கற்பனையின் சூழ்ச்சி சொசாந்தி

#பாரதியார் பிறந்தநாள் விழா
#வானவில் பண்பாட்டு மையம்

#கற்பனையின் சூழ்ச்சி

இந்திய நாடெங்கும் ஓர் மொழிதான் - தமிழ்
எல்லோருக்கும் நல்ல வாய்மொழிதான்
வந்தனை செய்வாரைக் காணுகின்றேன்
வண்ணமொழித் தமிழ் தேனுமென்பேன்..!

சாதி மதமெனும் பேதமில்லை - இங்கு
சத்திய தர்மங்கள்
ஏறுநிலை
சூதுவாது மக்கள் காணவில்லை
சுந்தர வாழ்வினில்
சொர்க்கமெங்கும்..!

காசின்றிக் கல்வியைக்
கற்கிறார்கள் - ஏழை
காசுபணங் கண்டு
வாழ்கிறார்கள்
மாசில்லா மாந்தரு லகினிலே
மையங் கொண்டதன்றோ
இன்பமின்பம்..!

நாட்டில் தலைவர்கள்
மக்களுக்காய் - அவர்
நாளும் சேவைசெய்தே
நாயகராய்
கோட்டைக் கொடிமின்னி
வாழ்த்துரைக்கக்
கோவில்காணா தெய்வம்
ஆட்சியிலே..!

பச்சை வயல்வெளி
எங்குமெங்கும் - நல்ல
பண்ணை விவசாயம்
எங்குமெங்கும்
மொச்சை முல்லையொடு தானியங்கள்
மூன்றுபோகங் கண்டுக்
குன்றெனவே..!

சாயக் கழிவுகள் ஆற்றிலில்லை - விரி
சாலைக்கென நிலம்
சாகவில்லை
நோய்க ளொழித்திட்ட வாழ்வுகண்டார்
நுட்பச் செயல்களில் மேன்மைகண்டார்..!

உச்சிமுதல் உள்ளங் கால்கள்வரை - நகை
ஒய்யாரமாகவே சூட்டிக்
கொண்டார்
இச்சைக்கொண்ட கொடும்
கள்வரில்லை
இட்டமாய்ப் பெண்நட மாடுகிறாள்..!

காட்சி மறைக்கின்ற காரிருளில் - கன்னி
கற்புடனேநடை போடுகிறாள்
நீட்சிப் பெறுகின்ற நம்பிக்கைகள்
நீசர்கொன்ற இந்த
வையகத்தில்..!

போரின் முழக்கங்கள் ஏதுமில்லை - அந்தப்
பொல்லா வெடியொலி
எங்குமில்லை
ஓரினம் ஓர்குலம் ஒற்றுமையில்
உண்மையும் நேர்மையும்
ஊர்வலத்தில்..!

எங்களின் தேசத்தி லின்பமின்பம் - இதை
எண்ணி வியக்குது
இவ்வுலகம்
இங்கிதம் இல்லையோ
வானத்திற்கு
இடியைப் போட்டதென் கற்பனைக்கு..!

குத்திக்குத்திக் கண்ணில் நிற்குதைய்யோ - நீர்
குத்தூசிப் போலவே
இந்நொடியில்
அத்தனையும் வந்த கற்பனையா..?
ஆற்றுவா றின்றிப்பி தற்றுகின்றேன்..!

கற்பனை யின்பத்தில்
வாழ்க்கையெனில் - அதில்
காணும் பலனுண்டோ மானிடரே
குற்றங் களைந்திட வேண்டுமன்றோ
கூட்டு பலத்தினில்
நன்மையுண்டு..!

கற்பனையின் சூழ்ச்சியு டைத்திடுவோம் - களம்
கண்டேதான் காரிய
மாற்றிடுவோம்
பொற்காலம் காணப்போ ராடிடுவோம்
பொய்யும் புரட்டையும்
போக்கிடுவோம்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (18-Dec-24, 10:12 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 32

சிறந்த கவிதைகள்

மேலே