விடியலில் கரைந்த இரவு

விடியலில் கரைந்த இரவு.

இரவுகள் மெல்ல மெல்லக்
கரவுகிறது விகசிக்கும் விடியலில்.
பரவிடும் செயற்பாடுகள் பவ்யமாய்
இரவரங்க மேடையில் ஓய்வெடுக்கிறது.

மற்றுமொரு புது விடியல்
அற்புத ஓய்வில், தன்னம்பிக்கை
ஏற்றும் பேரொளிப் புத்துணர்வாகிறது.
நேற்றைய கவலைகள் கடுகாகிறது.

இரவெனும் போர்வை சீவன்களிற்கு
இரசவாதமிடும் காய கற்பம்.
இரட்சணியம் தரும் வலை.
அரவணைக்கும் பஞ்சுப் பொதி.

இயற்கையின் விந்தையாம் இரவு
மயற்கையற்ற பூமியின் தரவு.
பிரச்சனை வனாந்தர நெருப்பிற்கு
சிரச்சேதம் தரும் இரவு.

விடியலில் தரை தட்ட
அடியெடுக்கும் புதுத் திட்டம்.
படிமானமாக்கி எதையும் தடவிடுமிரவு
அடிவானம் அத்திவாரமமைதி வாழ்விற்கு.

கசங்கிக் கலங்கி மனிதன்
கரைந்திடுவான் அறிவீர் இரவின்றேல்!
வரையிலாப் பொறுமையுடை தாயாகிறது
நிகரிலா விடியலில் கரையுமிரவு.

காற்றில் வாசனை கலத்தலாய்
ஆற்றில் அசுத்தம் கரைதலாய்
ஊற்று மலை உயரமாய்
தேற்றுகிறதுயிர்களை விடியலில் கரையுமிரவு.

( 1.கரவு – மறைதல் 2.இரசவாதம் - தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகமாக்கும் வித்தை. 3.இரட்சணியம் - காப்பு, மீட்பு. 4. மயற்கை – மயக்கம். 5. விகசிக்கும் - மலர்தல். 6. காய கற்பம் - உடல் நிடித்திருக்க உண்ணும் மருந்து. 7. படிமானம் - கீழ்படிதல், தணிவு)
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்
டென்மார்க்

எழுதியவர் : (21-Mar-17, 3:45 pm)
பார்வை : 55

மேலே