உள்ளது கூறின்
உலகை அறிய
வெளிப்பட்டேன்
ஒருத்தனாக...
கூட்டத்தோடு
சேராதவன்
குற்றவாளியாம்!
ஆங்கே
எல்லா இடத்திலும்
கூட்டம் நிற்கக்
குழம்பிப் போனேன்..
எதிலாவது
சேர்வோம் என்று
துணிந்து..மெதுவாக..
முடிவெடுத்தேன்..
உள்மனம் சொன்னது
உயர்ந்த தென்பது
அதிகமானதே!..
அதுவும் இதோ
தெரிகிறது..இருப்பதிலேயே
பெரிய கூட்டம்...
நிபந்தனை விதிமுறை
ஏதுமின்றி நிற்கிறது
இப்பெரிய கூட்டம்
வட்டம் போட்டு
வாழ்வதென்றால்
இதுதான் போல..
நான்
கடைசி வட்டத்தில்
கால்கை பதித்து..
கொஞ்சம் கொஞ்சமாய்
முன்னேறுகிறேன்..
அடுத்தவனை இடித்தும்,
தள்ளியும்..
அப்பப்போ
வாழ்த்துச் சத்தங்கள்,
கரகோசங்கள்,
கொள்கை கூப்பாடுகள்..
சிலர் சிரிப்போடு
பலர் அழுகையோடு
ஆனாலும் வட்டம்
குறையவில்லை!
யாரும் பிரியவுமில்லை!
ஒருவகையில்
வேகம் கூட்டி
மையம் தொடும்
மையலில்,
வென்றும்
அவ்விடம் சென்றும்
பார்த்தேன்..
நடுவினில்
ஒரு நாயைக் கண்டேன்..
மனிதரைப் போல்
பேசப் பழகிய
மாண்புமிகு நாயாம்!!..
மனிதனை மனிதன்
நம்பாததனால்
நாய் இது
பேச முடிவெடுத்ததாம்!..
இத்தனை
கூட்டம் நிற்பது எல்லாம்
இதை வேடிக்கை பார்த்து
விமர்சனம் செய்யவாம்...
மெல்ல ஒதுங்கி
உலகை அறிய
புறப்பட்டேன் ஒருத்தனாக!!
அ.மு.நௌபல்
4/3/2017