உன்னைத்தேடி

நின் பாராமுகம் காண தேடித் தேடி
நான் தொலைந்துபோகும் முன்,
என் சேரா இமைகளும் சேர்ந்து
என்னை வதைத்துவிடும் போலும்..!

கனவுகளெல்லாம் கசிந்துருக
தினம் தினம் பிதற்றுகிறேன்..!
உணர்வுகளெல்லாம் உறைந்துபோக
உனை தேடித்திரிகிறேன்..!

மெட்டியோடு குட்டிச்சண்டை நீயும் போட,
என் கண்களில் கட்டிவைத்து உனை
காதல் செய்யத்தான் தேடுகிறேன்..!

உன் இதழ் முத்தத்தில் என் நெற்றிக்குங்குமமும்
சேர்ந்து சிவந்திடத்தான் ஏங்குகிறேன்..!

தனிமை என்னை நிந்திக்கும் வேளை
தலைவா உன் தாய்மடி தேடுகிறேன்..!
இனிமையை நானும் சந்திக்கத்தான்
என் இனியவனை அழைக்கிறேன்..!

வான் நிலவை வனத்திலும், நிலத்திலும்
தேடும் பைத்தியக்காரி நான்..!
என் நிலையறிந்து நிழலேனும் உடன் இருக்கிறதே
என தேற்றிக்கொள்ளும் பாக்கியசாலியும் நான்..!

உன்னிடம் நான் சொல்ல சேர்த்துவைத்த நிகழ்வுகளெல்லாம்,
நித்தம் நித்தம் என்னோடு யுத்தம் புரிகிறது..!

ஊக்கம் கொடுக்க உறவுகளில்லை எனக்கு,
என் ஆக்கங்கள் எல்லாம் அனாதையாக கிடக்கிறது..!

கண்ணீரில் தேகம் வலிக்கவில்லை..! வாடுகிறது ..!
செந்நீரில் சிதைந்துபோகும் முன்,
கண்ணா நீ என்னோடு வேண்டும்..!

தேவதையாக நானில்லை என்றா,
என் தேடலில் சிக்கிக்கொள்ள மறுக்கிறாய்?

பொன்நகை என்னிடம் இல்லையென்றா,
உன் பூமுகம் காட்ட வெறுக்கிறாய்?

நினைவெல்லாம் நீதான் இருக்கிறாய்..!
நித்திரையிலும் தேனாய் இனிக்கிறாய்..!

பத்திரமாய் எங்குதான் மறைந்திருக்கிறாய்..!
பார்க்கத்துடிக்கும் பாவை மனம் நோக சிரிக்கிறாய்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (11-Apr-17, 4:25 pm)
Tanglish : unnaithedi
பார்வை : 254

மேலே