கடவுள் கை மறித்தார்

தாமோதரன் அடிக்கடி சுவர்க்கடிகாரத்தைப் பாத்துக்கொண்டான் .
அதிகாலை 5.25
அம்மா படித்துப் படித்துச் சொல்லி இருந்தாள்
காலை நேரங்கள் செலவு ஆவதே தெரியாது தாமு .தூங்கிடாதே வெள்ளிக்கிழமை நம்மோட வள்ளி முருகன் கோவிலில் சந்தனக் காப்பு .5.50 க்கு சரியா கண் திறப்பு வசு அண்ணா சொல்லியிருக்கிறார்.லேட் பண்ணினியோ நம்மாத்துக்கே வந்து திட்டுவார்.சரியா போயிடு என்று ஆணியடித்தார் போலச் சொல்லியிருந்தது ஞாபகம் வந்ததால்தான் தாமு கடிக்காரத்தை அடிக்கடிக் கவனித்துக்கொண்டான்.

ஆனால் தாமுக்குக் கோவில் போவதற்குக் கஷ்டமில்லை .ஏதாவது வேண்டுதலோடு கடவுள் முன் நிற்கக் கூச்சமாக இருப்பதைத்தான் அம்மாவிடம் வேண்டாம் என்று சொல்வான் . அதற்கு அவன் அம்மா பாக்கியலட்சுமி , சும்மா இருடா தெய்வத்தை விட நம் சேமத்தைப் புரிந்து கொள்ள யாரால் முடியும் ? தெய்வத்தைக் கேட்காம சாதாரண மனுசாள்கிட்டயா கேக்கச் சொல்ற அபிஷ்டோ என்பாள்.

அம்மா நமக்கு இத்தனை கொடுத்த தெய்வத்துக்கு எப்பத் திருமணம் நடத்தனும்ன்னுத் தெரியாதா ? கேட்டுத்தான் பெறணுமா என்று சலித்துக்கொள்வான் .ஆனால் அம்மா விடமாட்டாள் .இது ஆம்படையான் இல்லாத வீடு .என்னால அங்க இங்க ஓடி உனக்கு ஒருத்திய தேடித்தரமுடியாது .அந்த வள்ளி முருகன்தான் உனக்கு அவரைப்போல லட்சணமா இந்திரன் மகளான தெய்வானையைப் போல ஒருத்தியைத் தரவேண்டும் என்று வேண்டிக்கொள்வாள் .வள்ளி முருகன் கோவிலில் அம்மா தெய்வானையை வேண்டுவதன் அர்த்தம் தாமுவுக்கு உள்ளூரப் புரியும் .என்ன இருந்தாலும் வள்ளி இரண்டாவது மனைவிதானே ?
அம்மாவுக்குத் தொடுப்பா இந்தக் கோவில் குருக்கள் வாசு அண்ணாவும் சும்மா இருப்பதில்லை .
தாமு ஜாதகத்தில குரு தோஷம் இருக்கிறதால ஷஷ்டி அன்னைக்கு ஒரு சந்தனக்காப்புப் போட்ட நல்லதுன்னு அம்மாவிடம் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டார்.

அம்மா திருச்சி போயிருக்கிறாள்.நெருங்கிய சொந்ததின் தவிர்க்க முடியாதவர் திருமணம் விஷேசம் .போனவாரமே போக வர ரிசர்வ் பண்ணி ரயில் டிக்கெட்டைக் கூரியர்ல அனுப்பி விட்டார்கள் .ஆனால் அம்மாவுக்கு மனசுபூராவும் இங்கதான் இருக்கும் என்று தாமுவுக்குத் தெரியும் .
அம்மாவும் பாவம் என்று சில சமயம் தாமு வருத்தப்படுவான் .அவளுக்கும் ஒத்தாசைக்கு ஒருத்தி இருந்தா நல்லாத்தானே இருக்கும் .தனக்கு வேண்டும் என்றால்தானே கஷ்டம் என்று சமாதானம் சொல்லி அவனுக்குள் சிரித்துக்கொள்வான்.

5.35 கிளம்பிவிட்டான் .

கோவில் அடுத்தத் தெருதான் .
சாலயில் வாகனப் போக்குவரத்து இன்னும் பெரிதாய் தொடங்கவில்லை .
மெயின் ரோடு வந்தபோது அக்கம் பக்கம் உள்ள டீக்கடைகள் விழித்து விட்டது.
கடைகளில் காலையில் ஏதோ சினிமாபாட்டு உற்சாகமாகச் சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்தது .
காலையில தெய்வ சங்கீதம் போடாம இப்படிக் குத்துப் பாட்டுப் போடுகிறார்களே என்று நினைத்த தாமு மனதில் கூடவே, அவர்களுக்கு என்ன வந்தது தெய்வப்பாட்டுப் போடறதுக்கு ? அவர்கள் ஜாதகம் ஒருவேளை நல்லா இருக்கலாம் என்று தனக்குத்தானே தோஷம். அவர்கள் என்ன செய்வார்கள் என்று கூடவே நினைத்து நொந்து கொண்டான்.

