என் ஓட்டம் என் இலக்கு

என் ஓட்டம் என் இலக்கு !
கவிதை By பூ. சுப்ரமணியன்


நல்லவற்றைக் கூட்டி
தீயவற்றைக் கழித்து
அன்பைப் பெருக்கி
இனிய வாழ்க்கையினை
அனைவர் வாழ்க்கையிலும்
வகுத்து வாழச் செய்வதே
என் ஓட்டம் என் இலக்கு !

வாடிய பயிரைக் கண்டு
வாடிய வள்ளலார்
வாழ்ந்து காட்டிய வழியில்
ஜீவகாருண்யம் மனிதநேயமுடன்
எப்போதும் வாழ்ந்து வருவதே
என் ஓட்டம் என் இலக்கு !

உலகம் எங்கும் சமாதானப்
புறாக்களைப் பறக்க விட்டு
ஒற்றுமையை வளர்த்து
வறுமையை விரட்டி
பெருமையுடன் வாழ்வதே
என் ஓட்டம் என் இலக்கு !

துன்பத்தைக் கண்டு
துவண்டு விடாமல்
துன்பமே துவண்டு விடும்படி
இனிய வாழ்க்கையினை
நம்பிக்கையுடன் வாழ்வதே
என் ஓட்டம் என் இலக்கு !

முடியாது எனக் கூறும்
பனித்துளிகளைக் கண்டு
தயங்கி நிற்காமல்
நம்பிக்கை என்னும் சூரியசக்தி
நம்மிடம் இருக்கிறது
இனிய வாழ்க்கையினை
எப்போதும் வாழ்ந்து காட்டுவதே
என் ஓட்டம் என் இலக்கு !

அழுவதே வாழ்க்கையில்லை
அழாமல் இருந்தாலும்
வாழ்க்கையில்லை
அனைவரும் உணரும்படி
இனிய வாழ்க்கையினை
வாழ்ந்து காட்டுவதே
என் ஓட்டம் என் இலக்கு !

கம்பனைப் போன்று
காவியம் படைத்து
ரவிவர்மா போன்று
ஓவியம் வரைந்து
எழுத்து இணையதளத்தில்
எண்ணற்றக் கவிதைகளை
எழுதிக் குவிப்பதே
என் ஓட்டம் என் இலக்கு !

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (1-Mar-17, 11:27 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 81

மேலே