என்னவென்று சொல்வது

என்னவென்று சொல்வது?
19 / 12 / 2024

இரவெல்லாம் உன் நெனப்பு
பகலெல்லாம் கடும் உழைப்பு
இதுதானே நம் வாழ்வு
அதுதானே என் வழக்கு
ஊரெல்லாம் சுற்றிவர
உள்ளத்துல ஆசையிருக்கு
ஊருக்கே சோறுபோட
உழவைத்தான் நம்பியிருக்கு
கருக்கலிலே ஏத்தம் இறைச்சி
கருவெனவே வெதவெதச்சி
கருத்தெனவே பாத்திக்கட்டி
உருவாகும் நெற்பயிரை
பெத்த புள்ளையாட்டம்
பொத்திப்பொத்தி பாதுகாத்து
சமைஞ்ச புள்ளையாட்டம்
தலை குனிஞ்ச நெல்மணியை
கதிரறுத்து போரடிச்சி
வெளஞ்ச நெல்லை
மூட்டைகட்டி
முதுகில் சுமந்து
புகுந்த வீட்டுக்கு
அனுப்பி வைக்கும்
ஏழை விவசாயிக்கு
காதல் செய்ய
ஏது நேரம்?
உழுத நிலத்து உரமாட்டம்
உள்ளுக்குள்ள ஊறுதைய்யா
எங்க காதல் விவசாயம்
சாகுபடியாய் இரட்டைப்புள்ள
பொறந்தபின்னும்
எங்கவாழ்க்கை
கொஞ்சம்கூட மாறலையே
இன்பம் வந்து சேரலையே...!
மண்ணை நம்பும்
உழவைப்போல
வானம் பாத்த
பூமிபோல
எத்தனை தடைகள்?
எத்தனை வியர்வைகள்?
அத்தனையும் சோதனைகள்.
அத்தனையும் வேதனைகள்.
நெஞ்சு நிறைய கவலைகள்
பஞ்செனவே பறந்திடும் - உன்
கஞ்சை குடிச்சப் பின்னால.
முப்போகம் வெளைஞ்சிடுமே - மானம்
மும்மாரி பொழிஞ்சாலே.
காலம் தவறி
பெய்திடும் இந்த
பேய் மழையில்
மடை உடைஞ்சி
பாய்ந்திடும்
பெரு வெள்ள நீரினில்
உழைச்ச உழைப்பு
அத்தனையும்
தண்ணீரில் மூழ்குதடி
நம் வாழ்க்கை
கண்ணீரில் கரையுதடி.
சோறுபோடும் விவசாயிக்கு
நாறிப்போகும் வாழ்க்கையை
பரிசாக தந்திடும் - இந்த
நன்றிகெட்ட சமுதாயத்தை
என்னவென்று சொல்லுவது?
அவர் தலையெழுத்தை
யார் இங்கு மாற்றுவது?

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (19-Dec-24, 5:28 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : ennavendru solvadhu
பார்வை : 39

மேலே