உயிர் பிரிந்தவுடன்
உயிர் பிரிந்தவுடன்
நானும் என் மனைவியும் கேரளாவில் உள்ள கல்பாத்தி கிராமத்தில் என் அப்பா அம்மாவுடன் வாழ்த்து வந்தோம்.நான் அங்குள்ள விக்டோரியா கல்லூரியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவந்தேன். என்பெயர் கல்யாணராமன். என்னைச் சிலர் கல்யாணம் அல்லது ராமன் என்று பெயரை சுருக்கி அழைப்பதும் உண்டு.
நானும் என் மனைவி மைதிலியும் அந்த கிராமத்தில் உள்ள அனைவரிடமும் நல்ல முறையில் பழகி அவர்களை உறவினர்களைப் போல் கருதி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தோம். என் அப்பா அம்மாவிற்கும் அந்த கிராமத்தில் ஒரு முக்கியத்துவம் உண்டு அவர்கள் இருவரும் ஆயுர்வேத வைத்தியர்கள். அனைவருக்கும் தங்களால் இயன்ற அளவிற்கு உதவி செய்து அவர்கள் உடல் நலனைக் காத்து வந்தனர்.
அக்கம் பக்கத்துக்குக் கிராமத்தில் இருந்தும் நோயுற்றவர்கள் அவர்களைக் காண வருவதுண்டு.
எங்களுக்கு திருமணம் ஆனபிறகு பல வருடங்கள் குழந்தை இல்லை என்ற ஒரு குறை அவர்களது மனதைச் சிறிது கலங்க வைத்திருந்தது. அதற்காக பல ஆலயங்களுக்கு எங்களை போகச் சொல்லி வழிபாடு செய்யச் சொன்னார்கள். இறைவன் ஒரு நாள் எங்கள் பிராத்தனையை நிறைவேற்றினான். எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை நலமுடன் பிறந்தது. குழந்தை பிறந்ததை ஒட்டிச் செய்த நிகழ்வுகளில் அந்த கிராமமே திரண்டு வந்து கலந்து கொண்டது. இவ்வாறு நாட்கள் எங்கள் வாழ்வில் வசந்தத்தை என் மகன் பிறந்தது மூலம் வீசியது. என் தாய் தந்தையரும் மனைவியும் மிக மகிழ்ச்சியாக குழந்தையை வளர்த்தனர் என்று சொன்னால் அது முழுமையான வார்த்தைகள் ஆகாது அந்த கிராமமே அவனை வளர்த்தது என கூறவேண்டும். வீட்டில் குழந்தை இருந்தால் அதை யாராவது இடுப்பில் எடுத்து கொண்டு தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று அன்பைக் காட்டி உணவளித்து தூங்கச் செய்து என் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். மைதிலிக்கு இதனால் குழந்தை வளர்ப்பில் எந்தவித சிரமமும் இருக்கவில்லை. என் அப்பாவும் அம்மாவும் வீட்டில் மருத்துவ மனையில் இருந்து வந்ததும் அவனிடம் விளையாடி நல்ல நீதிக் கதைகளும், ஸ்லோகங்களும் கூறி அவனைக் கொஞ்சுவார்கள். நான் கல்லூரியில் இருந்து வரும் நேரம் அவன் என்னிடம் வந்து சில நிமிடங்களில் உறங்கி விடுவான்.
இறைவன் எங்களுக்கு மகிழ்ச்சி என்பதன் முழு அர்த்தத்தை புரிய வைத்து எங்களின் வாழ்க்கையைப் பூர்ணத்துவமாக்கினார். கிராமத்தில் எங்கள் இல்லத்தில் ஒவ்வொரு தினமும் உணவு உட்கொள்பவர்கள் எண்ணிக்கை என் மகன் பிறந்த பிறகு அதிகரித்தது. மைதிலியும் என் அம்மாவும் சமையல் செய்து வந்தவர்களை கவனித்து உணவளிப்பார்கள். என் மகனும் இந்தச் சூழலில் வளர்ந்ததால் அவனும் யாரிடம் பேசினாலும் வீட்டிற்கு அழைத்து வந்து சாப்பிடச் சொல்லுவான். அவன் வளர்ந்து பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தான். பள்ளியில் அவனுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர். ஆகவே அவனுக்கு பள்ளிக்கூடம் செல்வது மிகவும் பிடித்திருந்தது. அவன் பள்ளியில் நன்றாக படித்து வருகிறான் என்ற செய்தியை எங்கள் இல்லத்திற்கு வந்து ஆசிரியர்கள் கூறிய பொழுது மனதிற்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. வருடங்கள் உருண்டோடின மகன் இப்பொழுது மூன்றாவது வகுப்பிற்கு வந்து விட்டான். என்றும் போல் அன்றும் நாள் விடிந்தது. என் காலை உணவை முடித்து விட்டு கல்லூரிக்குச் சென்றேன்.உடம்பில் ஒரு சூடு பரவியதுபோல் உணர்ந்தேன். கல்லூரியில் சென்று நாற்காலியில் அமர்தேன் என் உடம்பு முழுதும் சிவப்பாகி தடிக்க ஆரம்பித்தது. வேர்வை கொட்ட என் முகம் உதடுகள் கண்கள் யாவும் காற்றடைத்த பைபோல் பெரிதாகி முகமே காணாத ஒருநிலை.
