அவளும் அவனும்

முதலாய் காதல்
பூப்பதும்
முதல் காதல்
மணமாலை சேர்வதும்
வரம் தான்...

காதலின்
அழகான
நினைவுகளை
ஒன்றாய் கோர்த்த
பூ மாலையோடு
அவளும் அவனும்...

அவள் மனம்
எண்ணியபடி
மணமேடை
அவனோடு...

எண்ணம் எல்லாம்
எண்ணற்ற கனவின்
அலை வீச...

மனம் விட்டு
அவனோடு
அவள் பேச
இனி யொரு
தடையில்லை...

ஈடில்லா இன்பம்
காண
இணையோடு
இரவோடு
இனி அவள்
அவனோடு...

அவளின்
முகம்
சிவக்க
அவன் கை
அவள் இடை
அணைக்க...

அவன்
தழுவலில்
அவள் தனை இழக்க
காதல் மிதக்க
கொஞ்சம் காமம்
கலக்க...

முதல் முத்தம்
பதித்தான் அவன்..
அவள்
பூவிதழ் சேர்த்து...
அதிகாலை
அவள் முகம் பார்த்தே அவன் விழித்தான்..

அந்தி மாலை
அவன் வசம்
தனை முழுவதுமாய்
அவள் கொடுத்தாள்..

அவன் சுவாசம்
அவளாக..
அவள் நேசம் அவனாக...

கொஞ்சலாய்
கெஞ்சலாய்

நாளெல்லாம்
காதல் பூக்கள்
மணம் வீச...

இருமணமும்
ஒருமனதாய்
அன்பில் பேச...
நேரம் நகர்ந்தது...

நேரம் கடந்து
நாட்கள் நகர்ந்து
மாதம் செல்ல செல்ல...

புரிதல் குறைந்து
பிரியம்
பிரிவில் கலந்தது...

அவன் வருகை
தேடி தேடி
அவள் விழி
வாசல் நோக்கியே
தவம் இருக்க...

அவனோ
அவளை
புரியாதவனாய்
நேரம் தாழ்த்தி
வீடு செல்ல...

அப்படியே
இருவரும்
ஒரு வீட்டில்
ஒருவருக் கொருவர்
யாரோ போல்
வாழ...

காதல் காயமாக
தனித் தனி அறை
இருவரின்
இதழிலும்
ஒரே மெளனம்...

எண்ணிய வாழ்க்கை
எண்ணியபடி இல்லை...

அவள் எண்ணமோ
அவனை மறக்க
எண்ணவில்லை...

அவன் அவளை
புரிந்து
பிரிவை கடந்து
வந்து அவள்தன்
கரம் சேர்ப்பானா..

அவள்
கவலை மறந்து
காதலின்
கரை சேர்வாளா...

தனிமை
அவள்
இளமை வதைக்க...
அவனோடு
பேச அவள்
மனம் நினைக்க..

ஆனாலும்
தயக்கம் நிலைக்க...
இருவருக்கும்
இடையே பிரிவே
நீடித்தது...

அவனோ
மதி இழந்து
சிலமுறை
மதுவில் விழுந்தான்
அவள் தன்
நிம்மதி
இழந்தாள்...

அவளை
தேடித்தேடி
நாடி வந்த
அவன் காதல்
இன்று ,

அவளை
விலகிச் செல்வதை
எண்ணி எண்ணி
அவள் நெஞ்சம்
கண்ணில் நீராய்
உருக...

அவள் முகம்
பொலி விழந்து
அவள்
புன்னகை கூட
அவளுக்கு பாரமானது...

காதலின்
கரம் பிடித்தேன்..

இனி
அவனோடு
எந்நாளும் மகிழ்வேன்...

என்ற
அவளின் கனவு
கனவாகவே
கலைய...

அவனோ
சிலமுறை
பேசமால்
சென்றான்...
பலமுறை
பேச்சால் கொன்றான்..

காதல்
கானல் நீராக..
அவளின் ஆசை
காற்றோடு கரைய...

