தெய்வீகக் காதலர் அம்பிகாபதி அமராவதிக்கு கிடைத்த காதல் பரிசு-------------
PDF
.
.
அம்பிகாபதி கம்பர் பெருமானின் புதல்வன். அறிவிற் சிறந்தவன், அழகு மிக்க இளைஞ்ஞன். கல்வி கேள்விகளில் தந்தையை விஞ்ச்சியவன். தன் தந்தை கம்பரைப் போலவே கவிதை புனைவதில் வல்லவன். புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா? கம்பன் வீட்டு தறியும் கவிபாடும் போது கம்பன் மகன் சும்மா இருப்பாரா?
சோள மன்னன் குலோத்துங்கன் மகள் அமராவதி. பருவத்தின் தலைவாயிலில் நிற்பவள்! பேரழகி எனப் பேரெடுத்தவள். குலோத்துங்க மன்னனுக்கும் தன் மகளை அம்பிகாபதி போல் கல்வி கேள்விகளில் சிறந்தவளாக்க வேண்டும் என்ற அவா. அம்பிகாபதியின் அறிவு ஆற்றல் மன்னனை மிகவும் கவர்ந்தது. அதனால் மன்னன் அவன்மீது வைத்திருந்த பெரு மதிப்பால் அம்பிகாபதியை ஆசிரியனாக்க உத்தேசித்தான். அவர்கள் இருவரும் ஒரே பருவத்தில் இருந்தமையால், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து உரையாட வாய்ப்பு ஏற்படுத்தித் கொடுத்தால், விளைவு பேராபத்தாய் முடியுமோ என எண்ணினான்.
அதனால் அவன் தனது அமைச்சரும், இராஜதந்திரியும் புகழ்பெற்ற ஒருவரிடம் ஆலோசனை கேட்டான். அவரும் ஒரு குறுக்கு வழி சொன்னார். பாடம் கற்றுத்தரும் ஆசிரியர் குருடர் என்று அமராவதியிடமும், பாடம் கேட்கும் அமராவதி, கால்கள் விளங்காத முடம் என்று அம்பிகாபதியிடமும் சொல்லிவைத்ததோடு, ஊனமுற்றவரை ஒருவரையொருவர் பார்க்க கூடாது என்பதையும் அதனால் இருவருக்கும் இடையில் திரை போட்டு மறைக்கும் படியும் அழுத்தந்திருத்தமாகச் சொல்லி வைத்தார்.
அதனால் இருவருக்குமிடையே ஒரு திரை.
குரல்கள் மட்டும் கேட்கும்; உருவம் தெரியாது.
அமைச்சர் பெருமானின் இந்த அரிய யோசனையை மன்னன் ஏற்றான்.
அந்தப்புரத்தை ஒட்டினாற்போலுள்ள கன்னிமாடத்திற்குப் பின்புறம் எழில் குலுங்கும் பூங்கா. அங்கே ஒரு கலைக்கூடம். அந்தக் கலைக்கூடத்தில் தான் இளவரசி அமராவதிக்கு, அம்பிகாபதி பாடம் கற்றுத்தர ஏற்பாடாகியிருந்தது.
அமைச்சரின் பிள்ளை அறவாணன், அம்பிகாபதிக்கு உயிர் நண்பன். அவன்தான் அம்பிகாபதியைக் கன்னிமாடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இது அமைச்சரின் கட்டளை!
வழியில் அம்பிகாபதிக்கு நண்பன் என்னும் முறையில் சில ‘நிபந்தனை’களை எடுத்துச் சொல்லிக்கொண்டே நடந்தான்.
“முதலாவதாக, நீ யார் என்பது இளவரசிக்குத் தெரியக்கூடாது. உன் பெயர் மதிவாணன் என்று கூறியிருக்கிறேன். எவனோ ஒரு மதிவாணன் என்பவன் – தனக்கு ஆசிரியனாக அமர்த்தப்பட்டிருக்கிறான் என்று இளவரசி எண்ணிக் கொண்டிருக்கிறாள். அந்த எண்ணத்தை கடைசிவரை, நீ காப்பாற்ற வேண்டும். உன்னை மறந்த நிலையிலோ, உணர்ச்சிவயப்பட்டோ உன்னை யார் என்று அடையாளம் காட்டிவிடாதே. ஆயிரமாயிரம் பாடல் புனையும் ஆற்றல் படைத்தவன் நீ. இந்த மாடத்தின் எழிலைக் கண்டு, பரவசமடைநது, உன்னையுமறியாமல் கவிதை பாடிவிடப் போகிறாய்!” என்று எச்சரித்தான் நண்பன்.