என்னை பார்த்தவர்கள் உடனே என்னை எடுத்து காரில் அருகில் உள்ள மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல அங்குள்ள மருத்துவர் உடனே ஒரு ஊசியைச் செலுத்தி இது அலர்ஜி அட்டாக் உடனே அவசர பிரிவில் சேர்க்கவும் எனக் கூறிட அங்கே எடுத்துச் சென்றனர். அங்கு உள்ள மருத்துவர்கள் என்னை மருத்துவ மனையில் ஒரு நாள் வைத்து வைத்தியம் செய்ய வேண்டும் எனக் கூற அவர்கள் என்னை அங்கு விட்டு விட்டு சென்றனர். கல்லூரியில் என்னுடன் வேலை செய்பவர்களின் இந்த செயலுக்கு நான் நன்றி தெரிவித்தேன். அதன் பின் மருத்துவர் வந்த பொழுது எனக்கு நினைவு தப்பியது. அவர் வந்து என் நாடியை பரிசோதிக்க அது மிக மோசமாக உள்ளது என்று அறிந்து எனக்கு பிராணவாயு கொடுக்கச் சொல்லி செவிலியரிடம் கூற அவள் அதை எடுத்து வந்து என் மூக்கில் பொறுத்த முற்படும் நேரம் அவள் என் உயிர் பிரிந்து விட்டது என அறிந்து கொண்டாள்.
அன்று மத்தியான வேளையில் கல்லூரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு பலகையில் தலைமை ஆசிரியர் ராமன் இறந்து விட்டார் என்று எழுதப்பட்டு இருந்தது. அவருக்கு எப்படி இவ்வாறு நடந்தது வயது 40 கூட ஆக வில்லையே என்று பலரும் பேசிக் கொண்டு கண்களில் கண்ணீருடன் கல்லூரியை விட்டு சென்றனர்.
வீட்டில் என் உடம்பை மருத்துவ மனையில் இருந்து கொண்டுவந்தது ஒரு ஆம்புலன்ஸ். அதன் பின் நடந்தவைகளைக் கவனிக்கலாம்
மனைவி மைதிலி, ஒன்பது வயதான மகன்,பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி கதறி அழுது கொண்டிருந்தனர். இந்தக் குடும்பத்துக்கே குருஜியாக விளங்கும் பரமேஸ்வரப்பணிக்கர் அங்கு அப்போது வந்தார். அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்.
ராமனின் மனைவி சொன்னாள் ”குருஜி! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டு விட்டுப் போய் விட்டாரே? நான் என்ன செய்வேன்?அவர் உயிருடன் வருவாறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்”
என்று கூறி அவள் அழுவதைக் கண்ட பெற்றோர்களும் அதை ஆமோதிக்கும் விதமாக அவளுடன் சேர்ந்து தலையை அசைக்க
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார் ஆனால் அவர்கள் சோகம் சிறிதும் குறையவில்லை. குருஜி சிறிது நேரத்தில் அவர்களிடம் "ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்” எனச் சொல்ல தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார். கண்களை சிறிது நேரம் மூடி கொண்டிருந்து விட்டு
பின் சொன்னார்” ராமன் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம். ராமன் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்” எனக் கூறிட அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை. குருஜி ராமனின் தந்தையைக் கேட்டார்” ஐயா! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா?”
தந்தை சொன்னார்” நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு?அவளுக்காக நான் வாழ வேண்டும்” என அவர் கூறினார்.
பின்னர் குருஜி அவன் தாயைக் கேட்க அவள் சொன்னாள்” அடுத்த மாதம் என் மகளுக்கு மகப்பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது?” எனச் சொல்லி அவள் தலையை திருப்பி கொண்டு விம்மினாள்.
குருஜி பின் அவன் மனைவியிடம் கேட்டார் நீ சொன்னாயே அந்த சந்தர்ப்பம் இப்பொழுது உன்னிடம் எனக் கூற மனைவி சொன்னாள்” நான் இறந்தால் என் மகனை யார் கவனித்து வளர்ப்பது? அவனுக்காக நான் வாழ வேண்டும்” எனக் கூறினாள் குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்”குழந்தாய்,உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?”
அவன் பேசுவதற்கு முன்னாலேயே அவன் தாய் மைதிலி அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு சொன்னாள் ”குருஜி,உங்களுக்கென்ன ஆகிவிட்டது அவன் ஒரு சின்ன குழந்தை,அவனது வாழ்க்கையே இன்னும் தொடங்கவில்லை அவனைப் போய் நீங்கள் இதைக் கேட்கலாமா?” என வினவினாள் சிறிது பயத்துடன்.
குருஜி சொன்னார்” உங்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு கடமை, பொறுப்பு என்று இருக்கிறது இதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் . அப்படியானால் ராமனுக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” எனக் கூறிவிட்டு
அவர் எழுந்து சென்று விட்டார்.
பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் அவன்.
எந்தப் பூவை எப்போது பறிக்க வேண்டும் என்பது அவன் எடுக்கும் முடிவு.
நாம் யார் அதைக் குறை சொல்ல? கேள்வி கேட்க?
“நாம் ஒரு செடிக்கு அதில் பச்சை இலைகள் இருக்கும் வரையில்,தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறோம், இலைகள் வாடிப்போய், அது உயிரற்ற குச்சியானால் அதை நாம் கவனிக்கப் போவதில்லை.
”உயிர் இருக்கும் வரை தான் அன்பு,பாசம் எல்லாம் ”பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே”.
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் யாவரும் கடைசியில் மலர்களைக் கொண்டு அஞ்சலி செலுத்துவர் என்பதை தெளிவாக்குகிறது
வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ
என்று எழுதிய கவியரசர் எவ்வளவு அழகாக இந்த இரண்டு பாடல் வரிகளிலும் உண்மையை தெளிவாக கூறியுள்ளார் என்பதை நினைக்கும் பொழுது கண்கள் குளமாகிறது.