தளிர் நடை ---- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தளிர்நடையும் நடக்கின்றாய் மண்மீதில்
------ தாயவளின் தங்கமென உருவெடுத்தாய் !
வெளிர்மஞ்சள் கதிரோனும் நிறம்கொடுக்க
------- வெய்யோனின் சீற்றமுமே மாறிடுமே !
வெளியுலகம் அறியாத சிறுவன்நீ
------- வெந்தழலில் நடக்காதே சுட்டுவிடும் !
உளிகொண்டே செதுக்கியதோர் சிற்பம்தான்
------- உணர்வாயோ கண்மணியே நீயுந்தான் !


மலர்ப்பாதம் நோகுமடா கேட்பாயே
------- மாலையிலே நடைபயின்று விளையாடு !
பலர்நோக்கக் கண்படுமே உன்மீதில்
------- பாலகனே அறியாயோ தாயின்சொல் !
உலர்ந்துவிடும் உன்நாக்கும் தாகத்தால்
------ உரிமையிலே சொல்லுகின்றேன் வந்துவிடு !
மலர்ந்தமுகம் வாடிடுமே வெயில்தாக்க
------ மலர்ச்சரமே வாராயோ என்னருகில் !


கடலலையின் சீற்றத்தால் பயந்திடுவாய் !
------ கல்வியுமே கற்கவேண்டும் கண்ணாவா !
கடல்கரையின் மீதுள்ள மோகத்தால்
------ கால்நோக நடக்கின்றாய் என்மகனே !
படகுகளும் ரசிப்பதற்கே இல்லையடா !
------ பார்த்திடலாம் நாளையுமே இன்றுவாடா !
உடல்முழுக்க வியர்த்திடுமே என்செய்வேன்
------ உயிராக அழைக்கின்றேன் ஓடிவாடா !


நடைபழகும் அழகுமகன் சோர்ந்திடாது
------ நகர்வாயே பகலவனே மேற்குநோக்கி !
உடையெல்லாம் மண்ணாகி விழும்போதும்
------ உடையாது உதிராது நடக்கின்றாய் !
தடையேதும் இல்லையென்றே உன்போக்கில்
------ தளிர்நடையும் அழகாக பயில்கின்றாய் !
மடைதிறந்த வெள்ளம்போல் உனதுள்ளம்
------- மாசற்றே காலடியும் வைக்குமிங்கே !!!!

மொத்த சொற்கள் ---- 96
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Mar-17, 5:32 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 71

மேலே