வாடி வாசல் வாடா வாசல்

#வாடி வாசல்.. வாடா வாசல்..!

வீரத்தின் அடையாளம் ஏறு தழுவல்
காளைக்கும் காளையர்க்கும் நடக்கும் மோதல்
ஆதிகாலம் தொட்டுவந்த விளையாட்டன்றோ
போதுமென பூட்டி வைப்பார் இனியும் உண்டோ..?

மூக்கணாங் கயிறிட்டார் மூன்றாண்டு காலம்
முடங்கி கிடந்த காளை இனி முரண்டே ஓடும் - தமிழர்
தொடை தட்டி நிற்கின்றார் வீரர் என்று
மடை திறந்த மகிழ்ச்சிதானே மனதில் கொண்டு..!

வரலாறு காணாத புரட்சி கண்டார் - தமிழர்கள்
தீரர்கள் தரணியுமே அறியச் செய்தார்
புரட்சியொன்று வெடிக்க செய்த சல்லிக்கட்டு
பீட்டாவை ஓட்டியதே துரத்திக்கிட்டு...!

வாடி வாசல் வீதியெங்கும் திருநாள் காணும்
வீரம் கொண்ட காளையரின் அழகு கோலம்
தமிழர்களின் வீரம் போல் உண்டோ எவர்க்கும்
குருதியோடு ஓடுதன்றோ வீரம் அவர்க்கும்..!

தோள் சுமந்த பலமுடனே துடிப்பும் கொண்டு
காளை அடக்கும் வீரத்தை கண்டோம் மகிழ்ந்து
திமிரும் காளை திமில் பிடிப்பார் வீரம் காட்டி
அஞ்சிடாது காளை அடக்கும் அழகும் கூட்டி..!

தமிழ் மகனின் அடையாளம் சல்லிக்கட்டு
தீரம் காட்டி மகிழ்ந்திடுவார் துள்ளிக்கிட்டு
எந்த பேய் தடுத்தாலும் மோதி முட்டு
வாடி வாசல் வாடாதென சொல்லிக்கிட்டு..!

-சொ.சாந்தி-

எழுதியவர் : சொ.சாந்தி (12-Feb-17, 11:15 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 224

மேலே