தன் நிலை
எண்ணி எண்ணி
துயரில் வீழ...

வாழ்வே
வெறுத்து
உயிர் நீக்கவும்
துணிவில்லா
கோழையாய்
அவள் ஆக...

இந்நிலை
இப்படியே நீள
மாதம் வருடம் ஆனது
ஆனாலும்
அவன் போக்கில்
மாற்றம் இல்லை...

அவளும்
அவன் மீதான
காதலில்
மாறவில்லை...

எந்த ஒருநாள்
அவன்
அவளின்
கரம் பிடித்து
நீ எனக்கானவள்
நான் உன்னுடையவன்
என்றானோ
அந்த திருமண நாளின்
முதல் வருடம்
அன்று...

எழுந்தாள்
விழி நீர் துடைத்து
முகம் கழுவி
நெற்றி பொட்டிட்டு
அவன்
வருகை நோக்கி
பார்த்திருந்தாள்..

இன்று தன்
மனம் விட்டு அவனோடு
உரையாட
அவனை
எதிர் பார்த்து
காதலோடு....

அவன் வந்தான்
அறைக்கு சென்றான்
அவளும்
பின் சென்றாள்..

ஒரு நிமிடம்
என்றாள்,
நின்றான்
அவள் முகம்
பார்க்காமல்
தரை பார்த்து...

அவள்
கேட்டாள்
எனை மறந்து விட்டாயா?
என்று,
அவனிடம்
பதில் இல்லை..

நான்
உன்னை விட்டு
செல்லவா ?
சொல் என்றாள்
ஏதும் பேசாது நின்றான்...

உன் மெளனம்
சொல்லும்
வார்த்தை என்ன
என தெரியவில்லை..

என் மனம் சொல்லும்
வார்த்தை கேள்
என்னவனே..

விட்டு செல்வதில்லை
காதல்
விட்டுக் கொடுத்து
வாழ்வது...

பிரிந்து செல்லவா
என்னை
விரும்பி
நீ காதல் செய்தாய்...

தவறு செய்தவள்
நானாக இருந்தால்
என் தவறை
மன்னித்து
என்னோடு
மனம் விட்டு
பேசிவிடு...

இல்லையே,
உனக்கு நான்
வேண்டாம் என்றாள்
இன்றோடு
கூறி விடு..

அவள்
அவனிடம்
தனை மறந்து
பேசிக்கொண்டே போக..

அவனோ எதுவும்
பேசாமலே
மெளனமாய்
நிற்கலானான்.

அவனின்
மெளனமொழி
அவளை
என்னவோ செய்ய..

அவள் விழிகளில்
கண்ணீர் மழை...

அதுவரை
சிலையென
நின்றவன்,

அவள் விழி வழியே
வழிந்த கண்ணீர்
கண்டு
மெளனம்
கலைத்தான்...

என்னை
மன்னித்து விடு..

நான் உன்னை
காயப்படுத்தி விட்டேன்
என்றான்...

சில நொடி,
அவள்
அவளை மறந்து

அவனை நோக்கினாள்...

அவன் பேசிவிட்டான் ..

என்ன சொல்ல
என்று
அறியாதவளாய்
கண்ணீர் வழிய
ஒரு ஓவியமாய்
அவன் முன் நின்றாள்...

சட்டென அவன்
அவளை தன் வசம்
இழுத்து..
இடை இறுகப் பற்றி
காற்றுக்கும்
இடைவெளி இன்றி
அணைத்தான்...

அந்த
அணைப்பில்
இருவரின் மெளனமும்
கரைந்தோட...


மறுமுறை
இருவரும்
காதலில்
காதலோடு காதலாக...

காதல் காயமோ
மாயம் ஆக...

இதோ ,

காதல் பயணத்தில்
அவளும் அவனும்...

எழுதியவர் : Karthika kani (19-Dec-24, 7:45 pm)
சேர்த்தது : Karthika kani KK
Tanglish : avalum avanum
பார்வை : 49

மேலே