அமைச்சரின் ஏற்பாட்டின்படி, கலைக்கூடத்தில் இரும்புத்திரை போன்று முரட்டு மறைப்பு தொங்கிக் கொண்டிருந்தது.
அம்பிகாபதி தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்தான். அதே சமயம், திரைக்கு மறுபுறம், அமராவதி தன் தோழியுடன் வந்தாள். ஆசனத்தில் அமரும் முன், “ஆசிரியர் அவர்களுக்கு அடியேனின் வணக்கங்கள்” என்று கூறிவிட்டு அமர்ந்தாள்.
அம்பிகாபதியும் “வாழ்க! வளர்க!” என்று வாழ்த்துரை வழங்கினான்.
அமராவதியின் அடிப்படைக் கல்வியறிவைப் புரிந்துகொள்ள வேண்டும்; அதற்கேற்பத் தன் பாடத் திட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கருதினான் அம்பிகாபதி. இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றில் சில வினாக்கள் கேட்டான்.
அமராவதி ஏற்கனவே தமிழில் ஓரளவுக்குப் புலமை பெற்றிருந்தாள். எனவே, அம்பிகாபதி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தயங்காது பதிலளித்தாள்.
ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியவற்றை நன்கு கற்றிருந்தாள். அவள் அறிவுத்திறனை மேலும் செழுமைப்படுத்தப் பாடம் போதிக்கத் தொடங்கினான் அம்பிகாபதி.
அம்பிகாபதியின் பாடம் கற்றுத்தரும் திறனைத் தன் மகள் மூலம் கேள்வியுற்ற மன்னரும் மகாராணியும் வியந்தனர். அமைச்சரும் தன் மகன் மூலம் அம்பிகாபதியின் திறமையை அறிந்து மிகவும் புகழ்ந்து பேசினார்.
அமராவதிக்குப் பாடம் கற்றுக் கொடுக்கத் தொடங்கி முப்பது நாள்கள் ஆகிவிட்டன. அன்று வரை அம்பிகாபதியும் அமராவதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. இருப்பினும், இவ்விருவருக்கும் ஒருவிதக் கழிவிரக்கம் அவர்கள் உள்ளத்தில் உருவெடுத்தது.
“ஐயோ பாவம்! இலக்கிய இலக்கணத்தை எவ்வளவு எளிமையாகவும் தெளிவாகவும் கற்றுத் தருகிறார். இத்தகைய மேதைக்கு இறைவன் பார்வையைத் தரவில்லையே!” என்று அம்பிகாபதி மீது இரக்கமுற்றாள் அமராவதி.
அதுபோன்றே - “இறைவனைக் கருணாமூர்த்தி என்கின்றனர். கல்வி கேள்விகளில் வல்லவனான இந்த மங்கையை முடமாக்கி விட்டாரே இறைவன்! இதுதானா அவர் கருணை? என்று, அமராவதியின்பால் அனுதாபம் கொண்டான் அம்பிகாபதி.
இவ்வாறு ஒருவர் மீது ஒருவர் அனுதாபம் கொண்ட அவ்விளம் உள்ளங்களின் வாழ்வில் ஒரு திடீர்த் திருப்பம் ஏற்பட்டது.
முன்னிரவு நேரத்திலேயே, பாடம் நடக்கும் சமயத்தில் முழு நிலவு தங்கத் தாம்பாளம் போன்று, கீழ்த்திசையில் எழுந்து வானத்தில் உலாவரத் தொடங்கியது. அந்தக் கண்கொள்ளாக் காட்சியை அம்பிகாபதி கண்டான். அந்தக் கணமே அவன் உள்ளத்தில் கற்பனை ஊற்று காட்டாறாய்ப் பெருக்கெடுத்தது.
“முகிலைக் கிழித்து வெளிவரும் முழுநிலவே! குளிர்மதியே! உன் எழிலைக் காண எனக்குள்ள இந்த இரு கண்கள் போதவில்லை. போதவில்லை! உன் அழகைப் பாட என் ஒரு நா போதாதே!” என்றான்.
இது கேட்டு அமராவதி பெருவியப்புக் கொண்டாள்.
‘ஆசிரியர் குருடராயிற்றே! அவரால் எவ்வாறு இன்று வானில் எழும் முழுநிலவை வர்ணித்துப் பாட இயலும்! இந்த அற்புதக் காட்சியினைக் காணத் தமக்கு இருகண்கள் போதாது என்று ஏங்கிப் பாடுகிறாரே! அப்படியானால் இவர்…?’ என்று எண்ணியவாறு திரையை விலக்கிப் பார்த்தாள்.
அங்கே… !
