சஞ்சலம் ஏன்

**************
சஞ்சலஞ் சூழ்ந்திடும் சங்கட வாழ்வினில்
நெஞ்சுரங் கொண்டெழுந்து நில்
*
நில்லெனச் சொல்லியும் நில்லா திருந்தந்த
மெல்லிய தென்றலை மிஞ்சு
*
மிஞ்சுமுன் னாற்றல் மிடுக்காகும் வண்ணம்செய்
அஞ்சாமைக் கில்லை அணை
*
அணைதாண்டும் வெள்ளம் அடர்பச்சைக் கென்றும்
துணைநிற்கு மேகாந்தத் தூண்
*
தூணாகி நின்றுதவித் தோள்கொடுக்கும் போதினிலும்
நாணலதன் கொள்கைதனை நாடு
*
நாடுமுயர் எண்ணமொடு நாடுயர வேண்டுமெனப்
பாடுபடு வார்புகழைப் பாடு
*
பாடுமெழில் பாக்களிலே பாமரனின் துன்பமெலாம்
ஓடும் வழிசமைத்து ஓது
*
ஓதுமுயர் வேதமெலாம் ஓதுவது வொன்றேதான்
தீதுவர லாகா தது
*
அதுவழி நீநடந்து ஆகாய மாகிப்
பொதுவாய் ஒளிசிந்திப் போ
*
போனவர்கள் போகட்டும் பூமியினி பூக்கட்டும்
தேனருந்த ஏன்சஞ் சலம்.
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-May-24, 1:51 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 54

மேலே