காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்

காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.

எது எது எங்கிருக்க வேண்டுமோ
அது அது அங்கிருப்பது சிறப்பு.
துளசிச் செடிக்கு வீட்டு மாடமானால்
வளர்வதில் பயன் பாழே காட்டிலானால்.

தீயோர் நட்பைத் தீயெனக் கண்டு
தீண்டாது விலகித் தீயெனத் தாண்டு.
தீரமான அறிவாளரைத் தீராந்தியாகக் கொண்டு
தீவினையற்றோரை தினம் மகிழ்ந்து தீண்டு.

சின்னத்தன மனிதர் நட்பில் சிரிப்புத்
தேன் ஊற்றி தேள்கள் போடுவார்
குன்றென உயராதவர் குறுஞ் சுவராவார்
அன்னவரும் காட்டு வாழை மனிதர்களே.

நதியினையணையும் கூழாங் கல்லாக அன்பை
சதிபதியாகக் கொண்டு மனிதநேயம் போர்த்திய
மதியுடையோரைத் தேடி நல்ல உறவுக்காய்
துதிக்கிறேன் மனதில் துன்பமற்ற வாழ்வுக்காய்.

ஈர முகிலின் குளிர் தூவானமாய்
பாரமற்ற நேச மனவுறவு இணையும்
சாரமுடை வாழ்வின் துணையை நாடும்
நேரம் என்றும் இணைவது அதிட்டம்.

உறவின் மகத்துவம் புரியாது கையிணைக்கும்
உறவால் உறவு வண்ணங்கள் மங்கலாகும்.
இறக்கை ஒடுங்கி நிலைமை சிறையாகும்.
இறப்பற்ற நேசம் நீவுதலே இன்பம்.

பூச்சொரியும் மனம் கருகாது மதுரசமாய்
பூந்துளிர்கள் சிந்த பூரிக்கும் மனமுடையோரை
பூணாரமாய் (அணிகலனாய்) நட்பு செய் நன்மையுறும்.
பூதல வாழ்வும் மேன்மையுற்று மகிழ்வாய்

உயர்வு தாழ்வு நன்மை தீமையுண்டு
அயர்வின்றித் திருத்தமாய் அளந்து பார்!
வியர்வை சிந்த உழைத்து உறவாடு!
துயரற்ற வீட்டு வாழ்வு சிறக்கும்!.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
12 - 2017

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம். டென்ம (21-Mar-17, 4:08 pm)
பார்வை : 147

மேலே