கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு

கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு.

வில்லில் இருந்து விடுபட்ட கணையாம்
கல்லும் (வன்)சொல்லும் ஒரே வினையம்.
சொல்லிற்கு உறுதி சிறந்த பல்லு.
பல்லு போனால் போகும் சொல்லு.

அன்பான சொல் சடுதியாய் முகிழ்த்தும்
இன்பிக்கும் இசையோடு பிணைதல் போலும்
அன்ன பல சூட்சும தாக்கங்;களாக்கும்.
வன்சொல் புதைக்க முடியாத கல்.

பொன்னகரம் அழைத்தேகும் அமைதிச் சொல்
அன்புப் பெருவெளி நகர்த்தும் சொல்
புன்னகைப் பூந்தளிர் தெளிக்கும் பூவனம்.
ஆன்மிகக் கடை திறக்கும் ஆலிங்கனம்.

'' தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு '' திருக்குறளே
பாவினார் திருவள்ளுவர். உதட்டால் உதிர்ப்பார்
பாவியர் முள்ளான சொல் உள்ளாறாதது.

ஐம்புலன்களை வென்ற குற்றமற்றவர் ஐசுவரியமாய்
ஐயமின்றி இன்னமுதச் சொல்லை உமிழ்வார்.
ஆணவம் பொறுமையற்றவர் சினமோங்க ஏந்துவார்
ஆயுதமாகப் பிறரைக் காயமாக்கும் கல்.

கல்லு விட்டால் நொறுங்கும் கண்ணாடி
சில்லு சில்லாக ஆகிடும் யன்னல்
மினா பள்ளத்தாக்கிலும் விடுகிறார் கல்லு.
கல் கவணெறிந்தால் குருவியும் நில்லாது.

நிதானம் இழந்து தன்னைக் காக்க
சூதானமற்ற சொற்கள் மனிதன் ஆயுதமாகும்.
ஆதனமாய் கருதும் உயிர் மொழிச்
சொல் கல்லாக, கூர் அம்பாக.

நெஞ்சச் சுவரில் அறையப்படும் வன்சொல்
பஞ்சல்ல இருள் போர்த்தும் சொல்.
வஞ்சகச் சொல் பொல்லாதது பாறாங்கல்.
சொல் விடாதோர் மௌனி, மதியூகி மட்டி.

சொல்லைக் கூட்டாக விட்டாலும், பல்லு
பல்லாகப் பிரித்தாலும் கருத்துகள் மாறுபடும்.
சொல்லெறிதல் அஞ்சல் ஓட்டமாகவும் தொடரும்.
அல்லல் தருமளவு பெரிதாகவும் நீளும்.

சுகமாய்ப் புரண்டு விழும் சொல்
அகத்தில் வெள்ளிக் கொலுசாகக் குலுங்கும்.
இகத்தில் நல்ல சொல்லை விட்டு
சுகமுடை உலகத்தை நாளும் சமைப்போம்.

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்
1 - 2017

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம் டென்ம (21-Mar-17, 4:19 pm)
பார்வை : 72

மேலே