பெண்ணே அச்சாணி - வெண்கலிப்பா - மரபு கவிதை

வண்டியோட்ட அச்சாணி வேண்டும்தான் இவ்வுலகில்
கண்ணாக நினைக்கின்ற காரிகையும் எந்நாளும்
பெண்ணாகப் பிறந்துள்ளாள் பேருலகில் இந்நாளில்
மண்ணுலகில் இவளன்றோ அச்சாணி மாற்றமில்லை
எண்ணமெலாம் குடும்பமாக எண்டிசையும் எண்ணிடுவாள்
வண்ணமிகு வளங்களையும் வகையாகச் சேர்க்கின்ற
மண்மீதில் பிறந்திட்ட மாதரசி வாழ்கவென்றே
உண்மையினை உலகினிலே உரைத்திட்டேன் இந்நேரம் .
உண்ணுதற்கே உணவளிப்பாள் உதிரத்தை பாலாக்கி
கண்ணிமைபோல் அமுதத்தை காசினியில் பிள்ளைக்கும்
தண்ணொளியைப் பிறர்க்காக தந்திடுவாள் வாழ்நாளில்
வண்ணங்கள் மாறினாலும் வடிவாக்கும் கலைமகளே
எண்ணங்கள் யாவினிலும் எத்திக்கும் ஒளிவீசும்
விண்ணுலகம் சென்றாலும் வீரத்தைப் பறைசாற்றும்
கண்ணெதிரே தோன்றியதோர் கடவுளன்றோ அச்சாணி
பண்பலவும் பாடிடுவேன் பாரினிலே வாழ்த்தியுமே
பெண்ணிவளே அச்சாணி பேணு .


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Mar-17, 6:43 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 60

மேலே