“ஓ! நீங்களா! அன்று சிவன் கோயிலில் என்னை மயக்கிய அழகுத் தெய்வமல்லவா நீங்கள்!
அம்பிகாபதியும் அமராவதியைத தன் இரு கண்களால் கண்டான். பெருவியப்புக் கொண்டான்! அழகுச் சிலையொன்று உயிர்பெற்று தன் எதிரே நிற்பதைக் கண்டான்.
‘ஆ! என்ன அழகு! என்ன ஒயில்! சிற்பி செதுக்காத பொற்பாவையோ இது? இந்த வடிவழகின் காலை முடம் என்றார்களே! என்ன ஏமாற்று! என்று வியப்பும் வருத்தமும் கொண்டான்.
முன்னாள் அம்பிகாபதி, சிவன்கோயில் பொதுமண்டபத்திலே அமர்ந்து, சிவனை நினைத்து, சிந்தை குளிரப் பாடிக்கொண்டிருந்தான். அப்பொழுது சிவனைத் தரிசிக்கத் தன் தாயுடன் வந்தாள் அமராவதி. அம்பிகாபதியின் தேவ கானத்தில் அவள் உள்ளம் மயங்கியது. அவன் வடிவழகு அவள் உள்ளத்தை நிலைகுலையச் செய்தது. ஆனால் அரச மகள் வந்ததையோ, மயங்கி நின்றதையோ அம்பிகாபதி அறியான்.
இன்று அதே அழகனைத் தன்னெதிரே கண்டதும் அவள் உள்ளத்தில் இன்ப வெள்ளம் பொங்கி எழுந்தது. தென்றல் வந்து ஆரத்தழுவியது போன்று ஒருவித இன்பம் அவளது பொன்னுடலைத் தழுவியது.
அம்பிகாபதியும் அமராவதியும் நேருக்கு நேர் நின்று, ஒருவரையொருவர் பார்த்துப் பிரமித்து நின்றார்கள்.
அந்த நிலையில் தோழி ஒருத்தி ஓடி வந்தாள்.
“அம்மா இளவரசி! மகாராணியார் வருகிறார்!” என்று எச்சரிக்கை செய்தாள்.
மறுகணம்… !
திரை மூடிக்கொண்டது.
அமராவதி தன் இருக்கையை நோக்கி ஓடினாள்!
அம்பிகாபதியும் தன் ஆசனத்திலே அமர்ந்து பாடல் கூறலானான்.
……………..
அம்பிகாபதிக்கும் அமராவதிக்கும் இடையே ஆசிரியர் – மாணவி என்றிருந்த நிலை மாறி, இப்போது காதலன்-காதலி என்னும் நிலை உருவாகியது. மூன்று தினங்களில் அக் காதற்பயிர் தழைத்து வளர்ந்தது.
பாடம் பயிலும் நேரத்தைத் தங்கள் காதல் பயிர் வளர்ச்சிக்கு நீராக ஆக்கிக் கொண்டனர் இளங்காதலர் இருவரும்.
கல்வி போதிக்கப்படும் கலைக்கூடம், இரதி-மன்மதனின் உறைவிடமாய் மாறியது.
அகநானூறு அங்கு அரங்கேற்றமானது. பாடம் பயிலும் நேரம் முடிந்ததும் இளஞ்ஜோடிகள் இருவரும் ஏக்கப் பெருமூச்சுடன் பிரிவர். இருவரும் இணைந்திருந்த நேரம் சொர்க்கமாய் இருந்தது. பிரிந்திருந்த நேரமோ நரகமாய் அமைந்தது.
ஒரு நாள்!
கன்னிமாடத்தினின்றும் திரும்பிய அம்பிகாபதி படுக்கையில் பொத்தென்று சாய்ந்தான். அவன் உடல் அனலாய் தகித்தது! அவன் தங்கை ஓடோடிச் சென்று அவன் உண்ண, உணவு ஏந்தி வந்து நின்றாள்!
எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டான் அம்பிகாபதி; படுக்கையில் புழுவென நெளிந்தான். உறக்கம் அவன் கண்களைத் தழுவ மறுத்தது. அண்ணனிடம் ஏற்பட்ட மாற்றம் கண்டு அவன் தங்கை மனம் வருந்தினாள்.
கம்பரோ ஊரில் இல்லை. அவர் இருந்தாலாவது பிள்ளையின் உடல் நிலை அறிந்து தக்க மருந்து தருவார்!
காதல் வியாதி, அம்பிகாபதியை மட்டுந்தானா அலைக்கழித்தது? அமராவதியையும் அது விட்டு வைக்கவில்லை!
