கல்யாணமே இரு மனதோடுதான் -------- பகுதி 2
பகுதி 2
மதியம் சேவை மையம் வெப்பத்தில் தகதகத்தது. கணிணி வெளியிட்ட வெப்பம் நீ ஓடு என்று செங்கமலத்தை விரட்டியது.
இரண்டு ஐம்பத்தைந்துக்கு நச்சென்று வந்து பயோமெட்ரியில் கைரேகை பதித்த அஜந்தாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் செங்கமலம்.. “ ப்ளீஸ்.. ப்ளீஸ்.. பித்த ப்ளீஸ்.. அஜந்தா, ”
அஜந்தா அலுத்துக் கொண்டாள்..
“ உன் கூட இதே வேலையாப் போச்சு... போன மாசம் செகண்ட் ஷிப்ட்டுக்கு வந்துறேன்.. காலைல பாத்துக்கோன்னே.. வரவே இல்ல.. இப்ப அஞ்சு நாள் ஃபுல் டியூட்டி பார்க்கச் சொல்ற.. ”
ராமாயணத்து ராமனிடம் நிறைய அம்புகள் இருந்தனவாம்.. அரக்கர்களுக்கு ஒரு அம்பு, கும்பகர்ணனுக்கு ஒரு அம்பு, ராவணனுக்கு ஒரு அம்பு...
அஜந்தாவுக்கான அம்பு அம்பறாத்துணியில் எங்கே இருக்கிறது ராமா ???
“ வேணும்னா வராம இருந்தேன்? பெண் பார்க்க வந்தவங்க காலைல பதினோரு மணிக்கு வரதா சொன்னாங்க.. மதிய டியூட்டிக்கு வந்திடலாம்னு நெனச்சிட்டிருந்தேன். படுபாவிங்க நாலு மணிக்கு வந்தாங்க.. தாமதமா வந்ததுக்கு ஸாரி கூடக் கேக்கலே.. ஆனா அஜந்தா, இது படிக்கிற விஷயம்... நான் கண்டிப்பா போய்த்தான் தீருவேன்.. நீ டியூட்டி பாத்தா பாரு.. இல்லாட்டி விட்டுடு.. ரெண்டு வார சம்பளம் கட்டாகும்..! நீ சாப்ட மாதிரியும் இருக்காது.. நான் சாப்பிட்ட மாதிரியும் இருக்காது.. கம்பெனி கொழுக்கும்... அவ்ளோதான்..! ”
அம்பு பாய்ந்தது.
செங்கமலம் பணி முடித்து தன் வீட்டுக்குப் போகுமுன் தோழி தேவிகாவின் வீட்டுக்குத்தான் போவாள்.. தேவிகா இருக்கப்பட்ட வீட்டின் ஒரே பெண்.. பெங்களூரில் பிளாஸ்டிக் தொடர்பான படிப்பொன்றில் சேரத் திட்டமிட்டிருந்தாள் அவள். காத்திருப்போர் பட்டியல் நகர்ந்து கொண்டிருந்தது. ஆயிற்று.. இன்னும் இரண்டு பேர்.. இப்போதைக்கு வீட்டில் சும்மாதான் இருக்கிறாள்.. அப்பா வக்கீல்..
தேவிகா செங்கமலத்தை செங்க்ஸ் என்றுதான் கூப்பிடுவாள்.. செங்கமலம் அவளிடம் மட்டும்தான் அவளாக நடந்து கொள்வாள்.. மனம் விட்டுப் பேச முடிகிற தோழி அவள்.. தேவிகாவின் தனியறையில் பெண்கள் இருவரும் ஒருவர் தொடை மேல் இன்னொருவர் தொடை போட்டு அரசியல் முதல் அந்தரங்கம் வரை மனம் விட்டுப் பேசுவர்.. தேவிகாவிடம் பேசப் பேச செங்கமலத்துக்கு புத்துணர்ச்சியும் புதுத் தெம்பும் கிடைத்து விடும்..
