தமிழே தயை புரிவாய் - பகுதி 2

1969-ஏப்ரல், மதியம் உணவு இடைவேளை...
இடைவேளைக்குப் பின் S.S.L.C. தமிழ் பொதுத் தேர்வின் இரண்டாம் தாள்..
AR என்னை அழைத்து "வரையா கொஞ்சம் தமிழ் இலக்கணம் பார்க்கலாம்" என்றான்... பள்ளியின் பரிசோதனைச் சாலை அருகில் ஒரு படிக்கட்டில் அமர்ந்தோம்... (இந்த சரித்திரப் புகழ் வாய்ந்த இடத்தை சமீபத்தில், அதாவது 45 வருடங்கள் பின், தரிசித்தபோது அருகிலிருந்தவர்களுக்கு நினைவு கூர்ந்தேன். நாங்கள் பள்ளிக்குச் செய்த ஒரு உதவிப் பணிக்காக எங்களில் சிலரை பாராட்ட அழைத்திருந்தனர்)

விஷயத்துக்கு வருவோம்..

அமர்ந்த உடன் AR பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தான்... "30 கேள்விகளில் தமிழ் இலக்கணம்.." புத்தகத்தைப் பிரித்தோம்.. முதல் பக்கம் படித்து முடிக்கையில் ஒன்றும் புரியாமல் விழிக்க, நமக்கு இனிமேலா இந்த இலக்கணம் மண்டையில் ஏறப் போகிறது என்று மூடி வைத்தோம்...

பரீட்ச்சைக்கு நேரமாக, போய் அமர்ந்தால் கேள்வி கேட்டவர் மிகவும் இலக்கணப் பிரியர் போல... தமிழ் இலக்கணங்களின் இண்டு இடுக்கெல்லாம் நுழைந்து கேள்விகள்... ஓன்றும் புரியாமல் தவிக்க ஒரு விதக் 'கருப்புவெளி' (Blackout) உருவாகியது.... மெல்லத் திரும்பி AR-ஐப் பார்க்க, நான்கு பெஞ்சு பின்னால் அமர்ந்திருந்த அவன் முகத்திலும் அதே கலவரம்...

மற்ற பொதுக் கேள்விகள் எழுதவேண்டிய மனக் குறிப்புகளும் மாயமாய் மறைந்தன... மெல்ல சுதாரித்து அரைமணி கழித்து அந்த கட்டுரையை (30 மதிப்பெண்) எழுதத் துவங்கினேன்... எல்லாப் பழ மொழிகளும் மேற்கோள்களும் என்னை விட்டு அகன்று விட்டன... நான் தினம் கேட்கும் தமிழ் திரைப் படப் பாடல்கள் கைகொடுக்க, ஒவ்வொரு வரியும் ஒரு பாடல் வரியில் ஆரம்பமாகும்படி கட்டுரை அமைத்தேன்.. AR கதி என்னவென்று தெரியவில்லை... பரீட்சை முடிந்தவுடன் மிகச் சோகமாக இருந்தான்..

ஆனால் இருவரும் எப்படியோ தமிழில் தேறிவிட்டோம்... ஆங்கிலத்தில் 97/100 வாங்கிய AR தமிழில் 54.. மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பு அவனுக்கு நழுவியது... அத்துடன் தமிழுக்கு முழுக்கு போட்டுவிட்டு அவன் French-க்கு மாறிவிட்டான்... இயற்பியலில் Phd பெற்று குழந்தைகளுக்கு (High school) கற்பித்தல் ஓர் அறப்பணியாகச் செய்து ஓய்வு பெற்றவன்... (கணிதம், இயற்பியலில் பெரிய அறிவாளி)

1969-ல் ஒன்றாகப் படித்தவர்களுக்கு இப்போது ஒரு குழு உண்டு.. சமீபத்தில் AR என்னைக் கேட்கிறான் "இப்பொழுது நீ தமிழில் நிறைய எழுதுகிறாயே, எங்களுக்குத் தமிழில் எழுதுவது பற்றி சிறு சிறு கட்டுரை எழுதினால் என்ன...?"

தமிழே தயை புரிவாய்.....!

---- முரளி

எழுதியவர் : முரளி (25-May-17, 9:53 am)
சேர்த்தது : முரளி
பார்வை : 280

சிறந்த கட்டுரைகள்

மேலே