பக்கத்திற்கொரு தோழியர் நின்று வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தனர். வேணி என்னும் நெருக்கமான தோழி அமராவதிக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தாள்.
அமராவதியோ-பாலைப் பருக மறுத்தாள். தேனைத் தீண்ட மறுத்தாள்; பழத்தை விஷமென விலக்கினாள். அமராவதியின் நிலையை ஒருவாறு உணர்ந்த வேணி, மற்றவரை அவ்விடத்தினின்றும் போகச் சொன்னாள். பலப்பல கூறி உணவு உட்கொள்ளுமாறு வேண்டினாள்.
“வேணி, என்னை ஏன் தொல்லைப்படுத்துகிறாய்? என் நிலை உனக்கு புரியவில்லையா? தண்ணொளி வீசும் குளிர் நிலவும் என்னைத் தணலாய் எரிக்குதடீ” என்று கூறிக் கலங்கினாள்.
இளவரசியின் மனநிலையை நன்கு அறிந்துகொண்ட வேணி, இனி என்ன செய்வதென்று சிந்தித்தாள். பின் அம்பிகாபதியின் மாளிகைக்கு போய், அவன் தங்கையைக் கண்டு, அம்பிகாபதியின் நிலையை அறிந்து வந்தாள்.
“அம்மா இளவரசி! அம்பிகாபதியாரும் உங்களை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறார். பால் அருந்தாமல் பழம் உண்ணாமல் ‘அமராவதி அமராவதி’ என்று எப்பொழுதும் புலம்பிக் கொண்டிருக்கிறார். பார்க்கவே பரிதாபமாயிருக்கிறது. இந்த இலட்சணத்தில், மூன்று நாள்களுக்குச் சிவன் கோயில் திருவிழா வேறு நடைபெறவிருக்கிறது. அந்த மூன்று நாள்களுக்கு உங்களுக்குப் பாடம் கற்றுத் தருவதை நிறுத்துமாறு மன்னர் கூறிவிட்டாராம்!”
தோழி கூறியதைக் கேட்டதும் தீயை மிதித்துவிட்டவள் போன்று துடித்தெழுந்தாள் அமராவதி.
“என்னடி சொன்னாய்? மூன்று நாள்களுக்குப் பாடம் இல்லையா? எப்படியடி இந்தப் பிரிவைச் சகிப்பேன்! வேணி, இதற்கொரு வழி சொல்லடி! மூன்று நாள்களுக்கு என் நாயகரைப் பார்க்காமல் எப்படியடி இருப்பேன்? என் அன்பதைக் காணாது என் கண்கள் ஏங்குமே, அதற்கென்னடி செய்வேன்! அணைக்கத் துடிக்கும் என் கரங்களுக்கு எப்படியடி ஆறுதல் சொல்வேன்?” என்றெல்லாம் பிரலாபித்தாள் அமராவதி.
தோழி என்ன சொல்லித் தேற்றியும் அமராவதி ஆறுதல் கொள்ளாது புலம்பிக்கொண்டே இருந்தாள்.
தோழி மேலும் கூறினாள்: “உன் திருமணம் குறித்து அரசர் பெருமான் கொண்டிருக்கும் கருத்தை நீ அறிய மாட்டாய். உன் மாமன் மகன் குலசேகர பாண்டியனுக்கு உன்னை மணமுடிக்க விரும்புகிறார் மன்னர் பெருமான். அவரும் ஒட்டக்கூத்தரும் உரையாடிக் கொண்டிருந்ததை மறைந்திருந்து கேட்டேன்.
அமராவதி இது கேட்டுத் திகைப்புற்றாள்.
“அப்படியாயின் எங்கள் காதலுக்கு அற்பாயுள் என்கிறாயா வேணி?” என்று அழுகை பொங்கிடக் கேட்ட அமராவதி “வேணி, என் உயிர்த் தோழியே! நீதான் இதற்கொரு வழி கூறவேண்டும். ஏனென்றால், என்னை விட இரண்டு வயது மூத்தவள் நீ. அரசியலைத் திறம்பட அலசி ஆராய்ந்து வாதம் புரிபவள். என் இதயம் சுக்குநூறாய் உடையுமுன் ஏதேனுமொரு வழியினைச் சொல்லடி” என்று துடித்தாள்.
“அமராவதி, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். உங்கள் காதல் பாதியில் கருகிவிடக் கூடாது என்பதில் உன்னிலும் அக்கறை கொண்டவள் நான். நீ எந்த அளவுக்கு அம்பிகாபதியைக் காதலிக்கிறாயோ அந்த அளவுக்கும் ஒரு பங்கு மேலாக அவர் உன்னைக் காதலிக்கிறார். அவரும் உன்னைப் போன்றே காதல் நோய் வாய்ப்பட்டு வாடுகிறார். உன் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாது தவிக்கிறார். அந்தத் தவிப்பை நான் நேரிலே கண்டேன். அதனால்தான் அவரை உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு வந்திருக்கிறேன்.”