பாவம் அவன் கவலை அவனுக்கு !

மெயின் கடந்து கோவில் வீதித் திரும்போது லேசாய் இருட்டான இடத்தில் காத்து இருந்தது போல யாரோ ஒரு தள்ளாத வயதுக்காரர் கை நீட்டி மறித்தார் .
ஆனால் தாமு அவரைத் தவிர்க்க ,ஒதுங்கிக் கடந்து வந்தான்.
லிப்ட் கேட்கிறார் போல !
நாமதான் இந்தத் தெரு தாண்டிப் போவதில்லையே என்று சமாதானம் மனம் சொல்லினாலும் வண்டியின் சைடு மிர்ரரில் அவர் பரிதாபமாக நின்று கொண்டு இருப்பதைப் பார்த்தான் .
கோவில் வந்து விட்டது .

சஷ்டி என்பதால் கோவிலில் ஜனம் நிறைந்து இருந்தது .
ஓம் என்று பெரிய கரு நீலத்தில் திரை போட்டு இருந்தது . அலங்காரத்தின் போது மறைக்கப் பயன்படுத்தும் திரை .
உள்ளே கர்பக்கிரகம் மறைத்து இன்னொரு ஒரு சின்னத் திரை இருக்கும் .
சந்தனக்காப்பு யார் சாற்றுகிறார்களோ அந்த உபயதாரர் வந்த பின்தான் அந்தத் திரையும் விலக்கி சுவாமியின் கண் வரைந்துத் திறப்புச் செய்வார்கள் .திறப்புச் செய்த சுவாமியின் கண் பார்வை படுவதால் தோசமெல்லாம் விலகிப்போவதென்பது ஐதீகம் .

நேரம் 5.40

வாசு அண்ணாவின் அசிடெண்ட் மடப்பள்ளியிலிருந்து அவர் பொங்கள் பானைத் தூக்கிக்கொண்டு வந்தவர் அடையாளம் கண்டு கொண்டு ,என்ன அண்ணா இவ்வளவு லேட் ? அண்ணா உள்ளதான் இருக்கா என்று சொல்லிக்கொண்டு திரை விலக்கி உள்ளே போனார் .
அவர் உள்ளே போகவும் உள்ளிருந்து யாருடைய செல் போனோ ஒலிக்கவும் சரியாக இருந்தது .

உள்ளிருந்து பதஷ்டமாய் வாசு அண்ணா குரல் கேட்டது .
திரை விலக்கிப் பேசிக்கொண்டே வெளியே ஏறக்குறைய ஓடிவந்த வாசு அண்ணா,கூடவே அண்ணாவின் அசிஷ்டெண்ட் வெளியே ஓடிப்போய் ஸ்கூட்டரை எடுத்துக்கொடுத்து விட்டு அங்கேயே நின்றான்.

கவனித்தவர்கள் எதுவும் புரியாமல் அண்ணாவின் அசிடெண்டை நோக்கிப் கோவிலுக்கு வெளியே தொடர்ந்து போனார்கள் .
என்னாச்சு என்று ஒருவர்கேட்ட போது ,
அண்ணாவின் தந்தை கோவிலுக்கு வரும்போது யாரோ வண்டிக்காரர் இடித்து விட்டாராம் . பக்கத்தில் இருக்கவா போன் பண்ணியிருக்காங்க அதான் அண்ணா போகிறார் என்றான் .

மணி 5.50

நேரம் கடந்து கொண்டிருந்தது.
கோவில் வாசலில் சிலர் மட்டும் காத்து இருக்க அவர்களோடு தாமுவும் வாசுதேவன் குருக்கள் வருகைக்காகக் காத்து இருந்தான் .

உள்ளே அற்புதமாக அலங்காரத் தோரணையில், கண் திறக்கப்படாத வள்ளி முருகன் திரைகளைத் தாண்டி தன் அகக்கண்ணால் தாமோதரனைப் பார்த்து, தன் இதழோரம் மெல்லிய புன்னகைப் புரிந்துகொண்டு இருந்தார் .

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (24-May-17, 8:22 pm)
சேர்த்தது : krishnamoorthys
பார்வை : 630

மேலே