புதுத் தெம்போடு வீட்டை நோக்கி நடந்தாள் செங்கமலம். “ ரெண்டாயிரம்தானே, நான் தர்றேன் ” என்று தேவிகா சொன்னதுதான் அந்த புதுத்தெம்புக்கு காரணம்.. உடனே பணத்தை தேவிகாவிடமிருந்து செங்கமலம் வாங்கியிருப்பாள் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.. தேவிகாவின் வார்த்தை செங்கமலத்துக்கு பலத்தைத் தரும்.. அந்த பலத்தை வைத்து மல்லு கட்டி தனக்கு வேண்டியதை அவள் அடைவாள்..!
அடுத்த தடங்கல் வீட்டில் காத்திருந்தது.
“ செங்கமலம்.. மூணு வெள்ளிக்கிழமை பக்கத்து ஊர் ராஜேஸ்வரி கோயிலுக்குப் போயி வேண்டிட்டு வந்தா கல்யாணத் தடை நீங்கிடுமாம்.. உங்க அப்பா சொன்னார். போயிட்டு வந்துடு” என்றாள் தாய்..
“ ரெண்டு வாரம் போறேன்.. மூணாவது வாரம் எனக்கு கான்டாக்ட் க்ளாஸ்மா ” என்றாள் செங்கமலம்.
“ கான்டாக்ட் க்ளாஸ்தானே? நானென்னவோ “செகப்பு நாளோ”ன்னு நினைச்சேன்.. ஒரு வயசுப் பொண்ணு மூணு வாரம் தொடர்ந்து கோயிலுக்குப் போறா மாதிரி அமையாது.. அப்படி அமைஞ்சா நீ கோயிலுக்குத்தான் போகணும் ! !” கண்டிப்பாகப் பேசினாள் தாய்..
அடப் போங்கடா..
“ அடி.., நீ கோயிலுக்குப் போகலேன்னா உங்கப்பா தோலை உரிச்சுடுவாருடி... ” கவலைப்பட்டாள் தாய்..
“ நான் பார்த்துக்கறேம்மா.. உன் தோலுக்கு நான் காரண்டி... ”
கையை ஓங்கிய அம்மாவிடமிருந்து ஒதுங்கி ஓடினாள்.
எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து, தஞ்சாவூரில் வகுப்பில் ஒன்றியிருந்தாள் செங்கமலம்.. இந்த வகுப்புகள் அவளுக்கு மிகவும் பிடித்துப் போயின. இருக்காதா பின்னே? முதல் நாளே மியூசிகல் சேர் எனப்படும் இன்னிசை நாற்காலி போட்டி நடந்தது. இம்மாதிரி இருக்கத்தானே அவளுக்கு ஆசை? வெளுத்து வாங்கினாள்.. இரண்டாம் தடவை அதே இன்னிசை நாற்காலி போட்டி நடந்தது – நாற்புறமும் திரைச்சீலை போடப்பட்ட அறையில்.
செங்கமலத்துக்கு நாற்காலி கிடைக்காத சமயம் ஒரு திரைச்சீலையை விலக்கிப் பார்த்தாள். உள்ளே ஏகப்பட்ட நாற்காலிகள் இருந்தன. ஒன்றைத் தூக்கி வந்து வெளியில் போட்டு உட்கார்ந்து கொண்டாள்.. போட்டியை ஏற்பாடு செய்திருந்த நிர்வாகிகள் படபடவென்று கை தட்டினர்.
“ வாழ்க்கையும் இப்படித்தான். வாய்ப்புகள் திரை மறைவிலும் இருக்கலாம்.. நீங்கள்தான் திரையை விலக்கி, எடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும்- இந்த செங்கமலத்தைப் போல. ” என்றார்கள்..
செங்கமலம் பூரிப்பில் வெட்கி நின்றாள். ஒரு எவர்சில்வர் பாத்திரம் பரிசாகக் கிடைத்தது.
சமூகத்தின் பரிணாமம் பற்றிக் கூறினார்கள்; தாய்வழிச் சந்ததி, தந்தைவழிச் சந்ததி, வேளாண் சமூகம், இயந்திரமாக்கல் இத்யாதி..
