நெல்லுக்கு இறைத்த நீர்

நெல்லுக்கு இறைத்த நீர்!
கவிதை : By பூ. சுப்ரமணியன்,

உழவன்
காலைக்கதிரவன்
ஒளிக்கதிர்கள் கண்டு
நிலமகளை புன்னகையுடன்
மலைக்காமல் பண்படுத்தி...

காளைகளுடன் சேர்ந்து
அகல உழாமல்
ஆழ உழுது – தன்
நெற்றி வியர்வை
நிலத்தில் சிந்திட...

நாற்று நட்டு, களையெடுத்து
நாட்டுப்புறத்து பாடலை
களைப்பு நீங்க
பாடிக்கொண்டே.

உழவன் கிணற்று நீரை
விழலுக்கு இறைக்காமல்
விளை நிலத்திற்கு
காளைகள் துணையுடன்
கமலை கொண்டு
நெல்லுக்கு இறைக்கும் நீர்
நாற்றுகள் நெற்கதிராகி
பசுமை வயல் காணும்போது
பரவசத்துடன் உழவன் !

பசுமை வயல் கண்டு
உழவன் மட்டுமா
பரவசம் கொண்டான்..?

சிறகடித்து பறக்கும்
சிட்டுக் குருவிகள்
நிற்கும் கொக்குகள்
ஆடும் மயில்கள்
பாடும் குயில்கள்
பறக்கும் நாரைகள்
படபடத்து வட்டமிடும்
வண்ணத்துப்பூச்சிகள்
உல்லாசப் பறவைகள்
பரவசம் கொண்டன !

நெல்லுக்கு உழவன்
கிணற்று நீரை மட்டுமா
இறைத்தான்
தன் வியர்வையும்
கலந்து இறைத்தான் !

உழவன் ஏர் ஓட்டம்
நின்றுபோனால்
உலகின் உயிரோட்டம்
நின்று போகும் !

நாம்
பசுமை வயல் வெளிகளில்
பவனி வரும்
காற்றை சுவாசிப்போம் !
நெல்லுக்கு நீர் இறைத்து
பசுமை காண வைத்த
உழவனையும் நேசிப்போம் !

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (1-Mar-17, 11:09 am)
பார்வை : 397

மேலே