ஏனித் தொழிலோ

காலை இரயில் நிலையத்தில் ஒருவரைப் பார்த்ததும் எழுந்த கவிதை....

#ஏனித்_தொழிலோ
மானிடனே!!??

கையும் காலும் நன்றிருக்கக்
. கையை நீட்டி இரந்திங்கே
மெய்யை வளர்த்து, மேதினியில்
. மேன்மை என்ன செய்திடுவாய் ?

உய்யும் மார்க்கம் அறியாதான்
. உயிர்வாழ் வதிலே பயனென்ன ?
வெய்யில் மழைக்குத் தாங்காத
. வேர்தா னிருத்தல் வீண்தானே !

உழைத்துப் பிழைக்கும் வழியினைத்தான்
. உலகில் மறந்து வாழ்வதுவோ ?
அழைத்துக் கதறி அனுதினமும்
. அடுத்தார் உழைப்பில் வாழ்வதுவோ ?

தழைக்கும் உலகில் உழைப்பின்றி
. தர்மம் தர்மம் எனச்சொல்லிப்
பிழைத்துக் கிடத்தல் சரியாமோ ?
. பிழையைத் தினமும் புரிவாயோ ?

இரந்தும் உயிர்தான் வாழ்வதெனின்
. இறையும் இரந்து கெடுகவெனும்
உரைசால் வள்ளு வக்கவிஞன்
. உரைத்த மொழியை நானுரைப்பேன் !

விரைவா யுழைக்க எழுந்துவிடு
. விதமாய்த் தொழில்கள் இங்குண்டு !
கரத்தே காசை ஏந்தாமல்
. காய்க்கும் காப்பை ஏந்திவிடு !

உடலில் வியர்வை முத்தாகும்
. உழைப்பே வாழ்வின் வித்தாகும்
கடமை புரிந்த திருப்தியிலே
. களைப்பும் கூடக் களிப்பாகும்

மடமைச் செயலை நீவிடுப்பாய்
. மரியா தைக்காய் நீயுழைப்பாய் !
உடனே உழைக்க எழுந்துவிட்டால்
. உலகக் கைகள் உனைதொழுமே !

- விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (26-Mar-17, 11:47 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 21

மேலே