“அப்படியா!” என்று பரவசத்துடன் கூறிய அமராவதி, தோழியை இறுக அணைத்துக் கொண்டாள். “ஓ, தோழி என்றால் நீதாண்டி தோழி!” என்றவள், “சரி, மேலே சொல்” என்று பரபரத்தாள்.
தோழி ஒரு வியப்பூட்டும் சேதியைச் சொன்னாள். “இன்னும் சிறிது நேரத்தில் அவர் இங்கு வரப்போகிறார்.”
“என்ன என்ன! அவர் வரப்போகிறாரா! என் காதலர் என்னைக் காண வரப்போகிறாரா! எப்படி இயலும்? இது பாடம் சொல்லித் தரும் நேரங்கூட அல்லவே! இந்த நேரத்தில் அவர் எங்ஙனம் வரக்கூடும்? வாயிற்காப்போன் அனுமதிக்க மாட்டானே!”
“அதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன்!”
“அப்படியா! அந்த வழியை விரைந்து சொல்லடி!”
“நாம் வழக்கமாக நீராடும் ஓடைக்குப் பக்கத்திலுள்ள ஒப்பனைக் கூடத்திற்கு அவரை வரச் சொல்லியிருக்கிறேன். அந்தக் கூடத்தை ஒட்டினாற் போலுள்ள மதிற்சுவருக்கு அப்பால் ஒரு காளி கோயில் உள்ளது. அந்தக் காளி கோயிலுக்கு அர்ச்சகர் என்னும் முறையில் அம்பிகாபதி வருவார். கோயிலை அடுத்துள்ள வேப்பமரத்தின் கிளை நம் ஒப்பனைக் கூடத்து மதிற்சுவரோடு இணைந்து வளர்ந்திருக்கிறது. அந்த மரத்தில் மறைவாக நான் நூலேணியைத் தயாராய்த் தொங்க விட்டிருக்கிறேன். அந்த நூலேணியில் ஏறி, மதிலுக்கு அப்பால் இறங்கி, ஒப்பனைக் கூடத்திற்கு வந்துவிடுவார் அம்பிகாபதி.”
முன்னிரவுப்பொழுது, மங்கிய நிலவொளி, மரங்களில் அடர்ந்த நிழலில் அம்பிகாபதி காளி கோயிலை நோக்கி விரைந்தான். வேணி தெரிவித்திருந்தபடியே நூலேணியை அடைந்தான்.
நூலேணியில் ஏறுவதோ, சுவர் ஏறிக் குதிப்பதோ அம்பிகாபதிக்குப் பழக்கமில்லாத செயல்கள்தாம். என்றாலும், அமராவதியின் மேல் கொண்டிருந்த காதல், தன்னை மறந்த நிலையில், நூலேணியின் மேல் ஏறி, மதில் சுவருக்கப்பால் குதிக்கச் செய்தது!
அங்கு தயாராய் நின்றிருந்த வேணி, அம்பிகாபதியை அழைத்துக் கொண்டு ஒப்பனைக்கூடம் நோக்கி நடந்தாள்.
ஒப்பனைக்கூடத்தில் அமராவதி ஒயிலாய் நின்றிருந்தாள். அம்பிகாபதியைக் கண்டதும், ஓடிப்போய் அவன் காலடியில் வீழ்ந்தாள். அவள் பூங்கரங்களைப் பற்றித் தூக்கி நிறுத்தினான், அம்பிகாபதி.
ஆனந்த பரவசத்தில் இருவர் கண்களும் கண்ணீரைச் சொரிந்தன.
அவர்களை அங்கே விட்டுவிட்டு அப்பால் சென்றாள், வேணி.
எவரும் இல்லாத ஒப்பனைக்கூடம். அந்த இளஞ்சிட்டுகளுக்குச் சோபன அறையாய் மாறியது!
இரவுப் பொழுதை இன்பமாய்க் கழித்தனர் இனிய காதலர் இருவரும்.
விடிவதற்கு இருநாழிகை இருக்கும்பொழுது, வேணி வெளியில் நின்று குரல் கொடுத்தாள்.
ஈருடலும் ஓர் உடலாய் ஒன்றிப் பிணைந்திருந்த காதலர், வேணி குரல் கேட்டதும் ஏக்கப் பெருமூச்சுடன் பிரிந்தனர்.
