இரக்கம்காட்டு
நாட்டில்நடக்கும்
தொண்ணூறு விழுக்காடு
குற்றங்களுக்கு காரணம்' குடி'தான்.
குடிமட்டும் இல்லையெனில்
அடிதடி -மண்டை உடைப்பு
குத்து- வெட்டு-கொலை- கொள்ளை
வழிப்பறி -தாலியறுப்புக்கள் -போன்ற
வன்கொடுமைகள் இருக்கவே இருக்காது .
குற்றங்களையெல்லாம்
ஆதிமூலமாய் இருந்து
அரங்கேற்றி வைப்பது
அநியாயம் கொண்ட'குடி'தான்!
சிறைச்சாலைகளில்
அடைபட்டுக்கிடக்கும்
குற்றவாளிகளில்
பலரை
அந்த
பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டது
பாழும்'குடி'தான் !
எத்தனை பெண்களின்
பூவையும் -பொட்டையும்
பறித்துக்கொண்டது
இந்த
பயங்கரக்'குடி'?
எத்தனை கும்பங்களின்
அமைதியையும்
நிம்மதியையும்
குடித்துக்கொண்டது
இந்த
ஈனக்'குடி'?
அரசுவருமானத்துக்கு
ஆயிரம்வழி இருக்கிறது .
'குடி'யில்
ஒரு குடும்பம் மூழ்கினால்
குடும்பம் மீள
என்னவழி இருக்கிறது?
ஒவ்வொருஊரிலும்
கண்ணுக்குத்தெரியாத
நதியொன்று
ஓடிக்கொண்டிருக்கிறது ,
அது பெண்கள்வடிக்கும்
கண்ணீர் நதி !
அழுகைகள் -அரற்றல்கள்
குமுறல்கள்- கொந்தளிப்புகள்
இவைதான்
குடிஞர்கள் வீட்டுப்
பெண்களின்கதி !
அரசே !
நீ
இந்தத்தலைமுறைக்கு மட்டும்
போதையின் பாதையைக்காட்டவில்லை .
அடுத்த தலைமுறைக்கும்
புதுப்பாதை போட்டுக்காட்டுகிறாய்!
தேசத்தில்
குற்றவாளிகள் இருக்கலாம் .
தேசமே
குற்றவாளியாய் இருக்கலாமா?
மதுக்கடை விவகாரத்தில்
நீதான்
முதல்குற்றவாளி !
நாங்கள்
இரண்டாம் குற்றவாளிகள் !
'மீன்விற்றகாசு நாறாது '
'மதுவிற்றகாசு தடுமாறாது 'அப்படித்தானே ?
அரசே !
இரக்கம்காட்டு,
மதுக்கடைகளுக்கு
பூட்டுப்போட்டு!
மதுக்கடையை
நீ பூட்டினால்,
நாங்கள்
மகிழ்ந்துகொண்டாடுவோம்
வேட்டுப்போட்டு!