ஆண் பெண் வேறுபாடு இனப்பெருக்கத்துக்காக மட்டுமே இயற்கை உண்டாக்கியிருக்கிறது என்றார்கள். கணவன் என்கிறவன் தன்னைப் போன்ற சகமனிதன் என்கிற எளிய உண்மை நம் பெண்களுக்கு இன்னும் புரியவில்லை என்று ஆதங்கப்பட்டார்கள்..
ஐந்து நாள் போனதே தெரியவில்லை.. ஐந்தாம் நாள் வெள்ளிக்கிழமை..
வகுப்புக்குப் பட்டுப்புடவை கட்டிக் கொண்டு சென்றாள் செங்கமலம்.
வகுப்பை முடித்து, பஸ் பிடித்து திருவாரூர் வந்து, அப்படியே நிதானமாக ராஜேஸ்வரி கோயிலுக்குப் போனாள். அமைதியாக சாமி கும்பிட்டாள். அர்ச்சகர் குங்குமம் கொடுத்துக் கொண்டிருந்தார். செங்கமலத்துக்கு முன்னால் ஒரு விதவைத் தாய் குங்குமத்துக்காக கையேந்திக் கொண்டிருந்தார். அர்ச்சகர் அவரைத் தாண்டி செங்கமலத்துக்கு குங்குமம் கொடுக்க கை நீட்டினார்.. செங்கமலத்தின் கண்களில் ஒரு பொறி பறந்தது. “ அந்த அம்மாவுக்கு குங்குமம் கொடுங்க ”.. என்றாள். அவள் தோற்றமும் தோரணையும், ஜொலித்த மூக்குத்தியும் அந்த ராஜேஸ்வரி அம்மனே சொன்னது போல் மிரட்ட, அர்ச்சகர் அந்த அம்மாளுக்குக் குங்குமம் கொடுத்து விட்டார்..! ! !
அந்த அம்மாள் பிற்பாடு செங்கமலத்துக்கு நன்றி தெரிவித்தார்.. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மகனுக்காக வேண்டிக் கொண்டிருக்கிறாராம்.. குங்குமப் பிரசாதம் கிடைத்தது மனதுக்கு நம்பிக்கை அளிக்கிறதாம்..
அதற்கடுத்த வாரம் முழுநேரமும் சேவை மையத்தில் பணி செய்வதிலே கழிந்தது. அஜந்தா விடுமுறையில் போய் விட்டாள்..
அன்று வழக்கம் போல் தேவிகா வீட்டில் இருந்தாள் செங்கமலம். அவள் கொடுத்த ஆரஞ்சுச் சாற்றை சுவைத்துக் கொண்டிருந்தபோது தேவிகா கேட்டாள், “ ராஜேஸ்வரி அம்மன் கிட்ட எந்த மாதிரி வரன் வேண்டிக்கிட்ட? ”
“ ப்ச்.. ” உதட்டைச் சுளித்தாள் செங்கமலம். “ எங்கம்மா தீர்க்க சுமங்கலியா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.. ” என்றாள்.
“ ஆனா, வேண்டுதல் உன்னோட கல்யாணத்துக்குத்தானே ?? ”
“ எனக்குக் கல்யாணம் நடக்கலேன்னாலும் என்னால வாழ முடியும்.. ! ! ! அதுவும் நல்லாவே வாழுவேன்.. இந்த அப்பா குதிக்கிற கூத்துக்கு எங்கே படுத்த படுக்கையா விழுந்துடுவாரோன்னு பயமா இருக்கு..! கடவுள் அவருக்குத்தான் கண்ணை திறந்து விட்டுக் காப்பாத்தணும்.. ! ! ! ”
இதைக் கேட்டுக் கொண்டே வந்த தேவிகாவின் அம்மா, செங்கமலத்தின் அம்மாவிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, செங்கமலத்தின் அப்பாவை கவனித்துக் கொள்ளுமாறு எச்சரித்தாள்; கூடவே செங்கமலத்தைப் பாராட்டவும் செய்தாள் – இதெல்லாம் பெண்களுக்குத் தெரியாது..
தொடரும்.