“இரக்கமிலா இரவுப்பொழுதே, இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாகாதா?” என அம்பிகாபதி அதைக் கோபித்தான்.
“கருணையிலாக் காலைப் பொழுதே. நீ விடியாமலிருக்கக் கூடாதா!” என்று அமராவதி சலித்துக் கொண்டாள்.
‘கூட இயலவிலையே!’ என்று வருந்திய காதலர் இருவரும் இப்பொழுது கூடிவிட்டுப் ‘பிரிய நேருகிறதே!’ என்று வருந்தினர்.
அம்பிகாபதி நூலேணி வழியாக ஏறியதை எவரும் அறிந்திருக்க மாட்டார் எனறே அமராவதி, அம்பிகாபதி, வேணி – மூவரும் கருதினர். ஆனால், அவனைக் கண் குத்திப் பாம்பு போலக் கவனித்துக் கொண்டிருந்தான், தோட்டக்கார வெள்ளையன். அவன் பார்த்த்துமின்றித் தன் மனைவியையும் கூப்பிட்டு அம்பிகாபதியைச் சுட்டிக்காட்டி, “தோ பார்த்தியா புள்ளே, எவனோ ஒரு திருட்டுப் பய மவன் மதில் ஏறிக் குதிக்கிறான்? இளவரசியம்மாவோட கன்னிமாடத்துச் சுவரல்லவா அது!” என்று பெருமூச்செறிந்தாள்.
அவள் மனைவி முத்தம்மா கொஞ்சம் புத்திசாலிப் பெண். “சுத்த மண்டூகமா இருக்கியே! திருட்டுப்பயலா இருந்தா நூலேணியிலே ஏன் ஏறப் போகிறான்? அதுவும் அவனுக்காகவே தயாராய் போட்டு வச்சிருக்காங்கன்னா இவன் வரப்போற விஷயம் உள்ளே இருக்கறவங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்; இல்லை? ஆக, கன்னிமாடத்திலே எவளையோ இவன் காதலிக்கிறான்னு தோணுது” என்று சொன்னாள்.
அவள் கூறியது சரி எனப்பட்டது. அவள் கணவனுக்கு. இந்த விஷயத்தை அரண்மனை அதிகாரியிடம் தெரிவித்து, அதை அரசன் காதில் விழும்படி செய்ய வேண்டும் என அவன் எண்ணினான். எனவே, காலைப் பொழுது எப்பொழுது விடியும் என ஆவலாய் எதிர்பார்த்திருந்தான் அவன்.
மறுநாள்.
அமைச்சர் மகன் அறவாணன், அம்பிகாபதியைக் காண அவன் மாளிகைக்குச் சென்றான். சாய்வு மஞ்சத்தில் சாய்ந்தவண்ணமாக உறஙகிக் கொண்டிருந்தான் அம்பிகாபதி.
அவன் உறக்கத்தைக் கலைக்க விரும்பாத அறவாணன், அம்பிகாபதியின் பக்கத்தில் ஓசை எழாத வண்ணம் அமர்ந்தான்.
சற்றைக்கெல்லாம் அம்பிகாபதியின் வாய் “அமராவதி அமராவதி” என்று முனகியது!
அது கேட்டு அம்பலவாணன் திடுக்கிட்டான். அம்பிகாபதியை உற்று நோக்கினான். அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். காதல் வயப்பட்டோர்தாம் கனவில் உளறுவர் என்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான்.
அரண்மனையில் பேசிக் கொண்டது உண்மைதானோ? “எவனோ ஒருவன் காளிகோயில் பக்கமாக இரவில் நடமாடுகிறான். நூலேணி ஒன்றின் மூலம் கன்னிமாடத்தினுள் குதிக்கிறான்; பின்பு நெடுநேரங்கழித்து அவன் மீண்டும் நூலேணி வழியாக வெளியேறிவிடுகிறான். ஆனால், அந்த உருவம் யார் என்பது புரியவில்லை?’
இந்நிகழ்ச்சியைக் காளிகோயில் தோட்டக்காரன் பார்த்ததாக அரண்மனை வட்டாரத்தினர் அறவாணனிடம் கூறினர். அது மட்டுமன்று; பாடம் கற்றுத் தரும்பொழுது அம்பிகாபதியும் அமராவதியும் காதல் மொழிகளை, மற்றவர் எளிதில் புரிந்துகொள்ளா வகையில் மறைவாகச் சில சொற்களால் பேசிக்கொள்வதைப் பலமுறை கேட்டதாக அந்தப்புரத்துத் தோழி ஒருத்தி அறவாணனிடம் முன்பு கூறியிருந்தாள். இதைக் கருத்தில் கொண்டுதான், அவன் அம்பிகாபதியைக் கண்டு எச்சரிப்பதற்காக வந்திருந்தான். அதற்கேற்றாற்போல்-அவன் கேள்வியுற்ற தகவல்கள் உண்மை என உணர்த்துவது போல் – அம்பிகாபதி உறக்கத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறான்.
