சினத்தை அடக்கினால் சிகரமாய் உயர்வாய்

சினத்தை அடக்கினால் சிகரமாய் உயர்வாய்.

தனம் இருந்தென்ன தகவற்ற குணம்
சினம், கனம் கவலை தரும்.
தினம் தொல்லை, தாக்கம், பெரும்
கனவுகள் காற்றோடு அடித்துச் செல்லும்.

வனப்புடை மானிடத்தின் கொள்ளிவாய்ப் பிசாசு
வினயம் மிகு சுனாமி அலை.
இனத்தையும் அழிக்கும் முயலாமை, இயலாமையால்
மனித நந்தவனத்துள் சொரியும் அனல்.

காரமிகும் சினம் சூழ் வாழ்வு
தாரம் தனயன் வாழ்வையும் அழிக்கும்.
சாரமிகு உறவுகள் சிதைக்கும். அரசன்
இராவணன் சினம் இலங்கையை அழித்தது.

சினம் அடக்கில் சீறுமுன் சக்தியாதலால்
சினமெனும் மலையால் குப்புற வீழாது
மனமெனும் மாளிகை அமைதியால் கட்டு!
ஐனனமீடேறும் அறிவுப் புனலாலழி சினத்தை.

சின்னத்தனமிது! விலக்கு! அமைதி மெழுகும்!
அன்பொழுகும் மொழியால் ஆரத் தழுவு.
நன்மையால் கடைந்த வார்த்தைகளைக் கொளுவு.
இன்பமாய் இதமாய் உயிர் தழுவும்.

கணப் பொழுதும் காத்திடும் சினத்தால்
மணம் பெறுவாய் உயரோட்டச் சமூகத்தில்.
பணம் தராத நிலையும் அடைவாய்.
கணம் சினம் உன் குணமழிக்கும்.

மலர்ந்து நுகரும் வாழ்வுத் தோட்டம்
உலர்த்தும் குணம் மறத்தல் ஊட்டம்.
பலர் சினக் கழிவில் முக்குளித்து
புலர் விடியலை அனுமதிக்காது கொப்புளிக்கிறார்.

துச்சமாய் இருள் வனத்துளுன்னைத் தள்ளி
எச்சங்களில் நடக்கும் வாழ்வாய் சினமுன்
உச்சம் எரிக்கும் அச்சம் அகற்று!
மச்சமுடன் புகழ் முத்துக் குளிப்பாய்!

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11 - 2016

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம். டென்ம (21-Mar-17, 3:59 pm)
பார்வை : 126

மேலே