குட் பை

விடைக்கொடுக்கவோ
விடைப்பெறவோ நேரும் தருணங்களே
வாழ்க்கையின் மிகையில்லா
உச்சபட்ச வேதனை!

நியாயமின்றி ஓர் உறவு
நம்மை கைவிட்டிருப்பது தான்
விடைபெறுதலில் விளையும்
ஆகப்பெரும் உயிர் வலி.

என்னிடம் எதிர்பார்த்த
ஏதோவொன்று நம்பிக்கையிழந்த நிலைக்கு
உங்களைத் தள்ளியிருக்கலாம்

அபரிமிதமான உங்கள் தன்னலம்
அப்பழுக்கற்ற என் நேசத்தை
அழுக்கானதாக காட்டியிருக்கலாம்.

விரியுமென் தொழில்
உங்கள் விழிகளுக்கு
பொறா…மையைத் தீட்டியிருக்கலாம்.

வெட்டி விவாதம் கூட
உங்கள் கையளவு ஈகோவை
கடலளவு உசுப்பேற்றியிருக்கலாம்.

விரும்பத்தகாத ஒரு பழக்கம்
உங்கள் சகிப்புத்தன்மையின் தலைச்சொறிந்து
சங்கடம் உண்டாக்கியிருக்கலாம்.

காரணம் எதுவாகவேனும்
இருந்து போகட்டும்!

மன்றாடல்கள்…
தன்னிலை விளக்கங்கள்…
அனைத்தையும் கடந்தே
ஒரு விடைபெறுதல் முடிவு
உயிர் பெற்றிருப்பதால்…

கண்ணியத்துடன் அதை
அங்கீகரிப்பது தவிர
உங்களுக்கு நான் அளிக்கும்
ஆகச் சிறந்த கவுரவம்
வேறெதுவாக இருக்க முடியும்?

- ஜ. கோபிநாத்

எழுதியவர் : ஜ. கோபிநாத் (19-Dec-24, 8:45 am)
சேர்த்தது : Gopinath J
Tanglish : good bai
பார்வை : 2

மேலே