உடனே அறவாணன், “அம்பிகாபதி, ஆருயிர் நண்பனே!” என்று மெல்ல குரல் கொடுத்தான்.
அம்பிகாபதி விருட்டென எழுந்து அமர்ந்தான்.
“பகலில் தூங்கும் பழக்கங்கூட உண்டோ?” என்று கிண்டலாக்க் கேட்டான் அறவாணன்.
அம்பிகாபதி உடனே பதில் கூறாமல் புன்னகையைப் படரவிட்டான்.
“இரவில் அப்படி என்னப்பா கண் விழிப்புக்கு அவசியம் ஏற்பட்டுவிட்டது?” என்று மேலும் குத்தலாக்க் கேட்டான் அறவாணன்.
அம்பிகாபதி பதில் கூறாமல், மீண்டும் மௌனப் புன்னகையை உதிர்த்தான்.
“அம்பிகாபதி! இன்று முற்பகலில் அரண்மனையில் ஒரு சேதி கேள்வியுற்றேன். காளிகோயில் பக்கமாக ஓர் உருவம் இரவுப்பொழுதில் நடமாடுகிறதாம். அந்த உருவம் நூலேணி வழியாக ஏறிக் கன்னிமாடத்தில் குதிக்கிறதாம்! மீண்டும் அந்த உருவம் கருக்கல் நீங்குமுன் நூலேணி வழியாக வெளியே வருகிறதாம்!”
அம்பிகாபதி உடனே குறுக்கிட்டான். “அதற்கும் எனக்கும் என்ன தொடர்பு?”
“இருப்பதால்தானே விரைந்தோடி வந்திருக்கிறேன் உன்னிடம்!”
அம்பிகாபதியின் முகத்தில் இப்பொழுது அச்சத்தின் ரேகை படர்ந்த்து.
“அறவாணா, நீ என்ன சொல்கிறாய்?”
“அம்பிகாபதி, நீ என் ஆருயிர் நண்பன், உனக்கொரு தீங்கு ஏற்பட்டால் என்னால் தாங்க இயலாது. வருமுன் காக்க வேண்டுமென்று எச்சரிக்கவே விரும்புகிறேன்” உரிமையுடன் கடிந்து கொண்டான் அறவாணன்.
அம்பிகாபதி பீதியுற்றான். “நண்பா, மறைத்துப் பேசாதே! உன் மனத்தில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்” என்றான் அவன்.
அம்பிகாபதி தன் காதல் பற்றி நண்பனிடம் உதவி கோரினான். மறுநாள்
இவர்களின் காதல் விவகாரம் எப்படியோ மன்னனின் காதுக்கு எட்டியது. மன்னன் மிகுந்த கோபம் கொண்டவராய் அம்பிகாவதியை சிறை பிடிக்க உத்திரவிட்டார். குலோத்துங்க்க சோள மன்னனின் குருவும், புலவருமான ஒட்டக்கூத்தர் அம்பிகாபதி தண்டனை பெற வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்ததால் அரசனிடம் அவனது கோபத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாகப் பல சட்டதிட்டங்கள், சம்பிரதாயங்கள் முதலியவற்றை எடுத்துக்கூறி நிலைமையை மிகவும் தீவிரமடையச் செய்தார்.
கம்பரின் வேண்டுதல்கள் எதுவும் மன்னனின் செவியில் ஏறவில்லை. முடிவாக அம்பிகாபதிக்கு ஒரு சோதனை நடத்தி அவன் அதில் வெற்றி பெற்றால் அமராவதியை மணக்கலாம் என்றும், தோல்வியுற்றால் மரண தண்டனை எனவும் முடிவு செய்யப்பட்டது.
