மஞ்சள் நிலவு
மஞ்சள் நிலவு !
கவிதைப் பொழிவு !
காக நிறத்தினைக் கொண்ட விசும்புடன்
. கான மிசைப்பவளே - நிலவே
மேக மிழுத்து முகத்தை மறைப்பது
. மேனடி வெண்ணிலவே ?
மீன்கள் குதிக்கு மிரவுக் குளத்தில்
. மிளிர்ந்திடு மல்லியடி ! - நிலவே
தேன்கள் கவிகளை என்னுள் நிரப்புவ
. தேனடி வெண்ணிலவே ?
வந்த வொளிகடன் வாங்கிய தென்றிடும்
. வாக்கினை நம்பவில்லை - நிலவே
இந்த அழகும் இரவலில் நேர்வதோ ?
. இன்பத்து வெண்ணிலவே !
காலத்தி னாலுரு தேய்ந்து வளர்ந்திடும்
. காரிகை யொத்தவளே - நிலவே
நீலத் திரைகடல் பொங்கிட வைப்பதென்
. நீசொல்லு வெண்ணிலவே !
என்னடி சூக்குமம் ? என்னென்ன மந்திரம் ?
. என்னென்ன செய்யுகிறாய் ? - நிலவே
என்றனைக் கிள்ளிவிட் டேநின்று பார்க்கிறாய்
. ஏகாந்தம் பெய்யுகிறாய் !
நீளும் கவிதையின் நீள மெடுத்ததை
. நேரில் நிறுத்துகிறேன் - நிலவே
ஆளும் உனையள்ளி அங்கையிற் பொத்திட
. ஆவன செய்யுகிறேன் !
பேதை இவனென்று நீயும் முகிலிடை
. பேருரு பொத்துகிறாய் ! நிலவே
வாதை தருமுன்றன் வண்ணத் தியல்பினில்
. வார்த்தைகள் தத்துதம்மா !
-விவேக்பாரதி