மண்ணழகு பெருகிட

உடலழகு என்றென்றும் நிலைக்க வேண்டின்
உடற்பயிற்சி செய்திட்டால் நலமே ஆகும்
கடலழகைக் களித்திட வேண்டு மெனின்
கடல லைகள் நம்பாதம் தொடுதல் வேண்டும்!
படமழகைப் பார்த்துதான் ரசிக்க வேண்டின்
பலவண்ண சித்திரங்கள் காணுதல் வேண்டும்!
தடம்பதித்து வரலாற்றில் நிற்க வேண்டின்
தன்னலத்தை குறைத்தே வாழ வேண்டும்

மனமழகு பொலிந்திட வேண்டு மெனின்
மனதிலே நல்லெண்ணம் தோன்ற வேண்டும்!
குணமழகு கூடிடத்தான் தேவை யென்றால்
கொடுத்து தவும் நல்பழக்கம் வேண்டு மன்றோ!
விண்ணழகை வியந்துதான் நோக்க வேண்டின்
விண்மீன்கள் நன்றாக மின்ன வேண்டும்
மண்ணழகு பெருகிடத்தான் இந்த நாளில்
மகத்தான விவசாயம் செய்தல் வேண்டுமே!

கவிஞர் கே. அசோகன்.

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (3-Apr-17, 8:13 pm)
பார்வை : 155

மேலே