சபையோர் முன்னிலையில் 100 பாடல்களை தொடர்ந்து இயற்றிப்பாட வேண்டும் என்பதுதான் நிபந்தனை. நூறு பாடல்களை அம்பிகாபதி இயற்றி அரங்கேற்ற வேண்டும். அதில் காமரசம் துளியும் இருக்கக்கூடாது என்றும், அப்பாடல்களில் பிழை ஏற்பட்டாலோ, காமரசம் கலந்தாலோ, குறிப்பிட்ட காலத்துக்குள் நூறு பாடல்களை இயற்றி பாடத் தவறினாலோ தோற்றதாக அர்த்தம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இந்த நிபந்தனையை ஏற்று அம்பிகாபதி பாட ஆரம்பித்தான். சபையில் அரசன் உள்ளிட்ட பல அறிஞர்களுடன் கம்பரும், ஒட்டக்கூத்தரும் அமர்ந்திருந்தனர். அமராவதி ஒரு திரைமறைவில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சியைக் காண அனுமதிக்கப்பட்டாள். அவள் நூறு மலர்களை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு அம்பிகாபதி பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு மலர் வீதம் அருகிலிருந்த மற்றொரு தட்டில் போட்டு, அம்பிகாபதி பாடும் பாடல்களை எண்ணிக்கொண்டே வந்தாள். அம்பிகாபதி முதலாவதாக பாடிய கடவுள் வாழ்த்தை ஒரு பாடலாக எண்ணி அதற்கும் ஒரு பூவை போட்டதனால் பூத்தட்டில் பூக்கள் இல்லாதிருந்தமையால் 100 பாடல்களும் பாடியாகிவிட்டது என எண்ணி அம்பிகாபதி பாடுவதை நிறுத்தியதும்,
100 பாடலும் முடிந்துவிட்டது தன் காதலன் வெற்றி பெற்றுவிட்டான் என்ற எண்ணத்தில் அமராவதி அம்பிகாபதியை நோக்கி புன்னகைத்தாள். அவளின் அழகில் மயங்கி சற்றே ”பருத்த தனமே துவளத் தரள வடந் துற்றே” என காமரசம் ததும்பும் பாடலொன்றைக் அம்பிகாபதி பாடினார். இந்த பாடலுடன் அவன் 100 பாடல்களைப் பாடியிருந்தாலும் 100 வது பாடல் காமரசம் உள்ளதாக அமைந்ததால் அம்பிகாபதி நிபந்தனையை மீறியதாக ஒட்டக்கூத்தர் இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்
அதனால் அம்பிகாபதி பாடியது 99 பாடல்கள் அல்லது காமரசம் கலந்த 100 பாடல்கள் என கணிக்கப் பெற்று மன்னன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை என தீர்ப்பு விதித்தான். கம்பரையும் நாடு கடத்தும்படி உத்தரவிட்டான்
ஒட்டக்கூத்தர்: புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு.
கம்பர்: கம்பனைப் பற்றிய பல கட்டுக்கதைகள் உண்டு. அவற்றிலிருந்து சில உண்மைகள் நமக்குத் தெரியவருகின்றன. அவையாவன: அவன் தகப்பன் பெயர் ஆதித்தன்; பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் ஆகும். சாதியால் உவச்சன்; எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
புதுவையில் திரிகார்த்த சிற்றரசனாக விளங்கிய சரராமன் என்ற சடையப்ப வள்ளலால் பாராட்டப்படும் வாய்ப்பு கம்பனுக்கு தன் இளமையிலேயே ஏற்பட்டது. இந்த வள்ளல் பெயர் விக்கிரம சோழன் உலாவிலும், மூவலூரிலும் திருக்கோடிக் காவலிலும்(ஆண்டு குறிப்பிடாமல் உள்ள)கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இவன் கங்க வமிசத்து சேதிரையன் என்று இக்கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கம்பனை அவன் காலத்துச் சோழ அரசனும் பாராட்டி அவனுக்கு கம்பநாடு என்று பெயரிடப்பட்ட பெருவாரியான நிலத்தை அன்பளித்தான்; கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் சோழ அரசனே அவனுக்கு வழங்கினான்.
அவன் இராமாயணத்தை எழுதினான், அந்தக் காவியத்தில் அதன் கருப்பொருளில் அவனுக்கு இருந்த பக்தி அளவு கடந்தது. அதனாலேயே இதைத் தமிழில் எழுத முன்வந்தான். இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பி வந்து முடிசூட்டிக் கொள்ளும் வரை மட்டுமே கம்பன் எழுதியது எனினும், உத்தர காண்டம், ஒட்டக்கூத்தனாலோ அல்லது வாணிதாசன் என்ற வாணியன் தாதன் என்பவனாலோ எழுதப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அம்பிகாபதி: அம்பிகாபதி கம்பனின் ஒரே மகன்
உண்மையான காதல் ஜாதி, மதம், குலம், கோத்திரம், தரம், தராதரம், செல்வம், செல்வாக்கு, கௌரவம் என்பனவற்றைப் பாராது. ஆனால் அன்பு பண்பு, உண்மை, நேர்மை என்பவற்றைப் பார்க்கும்