பிறந்த நாள் கொண்டாட்டம்

மாதமொருமுறை
மனநிறைவிற்காக
வறியோர் வயிற்றை
அரித்துத் தின்னும்
பசியைக் கொன்று
துருப்பிடித்த அவர்
முகக்கோயிலை தூசு தட்டி
அங்கே தூங்கிக் கொண்டிருக்கும்
இறைவனை பார்த்து
மகிழ்வது வழக்கம்…!

மழலை மொழியில்
என் மகளின் குரலில்
ஏக்கமதை அரிதாரமாய்
முகத்தில் பூசிக்கொண்டு
இறைவன் என்னிடம் யாசிக்கிறான்
பிறந்தநாள் விழா
கொண்டாட வேண்டுமென்று…!

அர்த்தநாரீஸ்வரர் போல்
வரவும் செலவும்
சரிசமமாய் தங்களுக்குள்
சமாதானமாகிக் கொண்டு
ஏதாவது ஒரு இறைவனின்
தரிசனம் மட்டுந்தான்
கிடைக்குமுனக்கு என
சபித்துவிட்டன..!

என் இதய மன்றத்திலும்
தீர்ப்பு பிறந்துவிட்டது…
எம்மனவாலயத்தில் எழுந்தருளி
உரிமையோடு எனையாட்கொண்ட
என்குல சாமியின் அவாவை
நிறைவேற்றச்சொல்லி…!

அலங்கார கூடத்தில்
ஆடம்பர வெளிச்சத்தில்
ஆரவார சிரிப்பொலியில்
அரங்கமே சில மணித்துளிகள்
அதிர்ந்துதான் போனது
கரங்கள் எழுப்பிய
அதிரடி இசையில்…
அமைதியாய் எரிந்துகொண்டிருந்த
மெழுகுவர்த்தியை
மகள் ஆனந்தமாய்
அனைத்துக்கொண்டிருந்த நேரம்..!

மருண்டுபோன மனங்களின்
மடைதிறந்த மகிழ்வலையில்
மறைந்துதான் போகிறது
சிலரின் மௌனமான விசும்பல்கள்…
இப்படித்தான் அர்த்தமானது எனக்கு
அணைந்துகொண்டிருந்த
மெழுகுவர்த்தியின்
இறுதி நேர துடி துடிப்பு..!

அம்மட்டும் உணராத
உண்மையொன்றை அன்றுதான்
உணர்ந்துகொண்டேன்…
இறைவர்களுக்குள்ளும்
ஏற்ற தாழ்வு உண்டென்று…!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (14-May-17, 11:38 pm)
பார்வை : 131

மேலே