப்புகிறது !
நான்
படித்த பட்டதாரிதான்
எந்தப் பண்ணையாரும்
எனக்கு
வேலை கொடுக்க
முன்வரவில்லை !
என்
ஏங்கிய மனம்
தூங்கிய நினைவுகள்
கனவாக வந்து
பயமுறுத்துகின்றன !
நான்
நாள்தோறும் படித்த
நாளேடுகள் எல்லாம்
எனக்காக
புலம்புகின்றன!
நான்
பட்டதாரி ஆனவுடன்
வானில் பறந்தேன்
கனவில் மிதந்தேன் !
நான்
‘வேலையில்லாதவன்’
என்று என்
தேய்ந்த செருப்பு கூட
என்னை ஏளனமாக
பார்த்து சிரிக்கின்றன !
‘வெட்டி ஆபிசர்’
‘தண்டச்சோறு’
என எனக்கு
படிக்காமலே கிடைத்த
பட்டங்களில்...
நான் படித்த
பட்டமே மறந்து விட்டது !
நான்
வாங்கிய பட்டத்திற்கு
வேலையில்லை !
அரசாங்கத்திடமிருந்து
உதவிப்பணம் கிடைத்தது
வேலையில்லா பட்டதாரி
என்ற பட்டம்
எனக்கு
கிடைத்த பின்பு !